Followers

Copyright

QRCode

Wednesday, February 29, 2012

என்னை பாதித்த பிரபலங்கள் - கமல்

வணக்கம் நண்பர்களே ரொம்ப நாட்களாகவே இப்படி ஒரு தொடர் இந்த வலைப்பூவில் எழுத வேண்டும் என்று ஆசை , இன்று ஆரம்பித்து விட்டேன். இனி வாரவாரம் ஏதாவது ஒரு பிரபலம் பற்றி அவர்களை பற்றிய என்னுடைய பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். முதல் வாரம் எனக்கு பிடித்த ஒரு சினிமா பிரபலத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் , ஆனால் இந்த தொடரில் சினிமா பிரபலங்கள் மட்டும் இல்லாமல் எனக்கு தெரிந்த எல்லா துறைகளிலும் இருக்கும் பிரபலங்களை பற்றியும் எழுத முயற்சிக்கிறேன் 



உலகநாயகனை பற்றி எழுதி பல நாட்களாகிவிட்டது. இன்று காலையில் என் நண்பனுக்கும் எனக்கும் ஒரு சின்ன வாக்குவாதம் நடந்தது கமலை பற்றி , கமல் தன கலைபயணத்தில் நிறைய விசயங்களை தவறவிட்டிருக்கிறார் , அவர் கொஞ்சம் முயன்றிருந்தால் ரஜினியை விட பெரிய வசூல் சக்கரவர்த்தியாக ஜொலித்திருக்க முடியும் என்று கூறினான். அதை கேட்டபொழுது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது , ஆனால் யோசித்து பார்த்த பொழுது அது உண்மைதானோ என்று தோன்றுகிறது , கமல் ஆரம்பம் முதலே கொஞ்சம் வித்தியாசமான நடிகனாகவே இருந்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் ஒரு சாக்லெட் பாயாக தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருந்தார் , இந்தியாவிலேயே அப்பொழுது அவரை போன்ற இளமையான அழகான அதே சமயம் நடிக்க தெரிந்த நடிகர் யாரும் கிடையாது , அந்த காலகட்டத்தில் அவரை பிடிக்காத இளம் பெண்களே கிடையாது , ஆனால் அன்றைய கமலை  ரசித்த அதே பெண்கள் இன்றைய கமலை அந்நியமாகவே பார்கிறார்கள். காரணம் உச்சத்தில் இருக்கும் போதே என்னுடைய பாதை இதுவல்ல என்று அவர் வேறு பாதையில் பயணிக்க தொடங்கியதுதான். 


அதே போல 8௦ களின் இறுதியில்  கமல் ஆக்சன் ரூட்டிலும் அதிரடியாக வெற்றிகளை குவித்தார் , சத்யா , விக்ரம் , சகலகலா வல்லவன் , அபூர்வ சகோதரர்கள் என்று அவர் நடித்த ஆக்சன் படங்கள் அனைத்தும் இன்றும் மக்களால் விரும்பபடகூடியவையாகவே இருக்கின்றன. மற்ற நடிகர்கள் போல ஆக்சன் கைகொடுத்ததும் அதே பாணியில் படங்கள் செய்யாமல் , ஆக்சன் ஹீரோவாக , வசூல் சக்ரவர்த்தியாக தன்னை நிரூபித்த அதே காலகட்டத்தில் அவர் குணா , புன்னகை மன்னன் , உன்னால் முடியும் தம்பி என்று வேறு பரிமாணத்திலும் பயணித்தார். அவர் செய்த நல்ல விசயமும் அதுதான் , அவர் செய்த தப்பான விசயமும் அதுதான் . ஆக்சன் ரூட்டில் மட்டும் அவர் பயணித்திருந்தால் நமக்கு குணா , மகாநதி போன்ற படங்கள் எதுவும் கிடைத்திருக்காது , ஆனால் அவர் இன்றைய ரஜினியை போல  இந்திய அளவில் ஒரு அசைக்கமுடியாத வசூல் மன்னனாக வலம் வந்துகொண்டிருப்பார்.  

இந்த இடத்தில்  எனக்கு ஒரு கேள்வி  எழுகிறது   ஒரு நடிகனின் வெற்றி தோல்வியை அவனின் மார்கெட் வேல்யூ மட்டுமே தீர்மானிக்கிறதா? இல்லை வேறு காரணிகள்  ஏதாவது இருக்கிறதா?  இந்த கேள்விக்கு ஒரு தீர்க்கமான பதிலை யாராலும் சொல்ல முடியாது. அது சினிமாவை பற்றிய அவரவரின் பார்வையை பொறுத்தது. சினிமா என்பது வெறும் வியாபாரம் மட்டுமே என்று எடுத்துகொண்டால் கமல் ஒரு முட்டாள் என்றுதான் நினைக்க தோன்றும் , ஆனால் சினிமாவை தொழிலாக நினைக்காமல் அந்த கால இலக்கியங்கள் , நாட்டுபுற பாடல்களை  போல நம் சமகால கலாச்சாரத்தின் குறியீடாக நம் பிற்கால சந்ததிக்கு நாம் விட்டு செல்லும் கலையாக பார்த்தால் கமல் என்ற கலைஞனின் சாதனை புரியும். 

சினிமா என்றாலே வில்லனை புரட்டி     எடுத்து  அவன் அம்மாவிடம் குடித்த பாலை கக்க வைக்கும் ஹீரோயிசம் , பழிக்கு பழி வாங்குதல் , நாட்டை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் "ஒன் மேன் ஆர்மி ஹீரோ"   என்று  சினிமா என்றால் இதுதான் என்ற பிம்பம்   நம்மையும் மீறி வலுக்கட்டாயமாக நம் மூளையில் திணிக்கப்பட்ட பொழுது மகாநதி , குணா போன்ற படங்கள் மூலம் இதுவும் சினிமாதான் என்று புரிய வைத்து கொஞ்சமும் சளைக்காமல் மாற்று முயற்சிகளை தொடர்ந்து இன்று இதுதான் சினிமா என்று புரிந்து கொள்ளுமளவுக்கு  நம் ரசனையை மாற்றிய சில சினிமா கலைஞர்களில் கமலுக்குத்தான் முதலிடம். சிலர் சொல்லலாம் கமல் செய்த புதுமைகள் எல்லாம் ஏதோ ஒரு வெளிநாட்டு படங்களின் காப்பியே அவர்  ஒரு சிறந்த கோப்பி பேஸ்ட் கலைஞன் என்று , இருக்கட்டுமே அதனால் என்ன குறைந்து விட்டது? இன்று கோடம்பாக்கத்துக்குள் நுழைய ஆசை படும் இளைஞர்கள் எல்லோருமே ஹீரோயிச கதைகளை ஒதுக்கிவிட்டு புதுசாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையோடு வருகிறார்களே , அதை உருவாக்கியது  கமல் போன்ற சிலர் அன்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இங்கு விதைத்த விதைகள்தான். நீங்கள் சொல்லுவது போல அது திருட்டு  விதையாவே இருந்தாலும் அதனால் தமிழ் சினிமா அடைந்த பலன்களை யாராலும் மறுக்கமுடியாது. கமலும் மற்றவர்களை போல அந்தந்த காலகட்டங்களுக்கு  ஏற்ற டெம்ப்ளேட் கதைகளுக்குள் சிக்கியிருந்தால் நாம் இன்னமும் ஒரே பாட்டில் பணக்காரனாகும் ஹீரோக்களை விசிலடித்து ரசித்து கொண்டிருப்போம்.  


இன்றும் அவர் தான் சார்ந்த சினிமாவின் தொழில்நுட்பம்   சார்ந்த முன்னேற்றத்துக்காக முயன்றுகொண்டேதான் இருக்கிறார். இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் சினிமாவில் டிஜிட்டல் என்டர்டைன்மென்ட் தொழில்நுட்பத்தை இங்கு அறிமுகபடுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார். நம் முன்னோர்கள் கட்டிய வீட்டை நல்ல வாடகைக்கு விட்டு பிழைப்பது புத்திசாலித்தனம்தான் ஆனால் அதே வீடு பல காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அதை மெருகேற்றிக்கொண்டே இருக்க வேண்டும் , இல்லை என்றால் நாளடைவில் பாழடைந்து யாருக்கும் பயனற்றதாகி விடும் . இங்கே பலரும் சினிமாவை பயன்படுத்தி சம்பாதித்துகொண்டிருக்கும் போது அதை செப்பனிடும் வேலையை கமல் போன்ற ஒரு சிலர்தான் செய்கிறார்கள்.கமல் என்னும் கலைஞன் மூலம் நான் கற்று கொண்ட பாடம் இதுதான் 

நான் மேலே சொல்லிய விசயங்களை யார் வேண்டுமானாலும் மறுக்கலாம் , எதிர்வாதம் செய்யலாம் ஆனால் அவர்களுக்குள்ளும் சினிமா பற்றிய புரிதலில் ஒரு ரசனை மாற்றம் ஏற்பட்டதில் கமல் படங்களுக்கும் ஒரு பெரிய பங்கு இருந்திருக்கும் என்பதை அவர்களால் மறுக்கமுடியாது.


Wednesday, February 22, 2012

காதலில் சொதப்புவது எப்படி?

இப்படி ஒரு தலைப்பு போதாதா , விடலை பசங்களை  தியேட்டருக்கு இழுத்து வர? காதலுக்காக உயிரையும் விடுறவன் , அப்பன் காசு  ஒரு 1௦௦ ரூபாய் கொடுக்கமாட்டானா? டைட்டில் எபெக்ட் தியேட்டரில் நன்றாக எதிரொலித்தது... அரங்கம் முழுவதும் இளசுகள்   மட்டுமே.  அவர்கள் எதிபார்ப்பு எல்லாம் ஒரு கலகலப்பான அதே சமயம் நெஞ்சை கசக்கி பிழியும் காதலை சொல்லும் வழக்கமான கல்லூரி காதல் கதைதான் .. கரண்ட் கட்ல வெறுத்து போயி பேசாம பக்கத்து தியேட்டரில் ஓடும் விஜய் படத்தையாவது பார்த்து தொலைக்கலாம் என்று வேண்டா வெறுப்பாக சினிமாவுக்கு போகும்பொழுது அங்க அந்த விஜய் படத்தை தூக்கி விட்டு வேறு ஒரு நல்ல படம் போட்டிருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு எதிர்பாராத இன்ப அனுபவத்தை கொடுத்திருக்கிறது இந்த படம்.




ஒரு லவ் சப்ஜெக்ட்ல  அப்படி என்ன பெருசா சொல்லாததை சொல்லிவிட போகிறார்கள் என்று அவநம்பிக்கையோடுதான் படம் பார்க்க சென்றிருந்தேன், ஆனால் இது வழக்கமான நாக்கை அறுக்கும் , காதலிக்காக தன கிட்னியை  விற்கும் காதல் இல்லை என்பதை அமலா பாலின் அறிமுக காட்சியிலேயே உணர்த்திவிடுகிறார் இயக்குனர். உன்னாலே உன்னாலேயில் ஜீவா காட்ட  முயன்று தோற்ற இருபத்தி ஒன்றாம் நூன்றாண்டின் ஒரிஜினல் காதல் கதையை அசால்டாக கையாண்டு இருக்கிறார்கள் இதில்.. இந்த படத்தின் ஒரு காட்சியிலாவது அமலாபால் உங்கள் காதலியையும் , சித்தார்த் உங்கள் காதலனையும் ஞாபகபடுத்தா விட்டால் flames போடாமலே சொல்லி விடலாம்  உங்கள் காதல் ரொம்ப  வீக் என்று..

படத்தின் மிகப்பெரிய பலம் வசனம்தான். அமலாபாலும் சித்தார்த்தும் சண்டை போடும் காட்சிகளில் வரும் வசனங்களில் அதை எழுதியவரின் அனுபவம் நமக்கு தெரிகிறது ... பாவம் அந்த மனுஷன் எத்தனை பொண்ணுங்ககிட்ட இப்படி மொக்கை வாங்குனாரோ.. நாடி நரம்பு ரத்தம் சதை இப்படி எல்லாவற்றிலும் காதல் வெறி ஊறி போன ஒரு மனுசனாலத்தான் இப்படி வசனம் எழுத முடியும். உன்னாலே உன்னாலேவில் வரும்  டைனிங் டேபிள் காட்சிக்கு பிறகு காதலை யதார்த்தமாக பிரதிபலிக்கும் வசனங்கள் இந்த படத்தில்தான் கைகூடி வந்திருக்கிறது..

இந்த படத்தில் ஹீரோ ஹீரோயின் பின்னால் நாய் போல அலையவில்லை , ஹீரோயின் எனக்கு குடும்பம்தான் முக்கியம் கருமாந்திரம் பிடிச்ச இந்த காதல் இல்லை என்று டையலாக் பேசவில்லை , நீதான் எனக்கு உயிர் மத்ததெல்லாம் வெறும் ம** என்று ஹீரோ எதையாவது தியாகம் செய்து ஹீரோயின் மனதில் இடம்பிடிக்கவில்லை , கடைசியில் ஹீரோ ஹீரோயின் இருவரில் ஒருவர் சாகவும் இல்லை ... மேலே கூறிய இந்த பல இல்லைகள்தான் படத்தின் இன்னொரு பிளஸ்


காதல் எந்த வயதிலும் வரலாம் , காதல் எத்துனை முறை வேண்டுமானாலும் எத்தனை பேர் மேல் வேண்டுமானாலும் வரலாம் , காதல் ஒருவர் மீதே பல முறை வரலாம், ஆனால் என்னதான் தலைகீழா நின்னு சுறா படம் பார்த்தாலும் உன் தலையில் எழுதவில்லை என்றால் காதல் கடைசி வரைக்கும் உனக்கு வாய்க்காது இப்படி காதலின் ஒவ்வொரு விதிகளுக்கும் ஒவ்வொரு கிளை கதைகள் படத்தில் உண்டு... அப்படி வரும்  கிளைகதைகளில் அமலாபாலின் அப்பா அம்மாவுக்கு நடுவே நடக்கும் கதை மெயின் கதையை விட ரொமான்டிக்காக இருக்கிறது. அதுவும் வளையோசை கலகலவென கவிதைகள் படிக்கிது பாடலும் , அந்த லவ் லெட்டரும் செம...

பாடல்கள் , இசை , ஒளிப்பதிவு என்று எல்லாமுமே ஓகே ரகம்.. ரொமாண்டிக் காட்சிகளில் பின்னணியில் வயலின் வாசிப்பதை இளையராஜாவே நிறுத்திவிட்டார் , தமன்  எப்பொழுது நிறுத்த போகிறாரோ தெரியவில்லை. பாடல்களுக்கு இசை அமைப்பதற்கு  முன்னால் அவர்  விண்ணை தாண்டி வருவாயாவை ஒரு முறை பார்த்திருந்திருக்கலாம்..  ஆனால் அமலாபால் வரும் காட்சிகளில் மட்டும் அவர் மனசு அமலாபால் அமலாபால்னு சொல்லி இருக்கும்போல அதுக்கு மட்டும் கொஞ்சம் உழைப்பு அதிகம் .. 

அமலாபால் சொல்லிகொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை (நடிப்பை சொன்னேன் ) , அப்படி ஒன்றும் அழகாகவும் எனக்கு தெரியவில்லை , கவர்ச்சியான   நம்மை சுண்டி இழுக்கும் எந்த அம்சமும் இல்லை ... இவரை விட சில காட்சிகளில் மட்டும் வரும் SS மியூசிக் பூஜா நம்மை கிறங்கடிக்கிறார். 

தமிழ் சினிமாவின் சிம்பு தனுஸ்களை விட சித்தார்த்துக்கு திறமை  அதிகம் என்பதை  அவர் இதுவரைக்கும்  நடித்த  படங்களில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். இந்த படம் இதற்க்கு மிக சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது.. தமிழில் அவரின் முதல் வெற்றி படம் இதுதான் , இதை போன்ற அவருக்கு  ஏற்ற  கதைகளை  தெரிவு  செய்து நடித்தால்  தமிழிலும் அவர் பட்டைய கிளப்பலாம் , நமக்கும் சிம்பு தனுஷ்களிடம் இருந்து விடுதலை கிடைக்கும்.   

இந்த படம் கண்டிப்பாக கல்யாணம் ஆன , ஆகாத , காதலிக்கிற காதலிக்காத , காதலிச்ச, காதலில் கவுந்த , காதலை கவுத்த  எல்லாருமே பார்க்கலாம்...  





Wednesday, February 8, 2012

மின்சாரம்





தமிழ்நாட்டில் இன்றிலிருந்து தினமும் 8 மணிநேரம் மின்வெட்டாம். கேட்கவே வயிற்றில் புளியை கரைக்கிறது . 3 மணிநேரம் மின் தடை  என்று சொல்லிவிட்டு  எங்கள் ஊரில் 8 மணிநேரம் கட் பண்ணினார்கள் .. இப்பொழுது 8 மணிநேரம் என்று சொல்லி பீதியை கிளப்புகிறார்கள் , கண்டிப்பாக குறைந்தது 12 மணிநேரமாவது கரண்ட் இல்லாமல் அல்லாட  வேண்டியதுதான். 

இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விஷயம் , தலைநகரம் சென்னையில் மட்டும் 1 மணிநேரம்தான் மின் வெட்டாம் , சென்னைக்கு வெளியே  இருக்கிறவனெல்லாம் காட்டு மிராண்டி பயலுக என்று நினைத்து விட்டார்கள் போலும். அது ஏன் பாஸ் சென்னை மேல மட்டும் உங்களுக்கு அவ்வளவு பாசம்? மதுரையிலும் , திருநெல்வேலியிலும் தொழில்சாலைகளும் , மனிதர்களும் இல்லையா? எது எப்படியோ முன்பெல்லாம் சினிமாக்காரர்களையும் , அரசியல்தலைவர்களையும் பார்க்க மட்டுமே சென்னைக்கு பஸ் பிடித்து போய் கொண்டிருந்தோம், இனிமேல் நாங்க ஃபேன் சுத்துரதையும் , லைட் எரியிரதையும் பாக்கணும்னா கூட  சென்னைக்குதான் வரணும் போல... சரி விவசாயம் பண்ண கரண்ட் இல்லாம , விளைபொருளெல்லாம் கம்மியாகிகிட்டே இருக்கே , சென்னையில நீங்க வாழ சாப்பாடு எங்க இருந்து பாஸ் வரும்? அதையும் பர்க்கர், பீஸான்னு அமெரிக்கா காரங்கிட்ட இருந்து இறக்குமதி பண்ணுவீங்களோ? மின்சார ரயிலில் இருந்து ஐ‌டி கம்பெனி வரைக்கும் சென்னைக்கு மட்டுமே சொந்தம்னு வாங்கி நீங்க மட்டும் வீங்கிக்கிட்டீங்க, இப்ப மின்சாரமும் உங்களுக்கு மட்டும்தானாம், நீங்க வீங்கிகிட்டே போங்க நாங்க குறைந்து கொண்டே போகிறோம், தமிழகம் வளர்க்கிறதுன்னு எல்லாரும் சேர்ந்து கும்மியடிக்கலாம்..  

அதேபோல கூடிய விரைவில் இடைதேர்தல் நடக்க போகிற சங்கரன் கோவிலில் மின்வெட்டே இல்லையாம். (இதை கேள்விபட்டதில் இருந்து எங்க ஊர்  எம்‌எல்‌ஏவ நெறைய பேரு கொலைவெறியோட தேடிக்கிட்டு இருக்கானுக... நாலு பேருக்கு நல்லதுனா என்ன வேணும்னாலும் செய்யலாம்னு கமல் பேசுன வசனம்தான் ஞாபகத்துக்கு வருது..) சங்கரன் கோவில் மக்கள்தான் இப்ப தமிழ்நாட்டோட ஒரே நம்பிக்கை . திருமங்கலம் மாதிரி நீங்களும் காசுக்கு ஆசைபட்டு தமிழனோட சுயமரியாதையை அடமானம் வச்சிராதீங்க மக்கா... நாமெல்லாம் ரொம்ப வீரம் நிறைந்த இனமாம் , உசுரை விட மானம்தான் நமக்கெல்லாம் முக்கியமா இருந்ததாம்... இதெல்லாம் ஒருகாலத்தில்!,  ஆனால் இன்று தமிழன் என்பவன் எவ்வளவு பெரிய இளிச்சவாயன் என்பதை இந்த திராவிட காட்சிகள் நாற்பதே வருடத்தில் உலகறிய செய்துவிட்டன. 


செக்கு மாடு பார்த்திருக்கிறீர்களா? மாட்டுக்கு முன்னே ஒரு வைக்கோல் கட்டை கட்டி வைத்திருப்பார்கள் , மாடு சுத்த சுத்த அந்த வைக்கோல் கட்டும்  சுத்திக்கொண்டே போகும் , மாடும் நாம் இன்னொரு சுத்து சுத்தினால் வைக்கோல் கிடைத்து விடும் என்று எண்ணி சுத்திக்கொண்டே இருக்கும் , அந்த வைக்கோல்கட்டு மின்சாரம் என்றால் செக்கு மாடு யார் என்று நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியதில்லை.


இணையம் எங்கும் இன்னமும் மின்வெட்டுக்கு காரணம் ஐய்யாவா , அம்மாவா என்றுதான் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர யாருமே ஆக்கபூர்வமாக எதுவும் பேசுவதுகூட இல்லை. பூமியில சொகுசா வாழ்ந்து அலுத்து போய்விட்டது ,அடுத்து செவ்வாய் கிரகத்தில் குடியேறலாமா என்று அயல்நாட்டுகாரன் யோசித்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் , இங்கே நாம் பூமியிலேயே அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் வாழ்வதை நினைக்கும் போது ஒரு தமிழனாக,  இந்தியனாக நாம் அசிங்கமாகவே உணரவேண்டியது இருக்கிறது...

சரி இதற்கு தீர்வாக இருக்கும் என்று சொல்லபடும் கூடங்குளம் அணுமின் நிலையம் பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டு திறக்க முடியாமல் இருக்கிறது. காரணம் என்னவென்று நமக்கு இன்னமும் தெளிவாக தெரியவில்லை. மத்திய அரசு இந்த திட்டத்தில் நிறைய ஊழல் செய்து கட்டுமான பணிகள் எதுவும் சரிவர முடிக்கபடாமல் திட்டம் அரைகுறையாக நின்று விட்டதாகவும் , அது வெளியில் தெரியாமல் இருக்க மத்திய அரசே போராட்டக்காரர்களை தூண்டிவிட்டு இந்த பக்கம் அவர்களுக்கு எதிராக செயல்படுவதை போல காட்டுக்கொள்வதாகவும் சிலர் சொல்லுகிறார்கள். இன்னொரு புறம் அதிமுக அமைச்சர் ஒருவர் இந்த கூடங்குளத்தை சுற்றி இருக்கும் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகள் தன் கட்டுபாட்டை விட்டு போய்விட கூடாது என்பதற்காக அம்மாவின் ஆசியோடு போராட்டத்தை தூண்டி விடுவதாக சிலர் கூறுகிறார்கள். இரண்டில் எதுவேண்டுமானாலும் உண்மையாக இருக்கலாம் , மக்கள் பாதுகாப்பு ஒன்றுதான் பிரச்சனை என்று இருந்திருந்தால் நம் மத்திய அரசும் , மாநில அரசும் இவ்வளவு நாட்கள் கண்டிப்பாக பொறுத்திருக்காது.. இவர்கள் இருந்தால் என்ன செத்தால் நமக்கு என்னவென்று கூடங்குளம் அணுமின் நிலையம் என்றோ திறக்கபட்டிருக்கும். காரணம் நடப்பது மக்களாட்சி அல்லவாஇங்கே மக்கள்தானே கஷ்டப்பட வேண்டும். அதான் நம் வரிபணத்தில் கோடி கோடியாக செலவழித்து அதில் சில கேடிகள் பல  கோடிகளை தங்கள் வாயில் போட்டு விட்டு மிஞ்சிய சில கோடிகளில் அரைகுறையாக கட்டப்பட்ட ஒரு மின் உலை இன்று அதே மக்களுக்கு தேவைபடும் வேளையில் , அதே மக்களின் பாதுகாப்பை காரணம் காட்டி நிறுத்தி வைக்கபடுவது போன்ற வேடிக்கைகள் எல்லாம் எந்த தடையும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.


நம்மால் என்ன செய்ய முடியும் , அடுத்த தேர்தல் வரும்போது கடலில் தூக்கி எறிந்த பின்னரும் தன் குடும்பத்தையே சுமந்து கொண்டு கட்டுமரமாக மிதந்து கொண்டிருக்கும் முன்னாள் முதல்வரை மீண்டும் அவர் குடும்பத்தோடு படகில் ஏற்றிக்கொள்ளதான் முடியும். அம்மாவையும் ஐயாவையும் விட்டால் நம்மை காப்பாற்ற (மொட்டை அடிக்க)  வேறு யார் இருக்கிறார்கள்?


சம்சாரம் அது மின்சாரம்னு விசு சரியாத்தான் சொல்லியிருக்காரு , ரெண்டுமே தமிழனுக்கு என்னைக்குமே பிரச்சனைதான் 

LinkWithin

Related Posts with Thumbnails