Followers

Copyright

QRCode

Friday, June 11, 2010

என்னை கவர்ந்த பாடல்கள்

இந்த வருடம் வந்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த என்னை கவர்ந்த பத்து பாடல்களின் தொகுப்பு.. என்னை பொறுத்த  வரை இந்த வருடம் என்னை போன்ற இசை பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்.... மனதை வருடி சென்ற மெலடிகள் , தாளம் போட வைக்கும் குத்துக்கள் என்று வகை வகையான பாடல்கள் நிறைய வந்து விட்டது இந்த வருடம்... எனக்கு இசை ஞானம் பெரிதாக கிடையாது... தில்லு முல்லு படத்தில்  ரஜினி கேட்கும்  கேள்வியை பார்த்து விட்டு  ஸ்ரீ பிரியா , சத்திய ப்ரியா , பத்ம ப்ரியா எல்லாம் உண்மையிலே  ராகங்கள்தான்னு நெனச்சிகிட்டு இருந்தேன்...  அவ்ளோ ஞானம் எனக்கு இசையில... இருந்தாலும் இசைக்கு மொழி எல்லாம் கிடையாது , காது மட்டும் இருந்தா போதும் அப்படிங்கிற தைரியத்துல என்னை  இந்த வருடம் திரும்ப திரும்ப கேட்க வைத்த  பாடல்களைத்தான் இந்த பதிவுல எழுத போறேன்....

10. பச்ச மஞ்ச வொயிட் தமிழன் நான் ... (தமிழ்படம் )
இசை : கண்ணன் 

இந்த வருடம் வந்த முதல் குத்து பாட்டு... இந்த வருடத்தோட முதல் மியூசிக்கல் ஹிட் ஆல்பமும் இதுதான்... படத்துல எல்லா பாட்டுகளும் நல்லா இருந்தாலும் இது கொஞ்சம் ஸ்பெஷல்... பாடலின் ஆரம்பத்தில் வரும் கதாநாயக துதி வரிகள், பாடல் முழுவதும் இன்றைய கதாநாயகர்களை கிண்டல் பண்ணி எழுதபட்டிருக்கும் கவிதைகள்.. கடைசியில் வரும் டிரம்ஸ் அடி... என்று புது இசை அமைப்பாளர் கண்ணன் பாடலை கேக்கும் போது ரசிகர்களை ஆட வைத்து விட்டார்.. பாடலை எடுத்த விதம் அதைவிட அருமை... வழக்கமான விஜய் பட அறிமுக பாடலை அப்படியே கிண்டல் அடித்து எடுத்திருப்பார்கள்.. அவரை போலவே காஸ்டியும், நடனம் (குறிப்பாக அவர் ஆடிக்கொண்டு இருக்கும் போது நடன இயக்குனர் ஆட வருவார் , எதுக்கு அதான் நான் இருக்கேன்ல என்று அவரை துரத்தி விடுவார்) என்று பாக்கும் பொழுதெல்லாம் நான் மிகவும் ரசிக்கும் பாடல் இது....  

9. மாலை மயங்கும் நேரம் .. (ஆயிரத்தில் ஒருவன்)
இசை: G.V,பிரகாஷ் 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் , யுவன்சங்கர் ராஜாவை விட்டு பிரிந்து G.V.பிரகாஷை பயன்படுத்திய படம்... இந்த ஒரு காரணத்திற்காகவே  நான் பெரிதும் எதிர்பார்த்தேன் .. ஆனால் பெரிய ஏமாற்றம்தான் பாடல்களை கேட்ட பிறகு... அந்த படத்தில் ஆறுதலாக இருந்த ஒரே ஒரு பாடல் மாலை மயங்கும் நேரம் பாடல் மட்டும்தான் .. ஆண்ட்ரியாவின் மயக்கும் குரல் பாடலை கேக்கும் பொழுதெல்லாம் நம்மை கொஞ்சம் மயக்கித்தான் விடும் ..  இந்த பாடலை செல்வராகவன் படத்தில்  எப்படி எடுத்திருப்பார் என்று பார்க்க ஆவலாக இருந்தேன் ... ஆனால் படத்தில் இந்த பாடல் கிடையாது... அதனாலே இந்த பாடல் பலரை சென்று அடையவில்லை .. அநியாயமாக ஒரு நல்ல பாடலை வீணடித்து  விட்டார்கள்... 


8. நான் நடந்தால் அதிரடி .... (சுறா)

இசை: மணி சர்மா 

சில பாடல்கள் கேக்கும்போது நல்லா இருக்காது , ஆனா திரையில் பார்த்த பின்னர் பிடித்து விடும் .. இந்த பாடலும் அந்த வகைதான் ... இந்த பாடல் எனக்கு பிடிக்க காரணம் விஜய்யின் நடனம் மட்டுமே...

7. உன் பேரை சொல்லும் போது .... (அங்காடி தெரு)
இசை: G.V.பிரகாஷ் 

உணர்வுபூர்வமான பாடல்... பாடலை எப்பொழுது கேட்டாலும் நம் மனம் லேசாகி விடும் ... பேருந்து பயணங்களின் போதும் , இரவிலும் எப்பொழுதும் இந்த பாடல் என்னுடைய ஹெட் போனில் ஒலிக்கும் ... பாடலை கேட்டு கொண்டு இருக்கும் பொழுதே சில நேரங்களில் தூங்கி விடுவேன்...

6. என் காதல் சொல்ல நேரம் இல்லை ... ( பையா)
இசை: யுவன் சங்கர் ராஜா 

நிறைய மொக்கை பாடல்களுக்கு பின்னர் யுவன் சங்கர் ராஜா கொடுத்த ஹிட் ஆல்பம்... இந்த ஆல்பத்தில் கேட்டவுடனே எனக்கு பிடித்து போன பாடல் , நான் சந்தோசமான மன நிலையில் இருக்கும் பொழுது விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...

5. நான் போகிறேன் மேலே மேலே ... (நாணயம்)
இசை :  ஜேம்ஸ் வசந்தன் 

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் எஸ். பி.பியும் சித்ராவும் இணைந்து பாடிய பாடல்... காதல் பாடல்களில் நான் இன்னும் சிங்கம்தான் என்று எஸ்.பி.பி. இன்றைய இளைய தலைமுறை பாடகர்களுக்கு நிரூபித்த பாடல்..  பாடலில் எஸ்.பி.பி காட்டிய ஏற்ற இறக்கங்கள் பாடலுக்கு புது பரிணாமத்தை கொடுத்திருக்கும்.. படம் வந்த புதிதில் இந்த பாடல் எனக்கு தெரியாமலே இருந்தது... டீவீகளிலும் இந்த பாடல் ஒளிபரப்பபடுவதில்லை... அப்பொழுது வந்த தீராத விளையாட்டு பிள்ளை என்ற மொக்கை படத்தில் வரும் மொக்கை பாடல்கள்தான் அவர்களின் டிவியில் எப்பொழுதும் ஒளிபரப்பப்படும்.. பின்னர் நண்பர் ஒருவர்தான் எனக்கு இந்த பாடலை அறிமுகபடுத்தினார்.. காதலியுடன் இருக்கும் போது கேட்பதற்கு ஏற்ற பாடல் இது.

4. உசுரே போகுதே ... (ராவணன்)
இசை:  ஏ. ஆர். ரகுமான் 

நான் மிகவும் எதிர்பார்த்த ஆல்பம் இது ... ஆனால் எதிர்பார்த்த அளவு என்னை பாடல்கள் ஈர்க்கவில்லை... கேட்ட வரையில் இந்த பாடல் பரவாயில்லை என்று தோன்றுகிறது.. ரகுமானின் பாடல்கள் எப்பொழுதும் கேட்க கேட்கத்தான் மனசை அள்ளும்.. ஆனால் இந்த படத்தின் பாடல்கள் இவ்வளவு நாள் கேட்ட பின்னர் ஒரு சலிப்பைத்தான் உண்டு பண்ணுகிறது .. பார்க்கலாம் மணிரத்னம் காட்சி அமைப்பில் அசத்துகிறாரா என்று... 

3. மன்னிப்பாயா... (விண்ணை தாண்டி வருவாயா)
இசை: ஏ.ஆர்.ரகுமான் 

ஆஸ்கார் வாங்கிய பின்னர் ரகுமான் இசையில் வந்த முதல் தமிழ் படம் .. கௌதம் மேனனுடன் ரகுமான் கை கோர்த்த படம் என்று எதிர்பார்ப்பை எகிற வைத்த ஆல்பம்... இருவரும் ஏமாற்றவில்லை,  ஏ.ஆர்.ரகுமானின் இசை அமைப்பில் வந்த வித்தியாசமான ஆல்பங்களில் இதுவும் ஒன்று ... எல்லா பாடல்களுமே என்னை கவர்ந்து இருந்தாலும் , ஸ்ரேயா கோஷலின் வசீகரிக்கும் குரலால் இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.. கேட்க கேட்க இன்னமும் பாடலின் சுவை கூடி கொண்டே செல்கிறது எனக்கு... பாடலின் காட்சி அமைப்பும் அருமையாக இருக்கும் ... 

2. அடடா மழைடா... (பையா)
இசை: யுவன் சங்கர் ராஜா

யுவன் இசையில் வந்த துள்ளலான பாடல் இது... முதல் தடவை  பாடல் கேட்ட வுடனே லிங்குசாமி காட்சி அமைப்பில் பட்டையை கிளப்பி இருப்பார் என்று ஆவலாய் இருந்தேன்.. (காதல் டூயெட் எடுப்பதில் லிங்கு கெட்டிக்காரர் ஜீ படத்தில் வரும் டிங் டாங் கோயில் மணி பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரைட்)... ஆனால் திரையில் பார்க்கும் பொழுது லிங்குவின் மேல் கோபம்தான் வந்தது ... பாடலை அந்த அளவு கேவலமாக எடுத்திருப்பார்... இருந்தாலும் பாடலை கேக்கும் பொழுது கண்டிப்பாய் என்னை அறியாமல் கைகள் தாளம் போட ஆரம்பித்து விடும்... யுவன் இதை போலவே துள்ளல் இசையில் கவனம் செலுத்தலாம் ... நன்றாக வருகிறது அவருக்கு... 

1. இது வரை இல்லாத உணர்விது... (கோவா)
இசை: யுவன் சங்கர் ராஜா 

சில பாடல்களில் ராகம் நன்றாக இருக்கும் , சில பாடல்களில் பாடலில் வரும் இசை நன்றாக இருக்கும் , சில பாடல்களில் பாடகர்களின் குரல் நன்றாக இருக்கும் , சில பாடல்களில் வார்த்தைகள் நன்றாக இருக்கும், சில பாடல்கள் காட்சி அமைப்பில் நம்மை அசத்தி விடும்... ஒரு சில பாடல்களில் மட்டுமே இவை எல்லாமே அருமையாய் பொருந்தி வரும் .. அந்த வகையில் என்னுடைய ரசனையில் எல்லா விதத்திலும் என்னை கவர்ந்த பாடல் இது ... யுவனின் இசை , ஆண்ட்ரியாவின்  குரல் , அறிமுக பாடகர் அஜீஸின் குரல் (இவர் ஏர்டெல் சூப்பர் சிங்கர் இரண்டாம் சீசனின் வெற்றியாளர்) எல்லாமே என்னை கவர்ந்த  விஷயங்கள் இந்த பாடலில் .. காதலர்களுக்கான அருமையான பாடல் இது ...  பாடலை எழுதியவர் கங்கை அமரனாம்!! கண்டிப்பாக என்னால் நம்ப முடியவில்லை , அந்த அளவு காதலை ஆழமாக  வெளிபடுத்தும் வரிகள் அவை... இந்த பாடல் ஆண்களை விட பெண்களை அதிகம் கவர்ந்து இருக்கிறது என்று நினைக்கிறேன்... என்னுடைய தோழிகள் பலருடைய பேவரைட் பாடல் இப்பொழுது இதுதான்... என்னுடைய செல் போன் டையலர் டியூன் பாடலாய் இதை வைத்து இருந்த பொழுது பலர் என்னிடம் கூறிய விஷயம் இது...  இன்றும் தினமும் அதிக முறை நான் கேட்கும், பார்க்கும் பாடல் இதுதான்.. 

(இதை தவிர அசலில் வரும்  துஷ்யந்தா பாடல் கேக்கும் பொழுது பிடித்திருந்தது , ஆனால் படத்தில் அந்த பாடல் பாதியாக குறைக்கப்பட்டு விட்டது.. அதனால் பெரிய அளவில் என் மனதில் ஒட்டாமல் போய் விட்டது..)

3 comments:

Bala said...

பாடல்கள் தேர்வு சிறப்பாக உள்ளது.
காவல்காரன் வரட்டும். முதலிடத்தை அதுதான் பிடிக்கும்
Confidence Boss :))

Yoganathan.N said...

Half year report-A? இருந்தாலும் எனது வன்மையான கண்டனங்கள் (எட்டாவது பாடல் உங்கள் பட்டியலில் இடம் பெற்றதற்கு)...

ஹீரோ காரணத்தால் தான் கண்டனம் என்று நினைக்க வேண்டாம். இதனை விட பல நல்ல பாடல்கள் உள்ளன, அதை விடுத்து இதைத் தேர்ந்தெடுத்துள்ளீர். முதன் முதலாக உங்கள் கருத்துடன் வேறுபடுகிறேன். :(

"ராஜா" said...

யோகநாதன்
இந்த வருடம் வந்த படங்கள் மிகவும் குறைவு என்பதால் அதை எழுத வேண்டிய கட்டாயம் அதனால்தான்...

பாலா... இன்னமுமா அவர இந்த ஊர் நம்புது..

LinkWithin

Related Posts with Thumbnails