Followers

Copyright

QRCode

Friday, March 9, 2012

டிராவிட் - போய் வா சாதனை மன்னா!!!


இது ஒரு மீள் பதிவு...... இந்த பதிவை  மீளேற்றுவேன்  என்று முன்னரே தெரியும் ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று சத்தியமாக நினைக்கவில்லை ... என்னை போன்ற டிராவிட் ரசிகர்களுக்கு  இன்று கருப்பு  தினம்  என் பதின்ம வயது ஹீரோக்களில் ஒருவர் திராவிட் .  எம் ஜி ஆர்    மறைந்த  பொழுது  அவரின் ரசிகன் என்னமாதிரியான மனநிலையில் இருந்திருப்பானோ அதே போன்ற ஒரு மனநிலையில் இன்று நானிருக்கிறேன்   



அசார் , ஜடேஜா , மனோஜ் பிரபாகர் போன்ற ஜாம்பவான்கள் எல்லாரும் அணியை விட்டு விடை பெற்றிருந்த நேரம் , அணியில் இருந்தவர்களில் சச்சினை தவிர மற்ற எல்லாரும் கேளிக்கைகள் , சூதாட்டம் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இந்திய அணி கொஞ்சம் கொஞ்சமாக கட்டெறும்பாக சிறுத்து கொண்டிருந்த காலம் ... அதற்க்கு முன்பு கட்டெறும்பாக இருந்த இலங்கை , ஜிம்பாபே  போன்ற அணிகள் எல்லாம் யானை பலம் பெற்று இந்திய அணியை வெளுத்து வாங்கி கொண்டிருந்தார்கள்...  இதிலிருந்து மீண்டு மீண்டும் இந்தியா அசுரபலத்தோடு வந்து விடாதா என்று ரசிகர்கள் அனைவரும் ஏங்கி கொண்டிருந்த நேரம் சரியாக அந்த இருவர் அணிக்குள் வந்து சேர்ந்தார்கள்...அவர்கள் கங்குலி மற்றும் டிராவிட்... டிராவிட்டின் ஆரம்பம் அப்படி ஒன்றும் சிறப்பாக அமையவில்லை, 1996 ஆம் ஆண்டு வினோத் காம்ப்ளிக்கு பதிலாக இலங்கை  அணிக்கு எதிராக களம் இறக்கபட்டார் , அந்த ஆட்டத்தில் வெறும் மூன்று ஓட்டங்களை மட்டுமே பெற்றார் , அதை தொடர்ந்து பாக்கிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவரால் நான்கு ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது ,. அதை தொடந்து அவர் அணியில் இருந்து கழட்டி விட பட்டார் , அனைவரும் டிராவிட் என்ற ஒருவனை மறந்தே விட்டார்கள் ...


24 ஜூன் 1996 இந்த நாள் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்த நாள், ஏன் உலக கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாளாகவே அது அமைந்து விட்டது ... காரணம் டெஸ்ட் மற்றும் ஒன் டே இரண்டு விதமான ஆட்டங்களிலும் பல சாதனைகளை படைத்த கங்குலி மற்றும் டிராவிட் இருவரும்  தங்களின் முதல் டெஸ்ட் ஆட்டத்தை ஒன்றாக தொடங்கிய நாள் அது... டிராவிட்டுக்கு ஒரு நாள் போட்டியில் ஆரம்பம் சொதப்பினாலும் , டெஸ்ட் போட்டி அமர்க்களமாக ஆரம்பம் ஆனது... முதல் டெஸ்ட் இன்னிங்சில் 95 ஓட்டங்களை பெற்றார்... இந்த மிக பெரிய சுவரின் முதல் செங்கல் அன்றுதான் வைக்கபட்டது... முதலில் மஞ்ச்ரேக்கர் காயம்பட்டதால் அணியில் இறக்கபட்டவர் , பிறகு அடுத்த ஆட்டத்தில் மஞ்ச்ரேக்கர் திரும்பிய பிறகும் அணியில் நீடித்தார் .. அடுத்த ஆட்டத்திலும் 84 ஓட்டங்களை பெற சுவரின் வெற்றி பயணம் இனிதே ஆரம்பம் ஆனது... அதன் பிறகு தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக அவர்கள் மண்ணில் நடந்த டெஸ்டில் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்... அது அவருக்கு அணியில் ஒரு நிரந்திர இடத்தை பெற்று தந்தது




ஆனால் அதே நேரத்தில் அவரின் ஒரு நாள் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை... ஒரு காலத்தில் டிராவிட் கையில் பேட்டோடு மைதானத்தில் இறங்கி விட்டாலே பலரும் டிவியை ஆஃப் செய்து விடுவார்கள்  ... டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை போலவே ஒரு நாள் போட்டியிலும் பொறுமையாக ஆடிக்கொண்டிருப்பார்... ஒரு வழியாக தடவி தடவி ஆடி தன்னுடைய பத்தாவது மாட்சிள் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் அரைசதம் கடந்தார்...

அதே நேரம் டெஸ்டில் அவர் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் அருமையாக பயன்படுத்தி இந்திய அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக உருமாறி கொண்டிருந்தார்... 1999 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரே போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும்  சதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்... இன்று வரை  இந்த சாதனையை செய்த இந்திய வீரர்கள் விஜய் ஹசாரே , கவாஸ்கர் மற்றும் டிராவிட் மட்டும்தான் .. டிராவிட் இரண்டு முறை இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்( 2005 இல் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருமுறை).. அந்த போட்டிக்கு பின்னர் உலக அளவில் அவரின் புகழ் பரவ தொடங்கியது...



அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 1999 ஆம் வருடம் மறக்க முடியாத ஒரு வருடம் ...அந்த  ஆண்டு நடந்த உலக கோப்பை அவருக்கு ஒரு நாள் போட்டிகளிலும் பெரும் புகழை அள்ளி தந்தது... அந்த உலக கோப்பையில் டிராவிட்தான் ஹீரோ... ஒட்டுமொத்தாம 421 ஓட்டங்களை குவித்து அந்த தொடரில் அதிக ஓட்டங்களை குவித்தவர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.. இதற்க்கு முன் அந்த சாதனையை செய்த ஒரே இந்திய வீரர் சச்சின் மட்டுமே(1996 உலககோப்பை தொடர் , 2003 உலக கோப்பை தொடரில் மீண்டும் ஒரு முறை  )...  மேலும் உலக கோப்பை தொடரில் back to back century அதாவது தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதமடித்த ஒரே இந்திய வீரர் அவர்தான்... 1999 உலக கோப்பை போட்டியில் கென்யா மற்றும் இலங்கை அணிக்கு எதிராக தொடர்ந்து சதமடித்து அந்த சாதனையை நிகழ்த்தினார்... மேலும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவரும் கங்குலியும் இணைந்து எடுத்த 318 ஓட்டங்கள் இன்றுவரை ஒரு நாள் போட்டியில் ஒரு ஜோடி இணையாக எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.. அப்படி என்றாள் முதல் அதிகபட்ச ஓட்டம்?  அதே வருடம் அவர் இந்த சாதனையையும்   நிகழ்த்தினார் , இந்த முறை சச்சினுடன் இணைந்து , நவம்பர் மாதம் 8 ஆம் தேதி ஹைதராபாதில் வைத்து நியூஸீலாந்து அணிக்கு எதிராக அவரும் சச்சினும் இணைந்து  இணையாக 331 ஓட்டங்கள் எடுத்தார்கள்.. இது இன்று வரை யாராலும் முறியடிக்கபடவில்லை...  



2001 ஆம் வருடம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சாதனையை வேறு ஒரு வீரருடன் இணைந்து நடத்தினார்.. அது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே நடந்த அதிசயம்... இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கொல்கத்தாவில் நடந்த போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 445 ஓட்டங்களை குவிக்க , இந்தியாவோ 171 ஓட்டங்களில் வீழ்ந்து ஃபாலோ ஆன் வாங்கியது.. அதற்கு முன்னாள் நடந்த ஆட்டத்தில் இந்தியா மரண அடி வாங்கி இருந்தது , இதனால் இந்த ஆட்டமும் அவ்வளவுதான் என்று அனைவரும் நினைக்க , ஆட்டத்தின் மூன்றாவது நாள் மைதானம் வெறிச்சோடி கிடந்தது , ஆனால் டிராவிட்டும் லக்ஷ்மணனும் அந்த அதிசயத்தை நடத்தி காட்டினார்கள்.. இரண்டாவது இன்னிங்சில் அவர்கள் இணைந்து 376 ஓட்டங்கள் எடுக்க இந்தியா 657 ஓட்டங்களை குவித்தது... நான்காம் நாள் மைதானம் நிரம்பி வழிந்தது... டிராவிட் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை ரன் அவுட் மூலம் தவற விட்டார்... ஆனால் லக்ஷ்மன் அபாரமாக ஆடி 281 ஓட்டங்கள் குவித்தார்... கடைசி நாளில் ஹர்பஜன் பௌலிங்கில் அசத்த ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 212 ஓட்டங்களில் சுருண்டது... இந்தியா 171 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரித்திர புகழ் பெற்ற வெற்றியை பெற்றது...



அதற்க்கு பின்னர்தான் the wall (கிரிக்கெட் பெருஞ்சுவர்) என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது.. அவரும் அந்த பேருக்கு ஏற்றவாறே பல ஆட்டங்களில் தனி ஒருவராக போராடி இந்திய அணிக்கு பல வெற்றிகளை மட்டும் அல்லாது , பல நேரங்களில் தோல்விகளில் இருந்தும் காப்பாற்றி இருக்கிறார்... அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு டெஸ்ட் சதங்கள் , ஒரே ஆண்டில் மூன்று இரட்டை சதங்கள் என்று அவரின் சாதனைகள் தொடர்ந்தன... 2004 ஆம் வருடம் ஐ‌சி‌சி முதல் முறையாக கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் முறையை நடைமுறைபடுத்தியபோது , சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் வீரர் விருதுகளை முதல் முறையாக அவருக்குதான் வழங்கியது... கிரிக்கெட் சாம்ராஜியத்தின் பேரரசன் டிராவிட்டின் மகுடத்திர்க்கு ஐ‌சி‌சி சூட்டி அழகுபார்த்த வைரக்கல்கள் அந்த விருதுகள்... அந்த வருடம் ஆஸ்திரேலியாவின் அடிலைடில் வைத்து அவர்களை திராவிட்டும் லக்ஷ்மணனும் மீண்டும் ஒரு முறை அடித்து துவைத்தார்கள்...




இப்படியாக அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் மின்னவில்லை , ஒரு நாள் போட்டிகளிலும் பல சாதனைகளை படைத்து இருக்கிறார்... சச்சின் கங்குலிக்கு பிறகு 10,000 ஓட்டங்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் அவர் மட்டுமே... 1996 முதல் 2007 வரை இந்திய அணியை தூக்கி சுமந்த மூன்று வீரர்கள் , சச்சின் , கங்குலி மற்றும் டிராவிட் மட்டுமே... மேம்போக்காக பார்த்தால் சச்சினும் , கங்குலியும் பல சாதனைகளை புரிந்ததை போல தெரியும் , ஆனால் அவர்களுக்கு மனதளவில் உறுதுணையாக இருந்தவர் டிராவிட்தான்... எந்த சூழ்நிலையில் இறங்கினாலும் அதற்க்கு ஏற்றார் போல ஆடும் திறன் படைத்தவர்... சச்சினும் கங்குலியும் தொடக்கத்தில் பயமின்றி வேகமாக அடித்தாட காரணம்  அவர்களுக்கு பின்னால் டிராவிட் என்னும் பெருஞ்சுவர் விளையாட இருப்பதுதான்.. இதை சச்சினே பல முறை பேட்டிகளில் கூறி இருக்கிறார்...   2003 உலககோப்பை தொடரில் அவரின் சராசரி 67 ஓட்டங்கள் , இதுதான் அந்த தொடரில் ஒரு தனிப்பட்ட இந்திய வீரரின் அதிகபட்ச சராசரி ஆகும்.. இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் அந்த தொடர் முழுவதும் விக்கெட் கீப்பராக அவரே செயல்பட்டார்...


ஒரு வீரராக மட்டும் இல்லாமல் , சிறந்த தலைவராகவும் அவர் அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார்... அதில் மிக சிறந்த ஒன்று பாகிஸ்தானுக்கு எதிராக பாக்கிஸ்தான் மண்ணில் அவர் தலைமையில் பெற்ற  முதல் டெஸ்ட் வெற்றி மற்றும் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி... 2004 ஆம் ஆண்டு நடந்த அந்த தொடரில் கங்குலி காயம் காரணமாக விளையாட இயலாமல் போக , அணியை டிராவிட் வழி நடத்தினார்... முதல் டெஸ்ட் முல்தானில் நடந்தது... சச்சின் மற்றும் லக்ஷ்மணனின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை முதன் முதலாக பாகிஸ்தான் மண்ணில் அவர்களுக்கு எதிராக பெற்றது... ஆனால் அந்த ஆட்டத்தில் சச்சின் 194 ஓட்டங்கள் பெற்றிந்த பொது டிராவிட் டிக்ளேர் செய்தது சர்ச்சைக்குரிய விஷயமாக அப்பொழுது பேசபட்டது...  அந்த தொடரின் மூன்றாவது போட்டி ராவல்பிண்டியில் நடந்தது , அதில் டிராவிட்டின் இரட்டை சதத்தினால் இந்தியா மீண்டும் இன்னிங்ஸ் வெற்றி பெற்று முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது...



ஒருநாள் தொடரில் டிராவிட் செய்திருக்கும் ஒரு நம்பமுடியாத சாதனை , குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரர்களின் வரிசையில் அவர் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் என்பதுதான்.. (22 பந்துகளில்)...

இப்படி இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்திருக்கும் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை 2006 ஆம் ஆண்டிற்கு பின் அஸ்தமனம் ஆக தொடங்கியது... 2007 இல் நடந்த உலககோப்பை தொடருக்கு இந்திய அணிக்கு தலைவராக நியமிக்கபட்டார் , ஆனால் ஓட்டு மொத்த அணியும் சொதப்பி எடுக்க , இந்தியா முதல் சுற்றோடு வெளிவந்தது , இந்திய அணியின் மிக மோசமான உலககோப்பை தொடராக அது அமைந்தது டிராவிட்டின் துரதிர்ஷ்டம்... அதன் பின்னர் இந்திய அணி மாற்றி அமைக்கபட்டதில் டிராவிட் ஓரம்கட்டபட்டார். அதன் பின்னால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கு எடுக்கபடவே இல்லை... ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் தவிர்க்க முடியாத சக்தியாக இன்று வரை இருந்து வருகிறார்... இப்பொழுது நடந்த இங்கிலாந்து தொடரில் அணி ஒட்டுமொத்தமாக வெள்ளையடிக்கபட (whitewash) , இவர் மட்டும் மூன்று சதங்கள் அடித்து தொடர்நாயகன் விருதை வென்றார்... அதன் பின்னர் நடந்த ஒருநாள் தொடரில் நீண்ட வருடங்களுக்கு பிறகு டிராவிட் கலந்து கொண்டு அதன் கடைசி ஆட்டதோடு ஒரு நாள் போட்டிகளில் இருந்து விடை பெற்று கொண்டார்...



அதன் பின் கடைசியாக அவர் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரால் பிரகாசிக்க இயலாமல் போக இதோ இன்று  டெஸ்ட் போட்டிகளிலும் அவர்  தன ஓய்வை அறிவித்து  விட்டார்  , என்னை போன்ற லட்சக்கணக்கான டிராவிட் ரசிகர்களுக்கு இது பெரிய வருத்தமான விஷயம்தான்... இந்தியாவில் பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் கிரிக்கெட் ரசிகர்களில் , எங்கள் தலைமுறை ரசிகர்களின்  மூன்று கதாநாயகர்களில் முக்கியமானவர் டிராவிட் ... நான் டவுசர் மாட்டிய சிறுவனாக இருந்த பொழுது அணிக்குள் வந்தவர்.. என்னை போன்ற 25 வயதை கடந்த கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருமே டிராவிட்டின் ஆட்டத்தை மெய்மறந்து ரசித்து , அவர் ஒவ்வொரு முறையும் நன்றாக விளையாடும்பொழுதும் பெருமையாக காலரை தூக்கி விட்டு பாராட்டியவர்கள்தான் ... குறிப்பாக இந்தியா ஜெயிக்கும்போதெல்லாம் வியர்வை வழியும் அவர் முகத்தில் தெரியுமே ஒரு புன்னகை அதற்க்கு இந்தியாவே அடிமை... சிறிது கூட கர்வமே கலந்து விடாத  குழந்தை சிரிப்பு அது ... ஆனால் அந்த புன்சிரிப்பு  இனிமேல் மைதானங்களில் காணக்கிடைக்காது...  சீன பெருஞ்சுவர் கட்டப்பட்ட பொது அதை அருகில் இருந்து பார்த்தவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்களோ , அதை விட அதிக மடங்கு கொடுத்து வைத்தவர்கள் நாம், ஆமாம் இந்த இந்திய பெருஞ்சுவர் விளையாடுவதை காணும் பாக்கியம் இனிவரும் தலைமுறைக்கு வாய்க்கபோவதில்லை , அந்த வகையில் நாம் கொடுத்துவைத்தவர்கள்தான்..           




இந்திய அணி ஒரு கோவில் என்றால்
சச்சின் அதன் முதன்மை கடவுள்
கங்குலி அதன் வழிகாட்டி கடவுள்
சேவாக் அதன் சக்தி வாய்ந்த கடவுள்
ஆனால் எதிரிகளின் தாக்குதல் அதிகமாகும் பொழுது
இந்த கடவுள்களே கோவிலின் சுவற்றின் பின்னால்தான் ஒழிந்து கொண்டு தங்களை காத்து கொள்ள வேண்டும்...
அந்த சுவர் எங்கள் டிராவிட்....
டிராவிட் இல்லாத இந்திய அணி
சுவர் இல்லாத தங்க கோவில் போல  
அங்கு கடவுள்களுக்கே பாதுகாப்பு கிடையாது ...

கங்குலி வெளியேறிய போதே நிறைய கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள் , இப்பொழுது டிராவிட் ,இதன் பின்னால் கிரிக்கெட் மீதான ஈடுபாடு பலருக்கு குறைந்து விடும் ...  இன்னமும் இந்திய கிரிக்கெட் அணியின் தூணாக இருக்கும் ஒரே நபர் சச்சின் மட்டும்தான் , அவரும் வெளியேறிவிட்டால் இந்திய கிரிகேட்டின்  அந்திம காலம்  முடிவுக்கு வந்துவிடும்  ... காரணம் இவர்கள் ஆடிய ஆட்டத்தை பார்த்த எங்களுக்கு கடவுளே வந்து மட்டை பிடித்து கிரிக்கெட் ஆடினாலும் பார்க்க பிடிக்காது...

உலகில் எல்லா விசயங்களுக்கும் மாற்று உண்டு என்று சொல்லுவார்கள் , ஆனால் டிராவிட்டுக்கு மாற்று அவருடைய மறுபிறவியில் அவர் மீண்டும் இந்தியாவில் ஒரு ஆண்மகனாக பிறந்து வந்தால் மட்டுமே கிடைக்கும்... அப்பொழுது நாங்களும் எங்கள் மறுபிறவியில் இதே இந்தியாவில் கிரிக்கெட் ரசிகனா இருந்தால் மட்டுமே மீண்டும் எங்களால் கிரிக்கெட்டை நேசிக்க ரசிக்க முடியும்... (இது டிராவிட்டுக்கு மட்டும் இல்லை , கங்குலி , சச்சினுக்கும் பொருந்தும்)...



நேற்றுதான் அந்த 1999 ஆம் ஆண்டு உலககோப்பை இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தை நண்பர்களோடு ஒவ்வொரு பந்திற்கும் குதித்து  கொண்டே டீவியில் பார்த்தை போல இருக்கிறது... அந்த மூன்று மணிநேரங்களில் நீங்கள் எங்களுக்கு கொடுத்த சந்தோசத்திர்க்கு விலையே இல்லை... கடந்த பத்து வருடங்களாக இதே போன்ற பல விலைமதிக்க முடியாத மூன்று  மணிநேரங்களை எங்களுக்கு தந்திருக்கிறீர்கள்... எங்களால் நன்றியை தவிர வேறு எதையும் திருப்பி தர முடியாது, அந்த ஒவ்வொரு சந்தோஷமான மணிதுளிகளும் உங்களுக்கு சந்தோஷமான பத்து மணிதுளிகளாக திருப்பி தர ஆண்டவனை பிராத்தனை செய்கிறோம் நாங்கள் ....


ஏனோ தெரியவில்லை ஒரு நண்பனின் மரணம் தருகின்ற வலியை தந்துவிட்டன நீங்களும் , கங்குலியும் ஓய்வு பெற்ற தருணங்கள்...  


     

இந்திய அணியின் நான்கு சிங்கங்கள் என்று வர்ணிக்கப்பட்டவர்கள்  சச்சின் , கங்குலி , டிராவிட் , லச்மன்....  இவர்களில் சச்சினும் லச்மனும் மட்டுமே இன்னும் விளையாடி கொண்டிருகிறார்கள் , லச்மன் கூடிய விரைவில் ஓய்வு பெற்று விடுவார் , இந்த மூவரும் ஓய்வு பெற்று விட்டால் சச்சினுக்கும் ஓய்வு பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் உருவாகலாம். இப்பொழுது இந்திய அணியின் முன்னாள் இருக்கும் பெரிய பிரச்சனை இவர்களுக்கு மாற்று தேடுவதுதான் , ஆனால் கண்டிப்பாக அது நடக்ககூடிய காரியம் இல்லை. என்னதான் அடுத்து விராட் கோலி போல துடிப்பான வீரர்கள் வந்தாலும் இவர்களுக்கு மாற்றாக அவர்களை எடுத்துகொள்ள முடியாது ... பார்த்திபன் கூறியதை கொஞ்சம் உல்டா பண்ணி சொன்னா " டார்ச் லைட்டுலயும் வெளிச்சம் வருதுங்கிரதுக்காக அதையெல்லாம் சூரியனோட கம்பேர் பண்ண முடியாது பாஸ்"



4 comments:

அகல்விளக்கு said...

Miss him so much...
Best wishes to his further career... :-)

Karthikeyan said...

இது காலத்தின் கட்டாயம். எதிர்பார்த்த இழப்புதான். இவரின் இடத்தினை கோலி நிரப்புவார் என்பது என் கணிப்பு.

Prem S said...

அருமையான கட்டுரை டிராவிட்டை மிகவும் நேசிப்பது தெரிகிறது உண்மை தான் அவர் சுவரல்லவா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எனக்கும் எப்போதும் மற்ற வீரர்களை விட திராவிடையே பிடிக்கும், தன்னலமற்றவர்.

LinkWithin

Related Posts with Thumbnails