Followers

Copyright

QRCode

Thursday, January 14, 2016

ஜல்லிக்கட்டும் சாராயமும்


தமிழ்நாட்டில் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு ஜல்லிக்கட்டுதான் . காளைமாட்டை காப்பாற்றுகிறோம் பேர்வழி என்று PETA என்ற அமைப்பு களமிறங்க அதற்க்கு உச்சநீதிமன்றமும் துணை நிற்க இந்த வருடமும் ஜல்லிகட்டுக்கு தடை. பல நூறு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது , இவர்கள் சொல்வது போல ஜல்லிகட்டால் காளை இனத்துக்கு ஆபத்து என்பது உண்மையாயிருந்தால் இந்நேரம் காளை மாடுகள் எல்லாம் டைனோசர் காலத்திலேயே அழிந்திருக்க வேண்டும். ஆனால் யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது. இனபெருக்கம் செய்வதை தவிர வேறு ஒன்றுக்கும் உதவாத காளை மாடுகள் இன்னமும் அழியாமல் இருக்க ஒருவகையில் இந்த ஜல்லிக்கட்டும் காரணம். தென்தமிழகத்தில் காளைமாடுகள் ஜல்லிக்கட்டுக்க மட்டுமே வளர்க்கப்பட்டு வருகின்றன .  ஒரு காளை மாடு வளர்க்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும் , எவ்வளவு நேரம் அதற்காக அந்த குடும்பம் செலவழிக்க வேண்டும் என்பது அதை வளர்த்து பார்த்தால்தான் தெரியும் . இவ்வளவு செலவு , கால விரையம் இதையெல்லாம் மீறி காளை மாடுகள் வளர்க்கபடுகின்றன என்றால் இரண்டே காரணம்தான் . ஒன்று ரேக்ளா ரேஸ் , இன்னொன்று ஜல்லிக்கட்டு. எனக்கு தெரிந்து உலகத்திலேயே பணத்துக்கு முக்கியத்துவம் தராத ஆபத்தான விளையாட்டுக்கள் என்றால் இவை இரண்டுமாகத்தான் இருக்கும். எங்கெல்லாம் ஆபத்துகள் அதிகமாக இருக்குமோ அங்கெல்லாம் பணமும் அதிகமாக கிடைக்கும். ஆனால் பணம் இல்லாமல் முழுக்க முழுக்க வீரத்துக்கும் , இன கௌரவத்துக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் பாரம்பரியமான விளையாட்டுகள் இவைதான். காளை மாட்டை காரணம் காட்டி இந்த விளையாட்டுகளை முடக்க பார்பதற்கு பின்னால் ஏதோ பெரிய அரசியல் அல்லது வியாபார காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். எனக்கு தெரிந்து பால் மார்கெட்டில் கை வைக்க ஏதோ சூழ்ச்சி நடப்பதாகவே தெரிகிறது . இனி ஜல்லிகட்டே நடக்காது என்ற நிலையை கொண்டு வந்து , காளை மாட்டு வளர்ப்பை கட்டுபடுத்தி அதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப ஏதோ புதிய விஷயத்தை வெளிநாட்டில் இருந்து இறக்கி நம்மை கேனையனாக்க நடக்கும் முயற்சியாகவே இது தெரிகிறது .இது கண்டிப்பாக நம் நீதி துறைக்கும் தெரிந்திருக்கும் ஆனாலும் சட்டம் என்று ஒன்றுக்கும் உதவாத ஒரு விசயத்துக்கு அவர்கள் மரியாதை கொடுத்துதானே ஆகவேண்டும். நாடே வேண்டாம் என்று எதிர்த்த ஒரு அயோக்கியனுக்கு சிறுவன் என்று உப்பு சப்பில்லாத காரணத்தை காட்டி விடுதலை கொடுக்கவும் , ஒரு மாநிலமே  வேண்டும் என்று போராடும் விசயத்துக்கு மிருகவதை என்று தடை செய்யவும் நம் இந்திய சட்ட அமைப்பால்தான் முடியும் . 

ஜல்லிக்கட்டை போலில்லாமல் வருஷம் முழுவதும் நம் தமிழகத்தில் எப்பொழுதும் பரபரப்பாக விவாதிக்கப்படும் எவர்கிரீன் விஷயம் மதுவிலக்கு.முதல் நாள் நைட்டு சரகடிச்சிட்டு குப்பற கவுந்திட்டு அடுத்த நாள் போதை தெளிந்தவுடன் இந்த நாடு போற போக்கே சரியில்லைப்பா , எங்க பாத்தாலும் சாரயகடைய தொறந்து வச்சி மக்களை குடிக்க வச்சி நாட்டை குட்டி சுவராக்குரானுகப்பா , என்று டாஸ்மாக் எதிர்ப்பு வசனம் பேசுவதுதான் இன்னைக்கு தமிழ்நாட்டுல பேஷன். எனக்கு தெரிஞ்சி எல்லா பயபுள்ளைகளும் டாஸ்மாக்க மூடனும் , மதுவை ஒழிக்கணும்னுதான் பேசிகிட்டு திரியுறானுக , சாராயத்துக்கு ஆதரவா ஒரு குரல் கூட நம்ம தமிழ்நாட்டுல கேக்குறதில்லை , ஆனாலும் ஒவ்வொரு பண்டிகையிளையும் டாஸ்மாக் வசூல் அவதார் வசூலை மிஞ்சிக்கிட்டுதான் இருக்கு . இப்படி பொதுவுல மதுவிலக்கை பத்தி பேசுற பயபுள்ளைக மட்டும் குடிக்காம இருந்தாலே போதும் ஆட்டோமேட்டிக்கா வசூல் குறைஞ்சி மதுவிலக்கு தானா வந்திரும். அப்பறம் இந்த மதுவிலக்கை பத்தி பேசுற அல்லது போராடுற கட்சிகாரனுகளை கண்டாலே காண்டாகுது . டாஸ்மாக்கை மூடணும்னு பேசுற அரசியல்வாதிகளில் முக்காவாசி பேரு ஒருகாலத்துல கள்ள சாராயம் காச்சிகிட்டு கல்லாவை நிரப்புன  பயபுல்லைகதான். அவனுக பாதிபேரோட குறிக்கோளே  மறுபடியும் கள்ளசாராய மார்கெட்டை பிடிக்கனும்கிரதுதான். நாற்பது வயதை கடந்த கிராமத்துவாசிகளுக்கு தெரியும் கள்ள சாராயம் எவ்வளவு ஆபத்தான விஷயம் என்று . இன்று டாஸ்மாக் கடைகளை மூடினால் அதைவிட அதிக அளவில் மிக குறைந்த விலையில் எவனோ காய்ச்சி எவன் கல்லாவையோ நிரப்பும் கள்ள சாராய பாக்கெட்டுகள் புழக்கத்து வரும் . ஊழல் புரையோடிப்போன நம் அரசு அதிகாரிகளால் அதை கண்டிப்பா தடுக்க முடியாது. அந்த நிலைமை வந்தால் இப்பொழுது இருப்பதை விட நிலைமை இன்னும் மோசமாகும் . இப்பொழுது நூறு ரூபாய்க்கு கிடைக்கும் போதை இருபது ரூபாய்க்கு கிடைத்தால் என்னவாகும். நான் கண்டிப்பாக டாஸ்மாக் கலாச்சாரத்துக்கு பரிந்து பேசவில்லை . சாராயம் கண்டிப்பாக கட்டுபடுத்த பட வேண்டியதுதான். ஆனால் பணத்துக்காக எதுவேண்டுமானாலும் செய்யும் அரசியல்வாதிகளும் , வியாபாரிகளும் நிறைந்த  நம் சமூகத்தில் அரசாங்கமே நடத்தும் இந்த டாஸ்மாக் வியாபாரமே ஒரு கட்டுபாடாகத்தான் எனக்கு தெரிகிறது. முழுமையான மதுவிலக்கு சாத்தியபடுவது நாம் நம் பிள்ளைகளை எப்படி வளர்க்க போகிறோம் என்பதில்தான் இருக்கிறது. இன்னமும் நம் நாட்டில் ஊழல் உள்ளே நுழைய முடியாத ஒரே இடம் நம் குடும்பம்தான்.

LinkWithin

Related Posts with Thumbnails