கல்லூரியில் படித்த காலத்தில் எனக்கு இருந்த ஒரே பெரிய பொழுது போக்கு தமிழ் சினிமாதான். அதுவும் செமஸ்டர் விடுமுறையில் தினமும் இரண்டு படங்கள் பார்த்த அனுபவம் எல்லாம் உண்டு... கல்லூரி திறந்து விட்டால் கேட்கவே வேண்டாம் ,, திங்கள் கிழமை ஆனால் போதும் , என் நண்பர்கள் எல்லோரும் அருப்புகோட்டை பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி விடுவார்கள் காலையிலேயே....
எங்கள் கல்லூரியில் ஒரு வழக்கம் உண்டு வார இறுதியில் இரண்டு நாள் விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்பதற்காய் வெள்ளிகிழமை எங்களுக்கு ஏதேனும் ஒரு அசைன்மென்ட் கொடுத்து விடுவார்கள்.. அதை நாங்கள் திங்கள் கிழமை சுப்மிட் செய்ய வேண்டும்....
திங்கள் கிழமை காலையில் பேருந்து நிலையத்தில் கூடும் அந்த கூட்டம் அசைன்மென்ட் எழுதாத கூட்டம்.. அந்த கூட்டத்தில் எப்பொழுதும் நான் இருப்பேன்.... அசைன்மென்ட் எழுதாமல் கல்லூரிக்குபோனால் எப்படியும் ஆப்சென்ட்தான் போடுவார்கள், எதற்கு கல்லூரிக்கு பொய் கொண்டு என்று முடிவு செய்து அனைவரும் சினிமாவிற்கு சென்று விடுவோம்.. வார வாரம் திங்கள் கிழமை காலையில் ஒன்று மதியம் ஒன்று என்று இரண்டு படம் பார்த்து விடுவோம்...
அதேபோல்தான் வெள்ளி கிழமை வந்து விட்டாலே எங்களுக்கு ஒரு அசதி வந்து விடும் , மூன்று நாள் தொடர்ந்து கல்லூரிக்கு சென்ற அசதி... அன்றும் சினிமாதான்... இப்படி நண்பர்களுடன் மட்டும் வாரா வாராம் நான்கு சினிமாக்கள் பார்த்த காலம் அது... நம்ம தமிழ் சினிமாவ பத்தி உங்களுக்கே தெரியும் வருசத்துக்கே நாலு நல்ல படம்தான் வரும் , இதுல நாங்க வாரத்துக்கு நாலு படம் பாத்தா , அதுல பெரும்பாலும் மொக்க படமாதான் இருக்கும் ...
அப்படி நான் பாத்த மொக்க படத்துல என்னால இன்னமும் மறக்க முடியாத சில படங்கள் பத்திதான் இந்த பதிவு..
1. ஆஞ்சநேயா :
நான் கல்லூரி காலத்துல (இப்பயும்தான்) தலையோட தீவிர விசிறி ... (முந்தி பாயிண்ட் அஞ்சுல சுத்துன விசிறி , இப்ப ரெண்டுலதான் சுத்திக்கிட்டு இருக்கேன் , காரணம் நிறைய ஆணி புடுங்க வேண்டி இருக்கு , தலையும் முந்தி மாதிரி நெறைய படங்கள நடிக்கிறது இல்லை)
வில்லன் படம் முடிஞ்சி அடுத்த வருஷம் தலைக்கு வந்த ஒரே ஒரு படம்... விஜயகாந்த வச்சே வல்லரசுன்னு ஒரு ஹிட் படம் கொடுத்த மகாராஜன் இயக்குன படம் , எங்களோட பரம எதிரி விஜயோட திருமலையோட மோதுற படம் அப்படி இப்படின்னு படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு...படம் தீபாவளிக்கு ரிலீஸ்... மொத நாள் மொத ஷோ போய் உக்காந்தாச்சி....
ஆனா படம் ஆரம்பிச்ச பத்தாவது நிமிசமே தெரிஞ்சிருச்சி படம் அவ்ளோவ்தான்னு... அதுல தலையும் மீரா அக்காவும் பண்ணுற காமெடிய மிஞ்ச இனிமே எந்த காமெடியானாலும் முடியாது... சும்மா தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிது.... தல உனக்கு இதெல்லாம் தேவையான்னு தோணுச்சி...
இடைவேளைக்கு முன்னாடி புல்லா இருந்த தியேட்டர் , இன்டர்வெல்லுக்கு அப்புறம் காத்தாடுச்சி.... நான் கடைசி வரைக்கும் எனக்கு முன்னாடி உக்காந்து இருந்த ஒரு சூப்பர் பிகருக்காக மட்டும்தான் உக்காந்து இருந்தேன்... எனக்கு அந்த படத்தோட கத இன்னமும் தெரியாது , யாராவது தெரிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க....
2. புதிய கீதை:
நான் எவ்வளவோ கெஞ்சியும் என் நண்பன் கேக்காம என்ன வலுகட்டாயமா பாக்க வச்ச படம் இது .. அவன் ஒரு விஜய் ரசிகன் ... ஊரே விஜய் படத்த காறி துப்புனாலும் இவன் மட்டும் பயங்கரமா பாராட்டுவான்... இந்த படத்த பாத்துட்டு இதுல விஜய்க்கு கொடுத்திருக்கிற கேரக்டர் மாதிரி இதுவரைக்கும் எந்த ஹீரோவுக்கும் அமைந்ததில்லை என்று சொன்னான்...
அதற்க்கு முன்னாடிதான் டும் டும் டும் என்று ஒரு படம் , ஊரே நல்லா இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சி...அவன் மட்டும்தான் படம் நல்லா இருக்குடா உனக்கு கண்டிப்பா பிடிக்கும் என்று சொல்லி என்னை பார்க்க வைத்தான்... எனக்கும் படம் பிடித்து இருந்தது... அதனால்தான் அவன் சொல்லியவுடன் நம்பி அந்த மட்டமான படத்துக்கு போனேன்...
படம் ஆரம்பிச்சதுல இருந்து ரசிக்கிற மாதிரி ஒரு ஸீன் இப்ப வரும் அடுத்து வரும்னு எதிர்பாத்துகிட்டே இருந்தேன் ... கிரகம் அப்படி ஏதும் அந்த டைரக்டர் யோசிக்கவே இல்லை ... நான் ரசிச்ச ஒரே ஒரு ஸீன் கடைசியில சுபம்னு போடுற ஸீன்தான்...
அந்த படத்துல விஜய் அடிக்கடி ஒரு வசனம் பேசுவாரு "தீ சாரதி"ன்னு.... மொத ரெண்டு தடவ அந்த வசனத்த அவர் பேசுனப்ப பொறுத்துகிட்டேன்... மூணாவது தடவ அவர் அந்த வசனத்த பேசும்போது கண்டிப்பா நாம திருப்பி ஒரு வசனத்த பேசணும்னு நெனசிகிட்டு இருந்தேன்...
அவரு அந்த வசனத்த அடுத்த தடவ பேசும்போது நான் என்ன சொல்லனும்னு நெனச்சேனோ அதே வசனத்த வேற ஒருத்தன் சத்தமா கத்துனான்... அது வரைக்கும் சலனமே இல்லாம இறுக்கமா இருந்த தியேட்டர்ல முதல் முறையா சிரிப்பலை ...
(அது என்ன வசனம்னு இங்க சொல்ல முடியாது ரொம்ப அசிங்கமான வார்த்தை வேணும்னா ஒரு சின்ன க்ளு தரேன் அந்த வார்த்த "பு" ல ஆரம்பிச்சி "தீ" ல முடியும்... )..
படம் முடிஞ்சி வெளிய வந்தோம் .. ஒரு விஜய் ரசிகன் தியேட்டர்ல இருந்த விஜய் கட் அவுட் மேல கால வச்சி கிட்டு இனிமே இப்படி பட்ட படத்துல நடிப்பியா? நடிப்பியான்னு கேட்டு கிட்டே ஷூவால மிதிச்சிக்கிட்டு இருந்தான் ... பாவம் வில்லு படம் வந்தப்ப அவன் என்ன பண்ணுனான்னு தெரியல ... கட் அவுட் மேல ஏறி விழுந்து தற்கொலை பண்ணிருப்பானோ?
3. கஜேந்திரா
நம்ம கேப்டனோட படம் .... பாபாவ படுக்க வச்சி , ஆளவந்தான அந்தரத்துல தொங்க விட்ட சுரேஷ் கிருஷ்ணா இயக்கம்... படம் இப்படிதான் இருக்கும்னு தெரிஞ்சேதான் போனேன்.... மூணு மணி நேரம் மூச்சு தெனற தெனற அடிச்சானுக.... அந்த படம் பாத்ததுனாலதான் சுதேசி , எங்கள் ஆசான் , தர்மா, உளவுத்துறை, மரியாதை போன்ற மரண மொக்கைகளிடம் இருந்து தப்பிக்க முடிந்தது.. பின்ன கஜேந்திரா பாத்த பின்னாடியும் கேப்டன் படம் பாக்குற தைரியம் அவர தவிர வேற யாருக்கு இருக்கு?..
4. மாயாவி
வரிசையா நெறைய ஹிட்டுகளுக்கு அப்புறம்(நந்தா , மௌனம் பேசியதே,பிதாமகன், காக்க காக்க) சூரியா நடிச்சி வெளி வந்த படம் , அதுல சூர்யா தலையோட ரசிகரா வேற வராருன்னு கேள்விபட்டேன்... விடுவேனா மொத நாள் மொத ஷோ.... படத்துல பெரிய கொடுமை ஜோதிகா சொந்த கொரலுல பேசி இருப்பாங்க... உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகள படுத்துறாங்க அப்படின்னு வடிவேலு சொல்லுறது இந்த படத்துல சூரியாவுக்கு பொருந்தும்.... இந்த படத்த எத நம்பி எடுத்தாங்க? எப்படி யோசிச்சும் எனக்கு கடைசி வர புரியவே இல்லை... சூர்யா ஜோதிகா முப்பது நாள் சேர்ந்து இருந்து தங்கள் காதல வளர்த்துக்கொள்ள உதவி பண்ணுனத தவிர இந்த படத்துல சொல்லிக்கிற மாதிரி எதுவுமே கெடையாது...
5. அருள்
எவனா இருந்தாலும் வெட்டுவேன்.. இந்த படத்துல விக்ரம் பேசுற பஞ்ச்...அதோட அர்த்தம் படம் பாக்க எவன் வந்தாலும் வெட்டுவோம்கிரதுதான்னு எனக்கு அந்த படத்த பாத்த பின்னாடிதான் தெரிஞ்சது... இதுவும் மொத நாள் மொத ஷோ... உச்சத்துல இருந்த விக்கிரம கீழ தள்ளி விட்ட பெருமை இந்த படத்துக்கு உண்டு.. அப்ப விழுந்த விக்ரம்தான் பாவம் இன்னமும் எழுந்திருக்க முடியாம கஷ்டப்படுராறு.... கந்தசாமிக்கெல்லாம் அண்ணன் இந்த அருள்...
6. குசேலன்
தலைவர் படம் அப்படின்னு நம்பி போய் பட பாத்து ஏமாந்த கோடான கோடி ரசிக பெருமக்களில் நானும் ஒருவன்... என்னத்த சொல்ல தலைவர் கடைசி காட்சியில பேசுற வசனத்த தவிர ஒன்னும் கெடையாது படத்துல... அந்த வசனத்தையும் நான் பாக்கள தூங்கிட்டேன் அப்புறம் கலைஞர் டிவியில போடும் போதுதான் பாத்தேன்....
இவ்வளவு படம் பாத்த பின்னாடியும் நாங்க திருந்தல... அதுக்கு அப்புறம் சுட்டபழம், பெருமாள், வில்லு, கந்தசாமி ஆதவன் வேட்டைக்காரன் , போன வாரம் பாத்த பையா வரைக்கும் இந்த லிஸ்ட் போய்கிட்டேதான் இருக்கும்... இந்த பதிவு ரொம்ப பெருசா இருக்குன்னு நெனசீங்கனா அதுக்கு நான் காரணம் கெடையாது ,,,, இவ்வளவு மொக்க படம் எடுத்த இயக்குனர்கள்தான் காரணம்....
(எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை ... கமல் படம் எல்லா படங்களையும் தியேட்டர்ல போய் பாத்துடுவேன்... அவர் படத்துல பாதி படம் பத்து நாள் கூட ஓடாது... ஆனா எனக்கு இதுவரைக்கும் அவர் நடிச்ச எந்த படமும் மொக்கையாவே தெரியல ... மும்பை எக்ஸ்பிரஸ் கூட ரெண்டுவாட்டி பாத்தேன்... ஏன் எனக்கு உலக சினிமா ரசனை ரொம்ப இருக்கோ?)