Followers

Copyright

QRCode

Wednesday, February 8, 2012

மின்சாரம்

தமிழ்நாட்டில் இன்றிலிருந்து தினமும் 8 மணிநேரம் மின்வெட்டாம். கேட்கவே வயிற்றில் புளியை கரைக்கிறது . 3 மணிநேரம் மின் தடை  என்று சொல்லிவிட்டு  எங்கள் ஊரில் 8 மணிநேரம் கட் பண்ணினார்கள் .. இப்பொழுது 8 மணிநேரம் என்று சொல்லி பீதியை கிளப்புகிறார்கள் , கண்டிப்பாக குறைந்தது 12 மணிநேரமாவது கரண்ட் இல்லாமல் அல்லாட  வேண்டியதுதான். 

இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய விஷயம் , தலைநகரம் சென்னையில் மட்டும் 1 மணிநேரம்தான் மின் வெட்டாம் , சென்னைக்கு வெளியே  இருக்கிறவனெல்லாம் காட்டு மிராண்டி பயலுக என்று நினைத்து விட்டார்கள் போலும். அது ஏன் பாஸ் சென்னை மேல மட்டும் உங்களுக்கு அவ்வளவு பாசம்? மதுரையிலும் , திருநெல்வேலியிலும் தொழில்சாலைகளும் , மனிதர்களும் இல்லையா? எது எப்படியோ முன்பெல்லாம் சினிமாக்காரர்களையும் , அரசியல்தலைவர்களையும் பார்க்க மட்டுமே சென்னைக்கு பஸ் பிடித்து போய் கொண்டிருந்தோம், இனிமேல் நாங்க ஃபேன் சுத்துரதையும் , லைட் எரியிரதையும் பாக்கணும்னா கூட  சென்னைக்குதான் வரணும் போல... சரி விவசாயம் பண்ண கரண்ட் இல்லாம , விளைபொருளெல்லாம் கம்மியாகிகிட்டே இருக்கே , சென்னையில நீங்க வாழ சாப்பாடு எங்க இருந்து பாஸ் வரும்? அதையும் பர்க்கர், பீஸான்னு அமெரிக்கா காரங்கிட்ட இருந்து இறக்குமதி பண்ணுவீங்களோ? மின்சார ரயிலில் இருந்து ஐ‌டி கம்பெனி வரைக்கும் சென்னைக்கு மட்டுமே சொந்தம்னு வாங்கி நீங்க மட்டும் வீங்கிக்கிட்டீங்க, இப்ப மின்சாரமும் உங்களுக்கு மட்டும்தானாம், நீங்க வீங்கிகிட்டே போங்க நாங்க குறைந்து கொண்டே போகிறோம், தமிழகம் வளர்க்கிறதுன்னு எல்லாரும் சேர்ந்து கும்மியடிக்கலாம்..  

அதேபோல கூடிய விரைவில் இடைதேர்தல் நடக்க போகிற சங்கரன் கோவிலில் மின்வெட்டே இல்லையாம். (இதை கேள்விபட்டதில் இருந்து எங்க ஊர்  எம்‌எல்‌ஏவ நெறைய பேரு கொலைவெறியோட தேடிக்கிட்டு இருக்கானுக... நாலு பேருக்கு நல்லதுனா என்ன வேணும்னாலும் செய்யலாம்னு கமல் பேசுன வசனம்தான் ஞாபகத்துக்கு வருது..) சங்கரன் கோவில் மக்கள்தான் இப்ப தமிழ்நாட்டோட ஒரே நம்பிக்கை . திருமங்கலம் மாதிரி நீங்களும் காசுக்கு ஆசைபட்டு தமிழனோட சுயமரியாதையை அடமானம் வச்சிராதீங்க மக்கா... நாமெல்லாம் ரொம்ப வீரம் நிறைந்த இனமாம் , உசுரை விட மானம்தான் நமக்கெல்லாம் முக்கியமா இருந்ததாம்... இதெல்லாம் ஒருகாலத்தில்!,  ஆனால் இன்று தமிழன் என்பவன் எவ்வளவு பெரிய இளிச்சவாயன் என்பதை இந்த திராவிட காட்சிகள் நாற்பதே வருடத்தில் உலகறிய செய்துவிட்டன. 


செக்கு மாடு பார்த்திருக்கிறீர்களா? மாட்டுக்கு முன்னே ஒரு வைக்கோல் கட்டை கட்டி வைத்திருப்பார்கள் , மாடு சுத்த சுத்த அந்த வைக்கோல் கட்டும்  சுத்திக்கொண்டே போகும் , மாடும் நாம் இன்னொரு சுத்து சுத்தினால் வைக்கோல் கிடைத்து விடும் என்று எண்ணி சுத்திக்கொண்டே இருக்கும் , அந்த வைக்கோல்கட்டு மின்சாரம் என்றால் செக்கு மாடு யார் என்று நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியதில்லை.


இணையம் எங்கும் இன்னமும் மின்வெட்டுக்கு காரணம் ஐய்யாவா , அம்மாவா என்றுதான் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர யாருமே ஆக்கபூர்வமாக எதுவும் பேசுவதுகூட இல்லை. பூமியில சொகுசா வாழ்ந்து அலுத்து போய்விட்டது ,அடுத்து செவ்வாய் கிரகத்தில் குடியேறலாமா என்று அயல்நாட்டுகாரன் யோசித்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் , இங்கே நாம் பூமியிலேயே அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் வாழ்வதை நினைக்கும் போது ஒரு தமிழனாக,  இந்தியனாக நாம் அசிங்கமாகவே உணரவேண்டியது இருக்கிறது...

சரி இதற்கு தீர்வாக இருக்கும் என்று சொல்லபடும் கூடங்குளம் அணுமின் நிலையம் பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டு திறக்க முடியாமல் இருக்கிறது. காரணம் என்னவென்று நமக்கு இன்னமும் தெளிவாக தெரியவில்லை. மத்திய அரசு இந்த திட்டத்தில் நிறைய ஊழல் செய்து கட்டுமான பணிகள் எதுவும் சரிவர முடிக்கபடாமல் திட்டம் அரைகுறையாக நின்று விட்டதாகவும் , அது வெளியில் தெரியாமல் இருக்க மத்திய அரசே போராட்டக்காரர்களை தூண்டிவிட்டு இந்த பக்கம் அவர்களுக்கு எதிராக செயல்படுவதை போல காட்டுக்கொள்வதாகவும் சிலர் சொல்லுகிறார்கள். இன்னொரு புறம் அதிமுக அமைச்சர் ஒருவர் இந்த கூடங்குளத்தை சுற்றி இருக்கும் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகள் தன் கட்டுபாட்டை விட்டு போய்விட கூடாது என்பதற்காக அம்மாவின் ஆசியோடு போராட்டத்தை தூண்டி விடுவதாக சிலர் கூறுகிறார்கள். இரண்டில் எதுவேண்டுமானாலும் உண்மையாக இருக்கலாம் , மக்கள் பாதுகாப்பு ஒன்றுதான் பிரச்சனை என்று இருந்திருந்தால் நம் மத்திய அரசும் , மாநில அரசும் இவ்வளவு நாட்கள் கண்டிப்பாக பொறுத்திருக்காது.. இவர்கள் இருந்தால் என்ன செத்தால் நமக்கு என்னவென்று கூடங்குளம் அணுமின் நிலையம் என்றோ திறக்கபட்டிருக்கும். காரணம் நடப்பது மக்களாட்சி அல்லவாஇங்கே மக்கள்தானே கஷ்டப்பட வேண்டும். அதான் நம் வரிபணத்தில் கோடி கோடியாக செலவழித்து அதில் சில கேடிகள் பல  கோடிகளை தங்கள் வாயில் போட்டு விட்டு மிஞ்சிய சில கோடிகளில் அரைகுறையாக கட்டப்பட்ட ஒரு மின் உலை இன்று அதே மக்களுக்கு தேவைபடும் வேளையில் , அதே மக்களின் பாதுகாப்பை காரணம் காட்டி நிறுத்தி வைக்கபடுவது போன்ற வேடிக்கைகள் எல்லாம் எந்த தடையும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.


நம்மால் என்ன செய்ய முடியும் , அடுத்த தேர்தல் வரும்போது கடலில் தூக்கி எறிந்த பின்னரும் தன் குடும்பத்தையே சுமந்து கொண்டு கட்டுமரமாக மிதந்து கொண்டிருக்கும் முன்னாள் முதல்வரை மீண்டும் அவர் குடும்பத்தோடு படகில் ஏற்றிக்கொள்ளதான் முடியும். அம்மாவையும் ஐயாவையும் விட்டால் நம்மை காப்பாற்ற (மொட்டை அடிக்க)  வேறு யார் இருக்கிறார்கள்?


சம்சாரம் அது மின்சாரம்னு விசு சரியாத்தான் சொல்லியிருக்காரு , ரெண்டுமே தமிழனுக்கு என்னைக்குமே பிரச்சனைதான் 

3 comments:

பாலா said...

நீங்க சொன்ன மாதிரி அண்ணா சமாதி, எம்‌ஜி‌ஆர் சமாதி மாதிரி, பேன் ஓடுவதையும். லைட் எரிவதையும் பஸ் எறி சென்னையில்தான் போய் பார்க்க முடியும் போலிருக்கிறது....

//சம்சாரம் அது மின்சாரம்,

சொந்த அனுபவமோ?

Karthikeyan said...

//இணையம் எங்கும் இன்னமும் மின்வெட்டுக்கு காரணம் ஐய்யாவா , அம்மாவா என்றுதான் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர யாருமே ஆக்கபூர்வமாக எதுவும் பேசுவதுகூட இல்லை.// எதார்த்தமான வார்த்தைகள். ஒரு நாளில் பாதி நேரம் மின்சாரம் இல்லாமல் வாழ்தல் கொடுமை. கற்காலத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நாம் அளிக்கப்போவது என்ன?? வெறும் இருட்டுதானா??

Selvakumar said...

ராஜா, கூடங்குளம் எனக்கு மக்கள் போராட்டமாகவே படுகிறது. அரசியல் பின்புலம், வெளிநாட்டு சதி இதெல்லாம் சேர்ந்த்து இத்திட்டத்தை எதிர்ப்பவர்களை ஒருங்கிணைப்பதாக நீங்களும் நினைப்பது கொஞ்சம் வேதனையளிப்பதாக உள்ளது. கூடங்குளம், முல்லை பெரியார் எல்லாம் தமிழனின் உணர்ச்சிமிக்க போராட்டங்கள். என்ன சொரனை தன் வீட்டுக்கு பிரச்சனை எனும்போதுதான் வருகிறதே தவிர பக்கத்து வீட்டையோ, தெருவையோ, மாவட்டத்தையோ நாம் கவலைப்படுவதில்லை. இது மாற வேண்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails