Followers

Copyright

QRCode

Tuesday, November 30, 2010

நந்தலாலா- குறிஞ்சியா? நெருஞ்சியா?




நந்தலாலா

இந்த படத்தை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் பதிவுலகில் வந்து விட்டது , அதை படித்து படித்து உங்களுக்கு அயர்ச்சி உருவாகி இருக்கலாம் .. இருந்தாலும் இந்த படத்தை பார்த்த பொழுது இதை பற்றி கண்டிப்பாக எழுத வேண்டும் என்று என்னையும் அறியாமல் ஒரு ஆசை எனக்குள் உருவானது....

இரண்டு குழந்தைகளின் பயணமே இந்த படம்... உலக பிரமானமாண விசயங்கள் எதுவுமே  தெரியாத அவர்களிடம் இருந்து எதிர்பாடும் மக்கள் பலர் பல விசயங்களை கற்று கொள்ளுகிறார்கள்... கடைசியில் இருவரும்  எதிரபாராத ஏமாற்றங்களையும் ஆச்சர்யங்களையும் சந்தித்து தெளிந்து பின் ஆரம்பித்த இடத்திர்க்கே வந்து சேர்க்கிறார்கள் ... இதுதான் கதை ... இதில் சோகங்கள் , ஏமாற்றங்கள் , மகிழ்ச்சி , நம் கலாச்சாரம் , காதல் , தாய்மை , விரக்தி என்று சகலவற்றையும் நமக்குள் விதைத்து நாமே அந்த பயணத்தை மேற்கொண்டதை போல சந்தோசத்தையும் அதே சமயம் சிறு அயர்ச்சியையும் தந்து படம் நிறைவடைகிறது ...

இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் வைத்து ஒரு பெரிய விளக்கவுரையே  கொடுக்கலாம்... மிகவும் நுட்பமான அதே சமயம் சுவாரஷ்யமான காட்சிகள் படம் நிறைய வந்து கொண்டே இருக்கும்... இதற்காகவே இயக்குனரை நிறைய பாராட்டலாம்... அதே போல படம் முழுவதும் சோகம் திரைக்கதையோடு சேர்ந்து பயணம் செய்துகொண்டே இருந்தாலும் ஒவ்வொரு காட்சியும் நம்மை சிரிக்க வைக்கின்றன அந்த சோகம் சிதையாமல் ..... இதுபோன்ற ஒரு மேஜிக் இதற்க்கு முன் தமிழில் வந்திருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை...


படம் முழுவதும் பெண்களின் வாழ்வு முறையை மைய படுத்தியே இருக்கிறது அவர்களின் சோகங்கள் , தாய்பாசம் , அடிமைத்தனம் என்று ....நம் சமூகம் அவர்களை பெண்மை என்னும் ஒரு சொல்லுக்குள் எப்படி அடக்கி வைத்திருக்கிறது என்று கதையோடு இயந்து சொல்லி இருக்கிறது இந்த படம்...அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ எதை எல்லாம் இழக்க வேண்டி இருக்கிறது என்று செவிட்டில் அறைந்தார் போல கூறி இருக்கிறது இந்த படம்... நம் கலாச்சாரத்தின் படி குடும்பம் என்பது ஒரு வேலி .. அது ஒரு பெண் தன் பாதுகாப்பிர்க்காக போட்டு கொள்ளுவது ... ஒரு முறை அந்த வேலிக்குள் சிக்கி கொண்டால் அவளே நினைத்தாலும் அந்த வேலியை விட்டு வெளிவர முடியாது ... சிக்கல்கள் நிறைந்த முள்வேலி அது ... எதையும் வெல்லும் வலிமை படைத்த தாய்பாசம் கூட அந்த வேலியின் முன்னாள் தோற்று நிற்கிறது இந்த படத்தில் ... அதுதான் யதார்த்தமும் கூட....


படத்தின் நடிகர்கள் பற்றி எழுத வேண்டும் என்றால் அனைவரையும் பற்றி எழுத வேண்டி வரும் ... நான் எழுதுவதை விட நீங்களே பாருங்கள்... ஒரு விஷயம் இந்த படத்தில் வரும் அந்த சிறுவனுக்கு தேசிய விருது தரவில்லை என்றால் அந்த விருதுக்கு மரியாதை கிடையாது... அதுவும் தான் தேடிவந்த அம்மாவை கடைசியில் எதிர்பாராத விதமாக சந்திக்கும் அந்த காட்சியில் அவனின் உடல்மொழி பிரமாதம்...(படம் பார்த்து இரண்டு நாட்கள் ஆகிறது .. இன்னமும் அந்த சிறுவன் என் மனதில் அப்படியே இருக்கிறான்... )



பின்னணி இசை ராஜா .... என்னை பொறுத்த வரை இது இவரின் பெஸ்ட் இல்லை என்றாலும் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து விடும்... இசையாலும்  கதை சொல்ல முடியும் என்று நீண்ட நாட்களுக்கு பின்னர் ராஜா நிரூபித்து இருக்கிறார்...

அதேபோல் ஒளிப்பதிவு , மிஷ்கினின் படங்களில் ஒளிபதிவை பற்றி சொல்லவே தேவை இல்லை... மிஷ்கின் ஜெயிலில்(மனநல விடுதி ) இருந்து தப்பி கோட்டை சுவர் ஏறி  குதிக்கும் காட்சியில் வரும் கேமரா கோணம் அட்டகாசம் .. அதே போல ஆஸ்பத்திரியில் இருந்து மிஷ்கினும் சிறுவனும் இருட்டில் நடக்கும் போது வெளிச்சத்திர்க்கு  மாதா  சிலையில் இருந்து மெழுகுவர்த்தியை எடுத்து கொண்டு போகும் காட்சி இந்த படத்தில் ஒளிபதிவில் என்னை கவர்ந்த காட்சி... அதே போல ரோட்டில் நடக்கும் போது வந்து போகும் பல காட்சிகளில் நாம் இதுவரை பார்க்காத பல கோணங்களை காட்டி இருக்கிறார் ... தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்..


மிஷ்கினை பற்றி சொல்ல வேண்டுமானால் நடிகனாகவும் இயக்குனராகவும் பல படிகள் தாண்டி மேலே சென்று விட்டார் இந்த நந்தலாலாவின் மூலமாய்...


இப்படி குறிஞ்சி பூ பூப்பதை போன்ற அபூர்பமான படமாய் இருந்திருக்க வேண்டிய இது ஆங்காங்கே வந்த சில நெருஞ்சி முற்களால் அந்த தகுதியை இழக்கிறது ... பல இடங்களில் தலை தூக்கும் நாடகதன்மை ரொம்பவே  படத்தை கீழே இழுத்து விடுகிறது...  அப்படிப்பட்ட சில காட்சிகளை பார்க்கும் போது இந்த படத்தையா இவ்வளவு பாராட்டி எழுதுகிறார்கள் என்று உங்களுக்கு தோன்றலாம் ... அதே போல பெண்களை தைரியம் இல்லாதவர்களாக காட்டி இருக்கும் மனபாங்கு எனக்கு புரியவே இல்லை .. ஏன் நம் ஊர் பெண்கள் எல்லாம் இப்படிதான் இருக்கிறார்களா? ஒருத்தன் ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டால் அந்த பெண் உடனே விபச்சாரத்திற்கு வந்து விடுவாளா? அப்படிப்பட்ட பெண்களுக்கு அதை விட்டால் வேறு வழியே இல்லையா? இந்த படமும் மறைமுகமாக நம் ஊர் பெண்களை இறக்கி பிடிப்பதை போலத்தான் இருக்கிறது எனக்கு...

ஒரு ஒல்லி பிச்சானிடம் பயந்து ஓடும் மிஷ்கின் , பீர் பாட்டிலை கொண்டு காரில் வரும் நான்கு வாலிபர்களை  அடித்து விரட்டுவது என்ன லாஜிக் என்று தெரியவில்லை .... புண்ணில் எச்சில் தடவி விட்டவுடன் ஒரு பெண்ணிர்க்கு யார் என்றே தெரியாத ஒரு ஆணிடம் ஈர்ப்பு வந்து விடுமா? அந்த பெண்ணுக்குள் வரும் பாசம் எந்த வகையானது? புரியவில்லை ...


நந்தலாலா தமிழ் சினிமாவில் பரவி இருக்கும் இருட்டை போக்க மிஷ்கின் ஏற்றி இருக்கும் சின்ன மெழுகுவர்த்தி... இருள் நீங்க இன்னும் பல மெழுகுவர்த்திகள் தமிழ் சினிமாவில் ஒளிர  வேண்டும் என்றால்  நாம் தான் இது அணைந்துவிடாமல் நம் கரங்களை தந்து இதை காப்பாற்ற வேண்டும் ..

இதன் ஒளியை மிஷ்கின் ஜப்பான் இயக்குனரிடம் இருந்து ஏற்றி  (may be திருடி) இருக்கிறார் என்றாலும் இருட்டில் தத்தளிக்கும் நம் சினிமாவிர்க்கு பாதை காட்டும் வெளிச்சமாய் அது இருக்கும் என்றால் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்...

யதார்த்த சினிமாக்கள் பிடிக்கும் என்றாள் தாராளமாக ஒரு முறை சென்று அனுபவித்து விட்டு வாருங்கள் 




5 comments:

Arun Prasath said...

me the first

"ராஜா" said...

@ அருண் பிரசாத்

பதிவை பத்தி எதுவும் சொல்லாம ஓடிட்டீங்களே..

ராஜகோபால் said...

என்னை பொருத்தவரைக்கும் காட்சிப்பிழை இந்த நந்தலாலா

Yoganathan.N said...

//இருள் நீங்க இன்னும் பல மெழுகுவர்த்திகள் தமிழ் சினிமாவில் ஒளிர வேண்டும் என்றால் நாம் தான் இது அணைந்துவிடாமல் நம் கரங்களை தந்து இதை காப்பாற்ற வேண்டும் .. //

இந்த வரி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அருமை. :)

படம் இனிமேல் தான் பார்க்கனும்.

NaSo said...

உங்கள் விமர்சனம் நல்லாருக்குங்க. இனிமேல் தான் படத்தை பார்க்கணும்.

LinkWithin

Related Posts with Thumbnails