Followers

Copyright

QRCode

Monday, April 29, 2013

தன்னை தானே செதுக்கியவன்- Ajith Birthday Special

 (முதலில் ஒரே பதிவாக எழுதி முடித்து விடலாம் என்றுதான் நினைத்தேன் , ஆனால் உட்கார்ந்து  எழுத எழுத நிறைய விஷயங்கள் சொல்ல வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்ததால் அஜித்தின் சினிமா வாழ்க்கை முழுவதையும் ஒரு மினி கட்டுரையாக இரண்டு மூன்று பதிவாக எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் ,தல ரசிகர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்  )


முதலில் என் மனம் கவர்ந்த நாயகன் தல அஜீத் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்துக்களை சொல்லிவிடலாம் ... அஜீத் அவர்கள் என்னை பொறுத்தவரை  சினிமா துறையில் ஒரு அதிசயம் , காரணம் அவர் வாழ்க்கையில் அதுவாகவே நடந்த அல்லது அவராகவே நடத்திய எல்லாமுமே ஒரு அதிசயம்தான்... ஒழுங்காக தமிழ் பேச தெரியாத, நகைசுவையாக நடிக்க தெரியாத , சரியாக ஆட தெரியாத , உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்காத , சினிமாவில் எந்த பின்புலமும் ,அடைக்கலமும் இல்லாத , தன் ரசிகர்களை ஏமாற்ற தெரியாத ஒரு நடிகனுக்கு இவை எல்லாம் இருக்கும் அல்லது இருப்பது போல காட்டி கொள்ளும் நடிகர்கள் நிறைந்த ஒரு திரையுலகில் அவர்களால் நினைத்து பார்க்க முடியாத அளவு ரசிகர்கள் கூட்டம் நிரம்பி இருப்பதே ஒரு அதிசயம்தானே ... ஒரு நடிகன் மேடையில் என் நெஞ்சில் குடியிருக்கும் , என்னை வாழவைத்து கொண்டிருக்கும் என்பது போன்ற ரசிகர்களை குளிர்விக்கும் வாக்கியங்களை ஒப்பித்தால்  மட்டுமே இங்கு கை தட்டல் கிடைக்கும்  , ஆனால் ஒருவர்  மேடையில் தோன்றி விட்டாலே கை தட்டலும் விசில் சத்தமும் விண்ணை பிளக்கும் அளவு இருக்கிறது என்றாள் அந்த மேடையில் இருவர் இருந்தால் மட்டுமே சாத்தியம் ஒருவர் ரஜினி இன்னொருவர் தல... தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் ரஜினிக்கு இப்படியான ரசிகர்கள் இல்லாமல் போனால்தான் அதிசயம் , ஆனால் தான் வாழ்க்கையில் இதுவரை தொடர்ந்து இரண்டு பெரிய ஹிட் (வாலி , அமர்க்களம் தவிர) கொடுக்காத ஆனால் தொடர்ந்து ஐந்து படங்களை கூட தோல்வியாக கொடுத்த அஜித்துக்கு இப்படியான ரசிகர்கள் இருப்பது  அதிசயம்தான் .. 


இன்று தன் அப்பா ,அம்மா , அண்ணன் என்று யாராவது சினிமாவில் இருந்ததை மட்டுமே காரணமாக கொண்டு சினிமாவுக்குள் நுழைந்த  சாதாரண ஹீரோ கூட தவறாமல் சொல்லும் ஒரு விஷயம் நான் நடிக்க வருவதற்க்கு முன்னரே சினிமாவை காதலித்தேன் , சினிமாவுக்காக என் உயிரையும் கொடுப்பேன் , எனக்கு எல்லாமும் இந்த சினிமாதான், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதர்க்காக சிறு வயது முதலே கஷ்டப்பட்டேன் என்பதுதான் , ஒரு சில நடிகர்கள் விஷயத்தில் இது உண்மையாக இருந்தாலும் பெரும்பாலும் ஒரு விளம்பரத்துக்காகவே இது போன்ற வசனங்கள் எல்லாம் பலரும் பேசுவார்கள்.. சினிமாவில் அவர்களின் இருப்பை தக்க வைத்து கொள்ள அப்படியான விளம்பரங்களும் கண்டிப்பாக தேவை , ஆனால் தல ஒருவர்தான் இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் , தன் லட்சியமான ரேஸில் கலந்து கொள்ள காசு சம்பாதிக்க மட்டுமே தான் சினிமாவில் நுழைந்ததாக வெளிப்படையாக கூறினார் அதுவும் தான் நடிக்க வந்த புதியதிலேயே... படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு , மெக்கானிக்காக வாழ்க்கையை தொடங்கி , ரேஸில் மீது இருந்த வெறியின் காரணமாக காசு சம்பாதிக்க சொந்தமாக தொழில் தொடங்கினார் , ஆனால் அவரை வெறும் தொழிலதிபராக மட்டுமே உருவாக்க விதி விரும்பவில்லை , ஆரம்பித்த தொழில் அனைத்தும் நஷ்டம் , கையில் சுத்தமாக காசில்லாத சமயத்தில் ரேஸிக்கு தேவையான காசு சம்பாதிக்க அவரிடம் இருந்த ஒரே மூலதனம் அவரின் அழகு மட்டுமே , அதை நம்பி அவர் மாடெலிங்கில் குதித்ததுதான் அவரின் சினிமா வாழ்க்கைக்கான முதல் புள்ளி...


அவரின் முதல் திரையுலக பிரவேசம் ஆந்திர தேசத்தில் , அவரை திரையுலகுக்கு கொண்டு வந்த பெருமை லக்ஷ்மி ப்ரொடக்ஷன் பூர்ண சந்திர  ராவ் அவர்களியே சேரும் , ஆனால் எதிர்பாராத விதமாக அந்த படம் தொடங்குவதற்க்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக அதன் இயக்குனர் இறந்து விட படம் ஆரம்பித்த வேகத்திலேயே நின்று விட்டது.. ஆனால் இதெல்லாம் தன்னை பெரியதாக பாதிக்கவில்லை என்றுதான் அஜீத் சொல்கிறார் ,  சினிமா இல்லையென்றால் இன்னொரு துறை என்ற அளவிலேயே அவரின்  ஈடுபாடு சினிமாவின் மேல் இருந்தது... ஆனால் விதி அவரை விடுவதாக இல்லை , அடுத்த சில மாதங்களிலேயே அதே தெலுங்கு சினிமாவில் இன்னொரு வாய்ப்பு அவரை தேடி வந்தது , அது அவரின் முதல் படம் பிரேம புஸ்தகம் , அதுதான் தல கடைசியாக நடித்த நேரடி தெலுங்கு படம் , முதல் படம் வெளிவந்தாலும் கையில் காசு போதுமான அளவு தேரவில்லை , காசுக்காக அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார் , அப்படியான தேடலில் இயக்குனர் செல்வாவின்  கண்ணில் பட அமராவதி வாய்ப்பு கிடைத்தது , பிரேம புஸ்தகத்தில் நடக்காத ஒரு விஷயம் அமராவதியில் நடந்தது , படத்தின் பாடல்கள்  பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டடிக்க , அதன் மூலம்  படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைக்க   அப்படியே அதன் ஹீரோவான அஜீத்திற்கும் வெகு ஜன அறிமுகம் கிடைத்தது ... இவன் பெயர் அஜீத் என்று தெரியாமலேயே இவரின் முகம் மட்டும் சினிமா ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டிருந்தது அந்த படத்தின் பாடல்கள் மூலமாய் ... அடுத்ததாக பாசமலர்கள் என்ற படத்தில் காசுக்காக ஒரு சின்ன ரோலில் நடித்தார் ..தொடர்ந்து  மூன்று  படங்களில் நடித்ததும் கையில் கொஞ்சம் காசு புரள ஆரம்பிக்க அவரின் கனவான ரேஸுக்கு திரும்பி விட்டார்...

இம்முறை அவர் வாழ்க்கையில் விதி வேறுமாதிரியாக விளையாடியது , ரேஸில் அவர் பெரிய விபத்தில் சிக்கி கொள்ள முதுகெலும்பு ஒடிந்து படுத்த படுக்கையாக அடுத்த ஒரு வருடம் வீட்டில் கிடந்தார் , உடம்பில் தலையை தவிர வேறு எதையும் அசைக்க முடியாத நிலமை , ஆனால் அந்த விபத்துதான் அவரின் மனநிலையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது, ஒரு பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருந்தார் ... அந்த நாட்கள் என் வாழக்கையில் சோதனையான காலம் , நான் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கபட்டிருந்த ஆரம்பத்தில் சினிமா துறையில் இருந்து சிலர் என்னை பார்த்து விட்டு சென்றனர் , ஒரு சில பத்திரிக்கைகளில் இது சம்பந்தமான செய்திகளும் வந்தது , ஆனால் நாள் ஆக ஆக எல்லாரும் என்னை மொத்தமாக மறந்து விட்டனர் ... சினிமாவில் இருந்து நான் முற்றிலும்  வெளியேற்றபட்டதை போல ஒரு உணர்வு.. அந்த தனிமைதான் என்னுள் சினிமாவின் மீது ஒரு வெறியை உருவாக்கியது , இந்த சினிமாவில் நாமும் சாதிக்க வேண்டும் என்ற வெறி என்னுள் உருவாகியது அந்த காலகட்டத்தில்தான்... தான் அதிகமாக நேசித்த ரேஸை தூக்கி எரிந்து விட்டு சினிமாவை தன் புதிய லட்சியமாக அஜீத் மாற்றி கொண்டார் என்றாள் அந்த காலகட்டத்தில் அவர் எவ்வளவு மன போராட்டங்களை சந்தித்திருப்பார்? இன்று அவரின் சக  ஹீரோக்களுக்கு இல்லாத ஒரு மன பக்குவம் அவருக்கு அமைய பெற்றிருக்கிறது என்றாள் அதற்க்கு காரணம் இப்படியாக அவர் தாண்டி வந்த பல போராட்டங்கள்தான்... சரி இனி எல்லாம் சினிமாதான் என்று முடிவெடுத்த தல அந்த சினிமாவில் எப்படி தன்னை தானே செதுக்கி இன்று இருக்கும் விஸ்வரூப நிலமைக்கு வளர்ந்தார்? அடுத்த பதிவில் சந்திப்போம்....                   

LinkWithin

Related Posts with Thumbnails