Followers

Copyright

QRCode

Friday, March 16, 2012

"தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" - தமிழா தமிழா




நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை , பார்க்கும் தைரியமும் இல்லை , அந்த காணொளியை பற்றி பல தளங்களிலும் வந்த பல செய்திகளை படித்த பொழுதே கண்ணில் கண்ணீர் வருகிறது , என்னடா கொடுமை செய்தார்கள் எம்தமிழ் மக்கள் உனக்கு , தமிழ் இனம் என்று இல்லை உன்னுடைய சிங்கள இனம் துன்பபட்டாலும் அதை கண்டு மனம் துடிப்பவன்தான் தமிழன் , தமிழன் வீரத்துக்கு மட்டும் இல்லை இரக்கத்துக்கும் பெயர் போனவன் , ஒரு எறும்பு கூட தன் காலில் மிதிபட்டு இறந்துவிட   கூடாது என்று எண்ணிய புத்தனை தங்கள் கடவுளாக ஏற்றுகொண்ட உங்களின் லட்சணம் இதுதானா? கூப்பிடும் தூரத்தில் நம் சொந்த இனம் அழிக்கப்பட்டு கொண்டிருந்த பொழுது இங்கே வட இந்தியன் ஒருவன் நன்றாக கிரிக்கெட் ஆடியதை சந்தோசமாக பார்த்து கொண்டு எதுவும் செய்யாமல் குறைந்த பட்சம் உங்களின் துன்பங்களை கூட அறிந்து கொள்ள ஆர்வமில்லாமல் சுயநலமாய் இருந்த எங்களை   வரலாறு  என்றும்  மன்னிக்காது.

இலங்கையில் கிரிக்கெட் மேட்ச் நடந்தால் அதை முதல் பக்கத்தில் வண்ண படங்களோடு செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் இவ்வளவு பெரிய இனபடுகொலை நடந்த பொழுது கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்திருப்பது எவ்வளவு பெரிய துரோகம் , அங்கெ பச்சிளம் குழந்தைகள் கொத்து கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்ட பொழுது இங்கே சிம்ரனுக்கு இடுப்பு வலி வந்ததையும் , சிம்ரனுக்கு ஆண் குழந்தை பிறந்ததையும் நமக்கு தலைப்பு செய்தியாக திணித்த அவர்களின் துரோகத்தை என்னவென்று சொல்லுவது , அங்கே வாழும் தமிழனும் ஒருவகையில் இந்தியன்தான் , எந்த நாடாவது தன் சொந்த நாட்டுகாரனை கொத்து கொத்தாக கொன்றுகுவிக்க துணை போகுமா?  ஆனால் என் இந்திய திருநாடு அந்த வேலையை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறது. அதற்க்கு பதவி வெறி பிடித்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் உடந்தை , தன்னுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் , தன்னுடைய வாரிசுகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் என்று ஏழு தலைமுறையும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று பதவி வெறியில் மத்திய அரசு தூக்கி போடும் எழும்பு துண்டை கவ்வி கொண்டு தன் சொந்த இனத்தையே பலிகொடுத்து இன்று அந்த பிணத்தின் மீது நின்று அரசியல் வியாபாரம் செய்யும் இவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்க போகிறது? கொலை செய்பவன் மட்டும்தான் குற்றவாளியா? தன் சகோதரனை ஒருவன் துன்புறுத்தும் பொழுது அதை தடுத்து நிறுத்தும் அதிகாரம் இருந்தும் தன்னுடைய சுய நலத்துக்காக தடுக்காமல் அதை வேடிக்கை பார்ப்பவனும் குற்றவாளியே.  அந்த வகையில் ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவிக்க துணை போன இவர்களுக்கு நாம் என்ன தண்டனை கொடுக்க போகிறோம்..

அமேரிக்கா இன்று ஐ நா சபையில் அந்த அரக்கர்களுக்கு (அமெரிக்காவே ஒரு அரக்கன்தான் என்பது வேறு விஷயம், ஆனால் இன்று அவர்கள் நமக்கு ஆத்மபாந்தனாக தெரிவது கால கொடுமை), எதிராக தீர்மானம் கொண்டு வரும்பொழுது நம் இந்தியா அதை எதிர்க்க போகிறதாம் , கேட்டால் இலங்கை நம் பாரம்பரிய நட்பு நாடு வராலாற்று ரீதியாக நம்முடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் , அவர்கள் மனம் நோகும்படியாக இந்தியா எதுவும் செய்யாது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் நம் பிரதமர் , அப்படி என்றால் தமிழன் யார்? அன்று தமிழன் படுகொலை செய்யப்பட்ட பொழுது இந்த கரிசனம் ஏன் வரவில்லை? சிங்களவனின் மீது சிறு நகம் கூட பட்டுவிடக்கூடாது என்று துடிக்கும் நீங்கள் தமிழனின் கண்ணை குத்தி கிழிக்க துணை போனது ஏன்? 

அவர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட பொழுதுதான் அமைதியாக இருந்தோம் , இன்று அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைப்பதர்காகவாவது போராடுவோம்... பதிவுலகம் சார்பில் இதுவரை ஈழ மக்களுக்கு கண்ணீர் அஞ்சலிதான் செலுத்தியிருக்கிறோம் , இதோ அவர்களுக்காக நாம் போராட , நாம் செய்த பாவத்தை கொஞ்சம் துடைத்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது , ஐ நா சபையில் அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று நாம் ஏன் பதிவுலகம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க கூடாது. நம் மனதில் கொழுந்து விட்டு எரியும் தீயை சிறு பொறியாக இந்த சமூகத்தில் இறக்கி வைப்போம் அது ஒரு நாள் காட்டு தீயாக மாறி குற்றம் செய்தவர்களை சாம்பலாக்கும் என்ற நம்பிக்கையோடு...   

நான் என் மனதில் தோன்றியதை எழுதி இருக்கிறேன் , இது சாத்தியமா இல்லையா என்று தெரியவில்லை , ஆனால் அனைத்து பதிவர்களும்  மனது வைத்தால் இது கண்டிப்பாக நடக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது 


Friday, March 9, 2012

டிராவிட் - போய் வா சாதனை மன்னா!!!


இது ஒரு மீள் பதிவு...... இந்த பதிவை  மீளேற்றுவேன்  என்று முன்னரே தெரியும் ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று சத்தியமாக நினைக்கவில்லை ... என்னை போன்ற டிராவிட் ரசிகர்களுக்கு  இன்று கருப்பு  தினம்  என் பதின்ம வயது ஹீரோக்களில் ஒருவர் திராவிட் .  எம் ஜி ஆர்    மறைந்த  பொழுது  அவரின் ரசிகன் என்னமாதிரியான மனநிலையில் இருந்திருப்பானோ அதே போன்ற ஒரு மனநிலையில் இன்று நானிருக்கிறேன்   



அசார் , ஜடேஜா , மனோஜ் பிரபாகர் போன்ற ஜாம்பவான்கள் எல்லாரும் அணியை விட்டு விடை பெற்றிருந்த நேரம் , அணியில் இருந்தவர்களில் சச்சினை தவிர மற்ற எல்லாரும் கேளிக்கைகள் , சூதாட்டம் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இந்திய அணி கொஞ்சம் கொஞ்சமாக கட்டெறும்பாக சிறுத்து கொண்டிருந்த காலம் ... அதற்க்கு முன்பு கட்டெறும்பாக இருந்த இலங்கை , ஜிம்பாபே  போன்ற அணிகள் எல்லாம் யானை பலம் பெற்று இந்திய அணியை வெளுத்து வாங்கி கொண்டிருந்தார்கள்...  இதிலிருந்து மீண்டு மீண்டும் இந்தியா அசுரபலத்தோடு வந்து விடாதா என்று ரசிகர்கள் அனைவரும் ஏங்கி கொண்டிருந்த நேரம் சரியாக அந்த இருவர் அணிக்குள் வந்து சேர்ந்தார்கள்...அவர்கள் கங்குலி மற்றும் டிராவிட்... டிராவிட்டின் ஆரம்பம் அப்படி ஒன்றும் சிறப்பாக அமையவில்லை, 1996 ஆம் ஆண்டு வினோத் காம்ப்ளிக்கு பதிலாக இலங்கை  அணிக்கு எதிராக களம் இறக்கபட்டார் , அந்த ஆட்டத்தில் வெறும் மூன்று ஓட்டங்களை மட்டுமே பெற்றார் , அதை தொடர்ந்து பாக்கிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவரால் நான்கு ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது ,. அதை தொடந்து அவர் அணியில் இருந்து கழட்டி விட பட்டார் , அனைவரும் டிராவிட் என்ற ஒருவனை மறந்தே விட்டார்கள் ...


24 ஜூன் 1996 இந்த நாள் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்த நாள், ஏன் உலக கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாளாகவே அது அமைந்து விட்டது ... காரணம் டெஸ்ட் மற்றும் ஒன் டே இரண்டு விதமான ஆட்டங்களிலும் பல சாதனைகளை படைத்த கங்குலி மற்றும் டிராவிட் இருவரும்  தங்களின் முதல் டெஸ்ட் ஆட்டத்தை ஒன்றாக தொடங்கிய நாள் அது... டிராவிட்டுக்கு ஒரு நாள் போட்டியில் ஆரம்பம் சொதப்பினாலும் , டெஸ்ட் போட்டி அமர்க்களமாக ஆரம்பம் ஆனது... முதல் டெஸ்ட் இன்னிங்சில் 95 ஓட்டங்களை பெற்றார்... இந்த மிக பெரிய சுவரின் முதல் செங்கல் அன்றுதான் வைக்கபட்டது... முதலில் மஞ்ச்ரேக்கர் காயம்பட்டதால் அணியில் இறக்கபட்டவர் , பிறகு அடுத்த ஆட்டத்தில் மஞ்ச்ரேக்கர் திரும்பிய பிறகும் அணியில் நீடித்தார் .. அடுத்த ஆட்டத்திலும் 84 ஓட்டங்களை பெற சுவரின் வெற்றி பயணம் இனிதே ஆரம்பம் ஆனது... அதன் பிறகு தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக அவர்கள் மண்ணில் நடந்த டெஸ்டில் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்... அது அவருக்கு அணியில் ஒரு நிரந்திர இடத்தை பெற்று தந்தது




ஆனால் அதே நேரத்தில் அவரின் ஒரு நாள் ஆட்டம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை... ஒரு காலத்தில் டிராவிட் கையில் பேட்டோடு மைதானத்தில் இறங்கி விட்டாலே பலரும் டிவியை ஆஃப் செய்து விடுவார்கள்  ... டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை போலவே ஒரு நாள் போட்டியிலும் பொறுமையாக ஆடிக்கொண்டிருப்பார்... ஒரு வழியாக தடவி தடவி ஆடி தன்னுடைய பத்தாவது மாட்சிள் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் அரைசதம் கடந்தார்...

அதே நேரம் டெஸ்டில் அவர் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் அருமையாக பயன்படுத்தி இந்திய அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக உருமாறி கொண்டிருந்தார்... 1999 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரே போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும்  சதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்... இன்று வரை  இந்த சாதனையை செய்த இந்திய வீரர்கள் விஜய் ஹசாரே , கவாஸ்கர் மற்றும் டிராவிட் மட்டும்தான் .. டிராவிட் இரண்டு முறை இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்( 2005 இல் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருமுறை).. அந்த போட்டிக்கு பின்னர் உலக அளவில் அவரின் புகழ் பரவ தொடங்கியது...



அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 1999 ஆம் வருடம் மறக்க முடியாத ஒரு வருடம் ...அந்த  ஆண்டு நடந்த உலக கோப்பை அவருக்கு ஒரு நாள் போட்டிகளிலும் பெரும் புகழை அள்ளி தந்தது... அந்த உலக கோப்பையில் டிராவிட்தான் ஹீரோ... ஒட்டுமொத்தாம 421 ஓட்டங்களை குவித்து அந்த தொடரில் அதிக ஓட்டங்களை குவித்தவர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.. இதற்க்கு முன் அந்த சாதனையை செய்த ஒரே இந்திய வீரர் சச்சின் மட்டுமே(1996 உலககோப்பை தொடர் , 2003 உலக கோப்பை தொடரில் மீண்டும் ஒரு முறை  )...  மேலும் உலக கோப்பை தொடரில் back to back century அதாவது தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சதமடித்த ஒரே இந்திய வீரர் அவர்தான்... 1999 உலக கோப்பை போட்டியில் கென்யா மற்றும் இலங்கை அணிக்கு எதிராக தொடர்ந்து சதமடித்து அந்த சாதனையை நிகழ்த்தினார்... மேலும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவரும் கங்குலியும் இணைந்து எடுத்த 318 ஓட்டங்கள் இன்றுவரை ஒரு நாள் போட்டியில் ஒரு ஜோடி இணையாக எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.. அப்படி என்றாள் முதல் அதிகபட்ச ஓட்டம்?  அதே வருடம் அவர் இந்த சாதனையையும்   நிகழ்த்தினார் , இந்த முறை சச்சினுடன் இணைந்து , நவம்பர் மாதம் 8 ஆம் தேதி ஹைதராபாதில் வைத்து நியூஸீலாந்து அணிக்கு எதிராக அவரும் சச்சினும் இணைந்து  இணையாக 331 ஓட்டங்கள் எடுத்தார்கள்.. இது இன்று வரை யாராலும் முறியடிக்கபடவில்லை...  



2001 ஆம் வருடம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சாதனையை வேறு ஒரு வீரருடன் இணைந்து நடத்தினார்.. அது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே நடந்த அதிசயம்... இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கொல்கத்தாவில் நடந்த போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 445 ஓட்டங்களை குவிக்க , இந்தியாவோ 171 ஓட்டங்களில் வீழ்ந்து ஃபாலோ ஆன் வாங்கியது.. அதற்கு முன்னாள் நடந்த ஆட்டத்தில் இந்தியா மரண அடி வாங்கி இருந்தது , இதனால் இந்த ஆட்டமும் அவ்வளவுதான் என்று அனைவரும் நினைக்க , ஆட்டத்தின் மூன்றாவது நாள் மைதானம் வெறிச்சோடி கிடந்தது , ஆனால் டிராவிட்டும் லக்ஷ்மணனும் அந்த அதிசயத்தை நடத்தி காட்டினார்கள்.. இரண்டாவது இன்னிங்சில் அவர்கள் இணைந்து 376 ஓட்டங்கள் எடுக்க இந்தியா 657 ஓட்டங்களை குவித்தது... நான்காம் நாள் மைதானம் நிரம்பி வழிந்தது... டிராவிட் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை ரன் அவுட் மூலம் தவற விட்டார்... ஆனால் லக்ஷ்மன் அபாரமாக ஆடி 281 ஓட்டங்கள் குவித்தார்... கடைசி நாளில் ஹர்பஜன் பௌலிங்கில் அசத்த ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் 212 ஓட்டங்களில் சுருண்டது... இந்தியா 171 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரித்திர புகழ் பெற்ற வெற்றியை பெற்றது...



அதற்க்கு பின்னர்தான் the wall (கிரிக்கெட் பெருஞ்சுவர்) என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது.. அவரும் அந்த பேருக்கு ஏற்றவாறே பல ஆட்டங்களில் தனி ஒருவராக போராடி இந்திய அணிக்கு பல வெற்றிகளை மட்டும் அல்லாது , பல நேரங்களில் தோல்விகளில் இருந்தும் காப்பாற்றி இருக்கிறார்... அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு டெஸ்ட் சதங்கள் , ஒரே ஆண்டில் மூன்று இரட்டை சதங்கள் என்று அவரின் சாதனைகள் தொடர்ந்தன... 2004 ஆம் வருடம் ஐ‌சி‌சி முதல் முறையாக கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் முறையை நடைமுறைபடுத்தியபோது , சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் வீரர் விருதுகளை முதல் முறையாக அவருக்குதான் வழங்கியது... கிரிக்கெட் சாம்ராஜியத்தின் பேரரசன் டிராவிட்டின் மகுடத்திர்க்கு ஐ‌சி‌சி சூட்டி அழகுபார்த்த வைரக்கல்கள் அந்த விருதுகள்... அந்த வருடம் ஆஸ்திரேலியாவின் அடிலைடில் வைத்து அவர்களை திராவிட்டும் லக்ஷ்மணனும் மீண்டும் ஒரு முறை அடித்து துவைத்தார்கள்...




இப்படியாக அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் மின்னவில்லை , ஒரு நாள் போட்டிகளிலும் பல சாதனைகளை படைத்து இருக்கிறார்... சச்சின் கங்குலிக்கு பிறகு 10,000 ஓட்டங்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் அவர் மட்டுமே... 1996 முதல் 2007 வரை இந்திய அணியை தூக்கி சுமந்த மூன்று வீரர்கள் , சச்சின் , கங்குலி மற்றும் டிராவிட் மட்டுமே... மேம்போக்காக பார்த்தால் சச்சினும் , கங்குலியும் பல சாதனைகளை புரிந்ததை போல தெரியும் , ஆனால் அவர்களுக்கு மனதளவில் உறுதுணையாக இருந்தவர் டிராவிட்தான்... எந்த சூழ்நிலையில் இறங்கினாலும் அதற்க்கு ஏற்றார் போல ஆடும் திறன் படைத்தவர்... சச்சினும் கங்குலியும் தொடக்கத்தில் பயமின்றி வேகமாக அடித்தாட காரணம்  அவர்களுக்கு பின்னால் டிராவிட் என்னும் பெருஞ்சுவர் விளையாட இருப்பதுதான்.. இதை சச்சினே பல முறை பேட்டிகளில் கூறி இருக்கிறார்...   2003 உலககோப்பை தொடரில் அவரின் சராசரி 67 ஓட்டங்கள் , இதுதான் அந்த தொடரில் ஒரு தனிப்பட்ட இந்திய வீரரின் அதிகபட்ச சராசரி ஆகும்.. இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் அந்த தொடர் முழுவதும் விக்கெட் கீப்பராக அவரே செயல்பட்டார்...


ஒரு வீரராக மட்டும் இல்லாமல் , சிறந்த தலைவராகவும் அவர் அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார்... அதில் மிக சிறந்த ஒன்று பாகிஸ்தானுக்கு எதிராக பாக்கிஸ்தான் மண்ணில் அவர் தலைமையில் பெற்ற  முதல் டெஸ்ட் வெற்றி மற்றும் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி... 2004 ஆம் ஆண்டு நடந்த அந்த தொடரில் கங்குலி காயம் காரணமாக விளையாட இயலாமல் போக , அணியை டிராவிட் வழி நடத்தினார்... முதல் டெஸ்ட் முல்தானில் நடந்தது... சச்சின் மற்றும் லக்ஷ்மணனின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை முதன் முதலாக பாகிஸ்தான் மண்ணில் அவர்களுக்கு எதிராக பெற்றது... ஆனால் அந்த ஆட்டத்தில் சச்சின் 194 ஓட்டங்கள் பெற்றிந்த பொது டிராவிட் டிக்ளேர் செய்தது சர்ச்சைக்குரிய விஷயமாக அப்பொழுது பேசபட்டது...  அந்த தொடரின் மூன்றாவது போட்டி ராவல்பிண்டியில் நடந்தது , அதில் டிராவிட்டின் இரட்டை சதத்தினால் இந்தியா மீண்டும் இன்னிங்ஸ் வெற்றி பெற்று முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது...



ஒருநாள் தொடரில் டிராவிட் செய்திருக்கும் ஒரு நம்பமுடியாத சாதனை , குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீரர்களின் வரிசையில் அவர் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் என்பதுதான்.. (22 பந்துகளில்)...

இப்படி இந்திய அணிக்காக பல சாதனைகளை செய்திருக்கும் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை 2006 ஆம் ஆண்டிற்கு பின் அஸ்தமனம் ஆக தொடங்கியது... 2007 இல் நடந்த உலககோப்பை தொடருக்கு இந்திய அணிக்கு தலைவராக நியமிக்கபட்டார் , ஆனால் ஓட்டு மொத்த அணியும் சொதப்பி எடுக்க , இந்தியா முதல் சுற்றோடு வெளிவந்தது , இந்திய அணியின் மிக மோசமான உலககோப்பை தொடராக அது அமைந்தது டிராவிட்டின் துரதிர்ஷ்டம்... அதன் பின்னர் இந்திய அணி மாற்றி அமைக்கபட்டதில் டிராவிட் ஓரம்கட்டபட்டார். அதன் பின்னால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கு எடுக்கபடவே இல்லை... ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் தவிர்க்க முடியாத சக்தியாக இன்று வரை இருந்து வருகிறார்... இப்பொழுது நடந்த இங்கிலாந்து தொடரில் அணி ஒட்டுமொத்தமாக வெள்ளையடிக்கபட (whitewash) , இவர் மட்டும் மூன்று சதங்கள் அடித்து தொடர்நாயகன் விருதை வென்றார்... அதன் பின்னர் நடந்த ஒருநாள் தொடரில் நீண்ட வருடங்களுக்கு பிறகு டிராவிட் கலந்து கொண்டு அதன் கடைசி ஆட்டதோடு ஒரு நாள் போட்டிகளில் இருந்து விடை பெற்று கொண்டார்...



அதன் பின் கடைசியாக அவர் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரால் பிரகாசிக்க இயலாமல் போக இதோ இன்று  டெஸ்ட் போட்டிகளிலும் அவர்  தன ஓய்வை அறிவித்து  விட்டார்  , என்னை போன்ற லட்சக்கணக்கான டிராவிட் ரசிகர்களுக்கு இது பெரிய வருத்தமான விஷயம்தான்... இந்தியாவில் பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் கிரிக்கெட் ரசிகர்களில் , எங்கள் தலைமுறை ரசிகர்களின்  மூன்று கதாநாயகர்களில் முக்கியமானவர் டிராவிட் ... நான் டவுசர் மாட்டிய சிறுவனாக இருந்த பொழுது அணிக்குள் வந்தவர்.. என்னை போன்ற 25 வயதை கடந்த கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருமே டிராவிட்டின் ஆட்டத்தை மெய்மறந்து ரசித்து , அவர் ஒவ்வொரு முறையும் நன்றாக விளையாடும்பொழுதும் பெருமையாக காலரை தூக்கி விட்டு பாராட்டியவர்கள்தான் ... குறிப்பாக இந்தியா ஜெயிக்கும்போதெல்லாம் வியர்வை வழியும் அவர் முகத்தில் தெரியுமே ஒரு புன்னகை அதற்க்கு இந்தியாவே அடிமை... சிறிது கூட கர்வமே கலந்து விடாத  குழந்தை சிரிப்பு அது ... ஆனால் அந்த புன்சிரிப்பு  இனிமேல் மைதானங்களில் காணக்கிடைக்காது...  சீன பெருஞ்சுவர் கட்டப்பட்ட பொது அதை அருகில் இருந்து பார்த்தவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்களோ , அதை விட அதிக மடங்கு கொடுத்து வைத்தவர்கள் நாம், ஆமாம் இந்த இந்திய பெருஞ்சுவர் விளையாடுவதை காணும் பாக்கியம் இனிவரும் தலைமுறைக்கு வாய்க்கபோவதில்லை , அந்த வகையில் நாம் கொடுத்துவைத்தவர்கள்தான்..           




இந்திய அணி ஒரு கோவில் என்றால்
சச்சின் அதன் முதன்மை கடவுள்
கங்குலி அதன் வழிகாட்டி கடவுள்
சேவாக் அதன் சக்தி வாய்ந்த கடவுள்
ஆனால் எதிரிகளின் தாக்குதல் அதிகமாகும் பொழுது
இந்த கடவுள்களே கோவிலின் சுவற்றின் பின்னால்தான் ஒழிந்து கொண்டு தங்களை காத்து கொள்ள வேண்டும்...
அந்த சுவர் எங்கள் டிராவிட்....
டிராவிட் இல்லாத இந்திய அணி
சுவர் இல்லாத தங்க கோவில் போல  
அங்கு கடவுள்களுக்கே பாதுகாப்பு கிடையாது ...

கங்குலி வெளியேறிய போதே நிறைய கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டார்கள் , இப்பொழுது டிராவிட் ,இதன் பின்னால் கிரிக்கெட் மீதான ஈடுபாடு பலருக்கு குறைந்து விடும் ...  இன்னமும் இந்திய கிரிக்கெட் அணியின் தூணாக இருக்கும் ஒரே நபர் சச்சின் மட்டும்தான் , அவரும் வெளியேறிவிட்டால் இந்திய கிரிகேட்டின்  அந்திம காலம்  முடிவுக்கு வந்துவிடும்  ... காரணம் இவர்கள் ஆடிய ஆட்டத்தை பார்த்த எங்களுக்கு கடவுளே வந்து மட்டை பிடித்து கிரிக்கெட் ஆடினாலும் பார்க்க பிடிக்காது...

உலகில் எல்லா விசயங்களுக்கும் மாற்று உண்டு என்று சொல்லுவார்கள் , ஆனால் டிராவிட்டுக்கு மாற்று அவருடைய மறுபிறவியில் அவர் மீண்டும் இந்தியாவில் ஒரு ஆண்மகனாக பிறந்து வந்தால் மட்டுமே கிடைக்கும்... அப்பொழுது நாங்களும் எங்கள் மறுபிறவியில் இதே இந்தியாவில் கிரிக்கெட் ரசிகனா இருந்தால் மட்டுமே மீண்டும் எங்களால் கிரிக்கெட்டை நேசிக்க ரசிக்க முடியும்... (இது டிராவிட்டுக்கு மட்டும் இல்லை , கங்குலி , சச்சினுக்கும் பொருந்தும்)...



நேற்றுதான் அந்த 1999 ஆம் ஆண்டு உலககோப்பை இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தை நண்பர்களோடு ஒவ்வொரு பந்திற்கும் குதித்து  கொண்டே டீவியில் பார்த்தை போல இருக்கிறது... அந்த மூன்று மணிநேரங்களில் நீங்கள் எங்களுக்கு கொடுத்த சந்தோசத்திர்க்கு விலையே இல்லை... கடந்த பத்து வருடங்களாக இதே போன்ற பல விலைமதிக்க முடியாத மூன்று  மணிநேரங்களை எங்களுக்கு தந்திருக்கிறீர்கள்... எங்களால் நன்றியை தவிர வேறு எதையும் திருப்பி தர முடியாது, அந்த ஒவ்வொரு சந்தோஷமான மணிதுளிகளும் உங்களுக்கு சந்தோஷமான பத்து மணிதுளிகளாக திருப்பி தர ஆண்டவனை பிராத்தனை செய்கிறோம் நாங்கள் ....


ஏனோ தெரியவில்லை ஒரு நண்பனின் மரணம் தருகின்ற வலியை தந்துவிட்டன நீங்களும் , கங்குலியும் ஓய்வு பெற்ற தருணங்கள்...  


     

இந்திய அணியின் நான்கு சிங்கங்கள் என்று வர்ணிக்கப்பட்டவர்கள்  சச்சின் , கங்குலி , டிராவிட் , லச்மன்....  இவர்களில் சச்சினும் லச்மனும் மட்டுமே இன்னும் விளையாடி கொண்டிருகிறார்கள் , லச்மன் கூடிய விரைவில் ஓய்வு பெற்று விடுவார் , இந்த மூவரும் ஓய்வு பெற்று விட்டால் சச்சினுக்கும் ஓய்வு பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் உருவாகலாம். இப்பொழுது இந்திய அணியின் முன்னாள் இருக்கும் பெரிய பிரச்சனை இவர்களுக்கு மாற்று தேடுவதுதான் , ஆனால் கண்டிப்பாக அது நடக்ககூடிய காரியம் இல்லை. என்னதான் அடுத்து விராட் கோலி போல துடிப்பான வீரர்கள் வந்தாலும் இவர்களுக்கு மாற்றாக அவர்களை எடுத்துகொள்ள முடியாது ... பார்த்திபன் கூறியதை கொஞ்சம் உல்டா பண்ணி சொன்னா " டார்ச் லைட்டுலயும் வெளிச்சம் வருதுங்கிரதுக்காக அதையெல்லாம் சூரியனோட கம்பேர் பண்ண முடியாது பாஸ்"



Thursday, March 8, 2012

விமர்சன "புளி"கள்



நம் சமூகத்தில் தன்னை பற்றிய   விமர்சனம் என்பது அனைவருக்கும் அருவருப்பானதாகவே இருக்கிறது. யாராவது நம் சிகையலங்காரத்தை விமர்சித்தால்கூட கோபம் பொத்துக்கொண்டு வரும் காரணம் பாராட்டுகள் தரும் சந்தோசம்தான் நமக்கு எப்பொழுதும் முக்கியம் , விமர்சனங்கள் பெரும்பாலும் நமக்கு வலியே பரிசளிக்கின்றன. நண்பா நீ அருமையாக    கவிதை எழுதுகிறாய் , நன்றாக  விவாதம் செய்கிறாய் , உனக்கு சுவாரஷ்யமான பேச்சு நடை இருக்கிறது என்று பள்ளியிலோ , கல்லூரியிலோ பழகிய என் நண்பன் கொடுத்த பாராட்டே இன்று நான் வலைபூ தொடங்கி எழுதும் தைரியத்தை கொடுத்திருக்கிறது , நான் மட்டும் இல்லை எல்லாருமே யாரோ ஒருவனின் பாராட்டில்தான் நம்பிக்கை பிறந்து தைரியமாக இங்கே எழுத முன் வந்திருப்பார்கள் , ஆனால் அதே நேரம் உனக்கெல்லாம் சரியா பேசவே தெரியாது நீயெல்லாம் எழுதி என்ன சாதிக்க போற என்று யாரோ ஒரு அதிமேதாவி நண்பன் நம்மை விமர்சித்தால் நம்மையும் அறியாமல் நம் எழுத்தில் ஒரு தேக்கம் வரும் , அந்த நண்பன் மேல் அளவிடமுடியாத கோபம் வரும் , ஆனால் அந்த விமர்சனம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஒன்று நாம் எழுதுவதை விட்டு விடுவோம் இல்லை நம்மை இன்னும் மெருகேற்றிக்கொள்ள போராடுவோம். உண்மையான விமர்சனங்கள் விமர்சிக்கபடுபவர் தன குறையை புரிந்துகொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள அவர்களை  ஊக்கபடுத்தும் விதமாகவே அமைய வேண்டுமே அன்றி விமர்சிப்பவரின் அதிமேதாவிதனத்தை காட்டுவதாக ஒருபோதும்   அமையக்கூடாது .


சரி விசயத்துக்கு வருவோம் , இங்கே மிக எளிதாக எல்லோராலும் விமர்சிக்கப்படும் ஒரு விஷயம் சினிமா, காரணம் காசு கொடுத்து பார்க்கும் யாரும் எந்த விசயத்தையும் விமர்சிக்கலாம், ஆனால் காசு கொடுத்து அவர்கள் எழுதுவதை படிக்கும் வாசகன் அவர்களின் எழுத்தை விமர்சித்தால் அவர்களால் ஏற்றுகொள்ள முடியாது , அவனை பைத்தியகாரன் என்று பட்டம் கட்ட ஒரு கூட்டமே துணைக்கு வரும் , சரி அவர்கள் எழுதும் விமர்சனமாவது சரியாக இருக்குமா என்றால் அதுவும் கிடையாது , நான் எவ்வளவு பெரிய சினிமா விமர்சகன் தெரியுமா என்று இணையத்தில் இருந்து தரவிறக்கி பார்த்த நான்கு உலகபடங்கள் தந்த அனுபவத்தில் தனக்கு தானே உருவாக்கிக்கொண்ட ஒரு மமதையில் , தன்னுடைய அதிமேதாவிதனத்தை காட்டுவதற்காகவே பலர் சினிமா விமர்சனம் எழுதிகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் அந்த விமர்சன பதிவில் அவர்களின் விமர்சனங்களை ஏதாவது குறை சொல்லி எழுதினால் அதை ஏற்று   கொள்ள மனம் இல்லாமல் எழுதியவனுடன் சண்டைக்கு வருவார்கள் ... அடுத்தவனின் படைப்பை குறைகூற தெரிந்தவன் கண்டிப்பாக தன் படைப்பின்  மீதான  மீதான விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளத்தான்   வேண்டும். இல்லையென்றால்  தன் மனைவியை யாராவது ஓரகண்ணால் பார்த்தாலே தப்பு  என்று சொல்லிவிட்டு  அடுத்தவனின் மனைவியை பார்வையாலே கற்பழிக்கும்  மனிதர்களுக்கும்   உங்களுக்கும் வித்தியாசம் இல்லை 


அதே போல இன்னொரு குரூப்  இருக்கிறார்கள் , அவர்கள் வேலையே எந்த படம் வெளிவந்தாலும் வேலைவெட்டி இல்லாமல் அந்த படத்தை பார்த்து விட்டு   விமர்சனம் எழுதுவதுதான். அது தவறில்லை ஆனால் விமர்சனம் என்ற பெயரில் அந்த படத்தின் மொத்த கதையையும் எழுதிவிடுவார்கள் , சமீபத்தில் அரவான் படத்திற்கும் அப்படி ஒரு பதிவர் விமர்சனம் எழுதியிருந்தார் , படத்தின் மீது இருந்த ஈர்ப்பில் படத்தின் கதை  கரு என்னவாக இருக்கும் என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தில்  அதை  படிக்க  ஆரம்பித்தேன்  ஆனால் அந்த விமர்சனத்தில் அவர்  பசுபதி கூட்டாளிகளோடு திருட போவதில் ஆரம்பித்து கடைசியில்  ஆதி சாவது வரைக்கும் ஒன்றையும் விடாமல்    எழுதிவிட்டார் , படத்தின் பெரிய சுவாரஸ்யமே   பரத்தை யார்   கொன்றார்கள்   என்பதுதான்  , அதையும்  அதில் சொல்லிவிட்டார் , கடைசியில் நான் அந்த படத்தை பார்க்கும்போது  கொஞ்சம்கூட  சுவாரஸ்யமே இல்லாமல் போய்விட்டது . அதே கதைதான்   நான் பெரிதும்  எதிர்பார்த்த அம்புலிக்கும் , இவர்களின் விமர்சனம் படித்திவிட்டு  படம் பார்ப்பது  என்பது  , அதே கண்கள் திரைப்படத்தை கிளைமேக்ஸ்  காட்சியை   முதலில்  பார்த்து  விட்டு   படம் பார்க்க ஆரம்பிப்பதற்கு  ஒப்பானது.  ஐய்யா  விமர்சன  புலிகளே  நீங்கள்  ஒரு பதிவை  தேற்றி  அதன்  மூலம்  ஹிட்ஸ்  வாங்க  வேண்டும் என்பதற்காக அடுத்தவனின் சுவாரஷ்யத்தை  கெடுக்க  வேண்டுமா?  என்னை  போன்று உங்களால் பாதிக்கபட்டவன் உங்கள் விமர்சனத்தை அடுத்து  கண்டிப்பாக படிக்க மாட்டன்  , ஆனால் உங்களை  பற்றி  தெரியாதவன்  ஒரு ஆர்வத்தில் உங்கள் விமர்சனத்தை படம் பார்ப்பதற்கு முன்னால் படிக்க நேர்ந்தால், படம் பார்க்கும் போது அவன் கதி ? கொஞ்சம் திருந்துங்க பாஸ் (இப்படி விமர்சனம் எழுதுகிறவர்களை   கூட பொறுத்து கொள்ளலாம்  ஆனால் அவர்கள் மொக்கை  விமர்சனத்தையும்  படித்து  விட்டு     உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை என்ற ரீதியில் பின்னூட்டம் போடுபவர்களை பார்த்தால்தான்   நடு ரோட்டில் அம்மணமாக ஓடவிட்டு நாயைவிட்டு  கடிக்க வைக்க வேண்டும் என்ற அளவுக்கு வெறி  வருகிறது)   


இவர்களை விட பிரபல பதிவர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் பண்ணும் அளப்பரைகளை பார்க்கும் பொது கவுண்டமணி  பாணியில் அய்யோ ஆண்டவா என்னை ஏன் இந்த பிரபல பதிவர்கள் எழுதுவதை எல்லாம் படிக்க வைக்கிற என்று கத்தனும் போல தோன்றுகிறது. தன்னை ஒரு சினிமாகாரனாக  சொல்லிக்கொண்டு சினிமாவில்   ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளி போடாமல் எல்லாம் தெரிந்த அறிவாளி  போல எழுதுகிறவர்கள் இங்கே ஏராளம். அதிலும் சிலர் சினிமா  இயக்குனராக போகிறேன்  என்று பல வருடங்களாக சொல்லி கொண்டிருப்பார்கள்  , ஆனால் இன்றைய வரைக்கும் ஒரு லைட்மேனாக  கூட ஆகியிருக்க மாட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில்  எவனுக்குமே படம் எடுக்க தெரியவில்லை என்ற ரீதியில் அவர்களின் பதிவுகள் இருக்கும் .  சினிமாவில் பல சாதனைகளை புரிந்த பாக்கியராஜ் போன்ற ஜாம்பவான்களே ஒரு படைப்பை விமர்சிக்கும் போது அந்த படைப்பாளியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதன் தவறுகளை நாசூக்காக வெளிபடுத்துவார்கள்  , ஆனால் இவர்கள் என்னவோ சினிமாவின் பிதாமகன் தாமஸ் ஆல்வா எடிசனை போல தங்களை நினைத்துகொண்டு நீயெல்லாம் எதுக்கு  படமெடுக்க ஆசைபடுற என்று  கொச்சையாக கேட்பார்கள் ஆனால் அண்ணே இவ்வளவு பேசுறீங்களே நீங்க ஏன் ஒரு படம் எடுக்க கூடாது? இவ்வளவு அறிவாளியா இருக்கீங்களே உங்களுக்கு எப்படின்னே  இன்னும்  வாய்ப்பு  கிடைக்காமல் இருக்கு என்று யாராவது ஒரு பின்னூட்டம் எழுதிவிட்டால் அவ்வளவுதான் அரசியல்வாதிகளை போல தன்  அல்லக்கைகளை விட்டு அவர்களை சைக்கோ , பைத்தியம் , கேனா பூனா என்று திட்டி  அவர்களை மனரீதியாக தாக்குவார்கள். கடைசியில் அவர்களும் அவர் அல்லகைகளும் தங்களை தாங்களே பாராட்டி கொண்டு திருப்திபட்டு கொள்வார்கள். ஆனால் கடைசி வரைக்கும் அந்த பின்னூட்டத்துக்கு பதிலே வராது, . ஆனால் உண்மையில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் இவர்களை போல வெட்டி நியாயம் பேசிக்கொண்டு திரியமாட்டார்கள் என்பதற்கும் பதிவுலகில் அம்புலி பட இயக்குனர்களை போல உதாரணங்கள் உண்டு , ஒன்றுமே செய்யாமல் சிலர் இவ்வளவு வெட்டி நியாயம் பேசும்போது , தமிழில் முதல் நேரடி 3டி படம் எடுத்த இவர்கள் எவ்வளவு பேசலாம்? ஆனால் அவர்கள் கொஞ்சம் கூட தங்களை  உயர்த்தியோ , கர்வபட்டோ , இல்லை பிறரை அசிங்கபடுத்தியோ எழுதியிருக்க மாட்டார்கள். இதைத்தான் நிறை குடம் கூத்தாடாதுன்னு சொல்லுவாங்க போல ....

தேசிய விருதுகள் 

சென்ற வருட இந்திய தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, வாகை சூட வா படத்திற்கு சிறந்த மாநில மொழி படத்துக்கான விருது கொடுத்திருக்கிறார்கள்.தேசிய அளவில் சிறந்த படமாக விருது  தரக்கூடிய தகுதி அந்த படத்திற்கு உண்டு , காரணம் அது எடுத்து சொன்ன ஒரு விஷயம் , கல்வியின் அவசியத்தை மிக எதார்த்தமாக  சொல்லிய படம் ,   தேசிய விருது பெற்ற படங்கள் இதை விட சிறந்த படமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். எனக்கு பிடித்த ஒரு படம் விருது பெற்றது மகிழ்ச்சியான விசயமே.
                                                   "Hats off to vakai sooda vaa team"

Friday, March 2, 2012

திராவிட குடி(தமிழ் )நாடும் , டோனி சேவாக் மங்காத்தாவும்



இனிமேல் குடித்து விட்டு   வண்டி ஓட்டினால் நான்கு வருடம் சிறைதண்டனையாம், மத்திய அரசு கொண்டு வரப்போகும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வரும்போது இந்த சட்டம் செயல்படுத்தபடுமாம். மேலும் குடித்து விட்டு வண்டி ஒட்டுபவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதமும் மூன்று மடங்கு அதிகமாகுமாம். இதன் மூலம் விபத்தில் உயிரழப்பவர்கள் மற்றும் படு காயமடைபவர்களுக்கு தரப்படும் இழப்பீடு அதிகரிக்கப்படுமாம்.  எல்லாம் சரிதான் , இதனால் குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் , அவர்களின் பிழையால் ரோட்டில் எதிரில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் கொடுமைகளும் குறையும். ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ,மத்திய அரசு கொண்டு வரப்போகும் இந்த திட்டம் "திராவிட" தமிழ்நாட்டில் அமலாக்கப்படுமா? அப்படி அமலாக்கபட்டால் குடிப்பதே தவறு என்றால் வீதிக்கு வீதி கடையை விரித்து வைத்து மக்களுக்கு சாராயம் சப்ளை  செய்யும் அரசாங்கத்துக்கு என்ன தண்டனை கொடுக்கபோகிறது ? தமிழ் நாட்டில் பொதுவாக ஒரு எழுதபடாத சட்டம் இருக்கிறது அது என்னவென்றால் குடிப்பது தவறு இல்லை. ஆனால் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது மாபெரும் தவறு ... குற்றம் செய்பவனை விட அதை செய்ய தூண்டுபவனுக்கே தண்டனை அதிகம் என்று சொல்லுகிறது நம் சட்டம் , அப்படி என்றால் குடிப்பவனை விட அவனுக்கு ஊத்தி கொடுக்கும்(நன்றி கேப்டன்)  நம் அரசாங்கத்துக்குதானே  அதிக தண்டனை கொடுக்க வேண்டும். அதற்க்கு மத்திய அரசு ஏதாவது சட்டம் கொண்டு வருமா? 

சரி குறைந்தபட்சம் டாஸ்மாக் கடைகளில் வண்டி நிறுத்த பார்க்கிங் வசதி இருக்ககூடாது , யாராவது வண்டியில் வந்து சரக்கு கேட்டால் தரக்கூடாது , மீறி அவனுக்கு சரக்கு கொடுத்தால் அந்த ஊழியருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று இப்படி ஏதாவது உருப்படியான சட்டமாவது கொண்டு வருமா? ஏனென்றால் குடுத்து விட்டு வண்டி ஓட்டுவது மாபெரும் தவறு என்று அறிவுறுத்தப்படும் நம் ஊரில்தான் எல்லா டாஸ்மாக் பார்களிலும் வண்டியை நிறுத்த விசாலமான பார்க்கிங் வசதியும் கூடவே  இருக்கும் .கேரளாவில் சில இடங்களில் நீங்கள் வண்டியில் வந்தால் பிரைவேட் பாரில் கூட உங்களுக்கு சரக்கு தரமாட்டார்கள். அதே போல இந்த சட்டங்கள் எல்லாம் கொண்டு வருவது மக்களை தண்டிக்கவா? இல்லை அவர்களிடம் இருந்து அபராதம் என்ற பெயரில் காசு புடுங்கவா? இல்லை அவர்களை திருத்தவா? கண்டிப்பாக திருத்த மட்டும் இல்லை என்பது நம்மூர்  குடிமக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். நம்மூரில் ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வாரங்களிலும் எல்லா டாஸ்மாக் கடைகளின் அருகிலும் காக்கிசட்டைகாரர்களை மப்டியில் பார்க்கலாம். அவர்கள் வேலையே எவனாவது அந்த கடைக்குள் வண்டியோடு நுழைகிறானா என்று நோட்டம் விட்டு சரியாக அவன் கடையை விட்டு வெளியே வரும்போது போதையோடு அவனை அமுக்குவதுதான். அவர்களுக்கு தேவை அந்த மாத கணக்கிற்கு ஒரு கேஸ். இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே மக்களை திருத்துவதுதான் என்றால் நான் மேலே சொல்லியதை போல வண்டியில் வரும் யாருக்கும் சரக்கு தரக்கூடாது என்று திருத்தம் கொண்டுவரலாம் , இல்லை கடைக்கு பக்கத்தில் நிற்கும் காக்கிசட்டைகள் , யாராவது வண்டியோடு கடைக்குள் நுழைந்தால் அப்பொழுதே அவனை அமுக்கி திருப்பி அனுப்பிவைக்கலாம். அதைவிட்டு விட்டு அவன் நன்றாக குடித்து விட்டு வரும்பொழுது அவனை பிடித்து பைன் போடுவது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. நீங்களே சரக்கும் விப்பீங்கலாம் , நீங்களே அங்க பைக் நிறுத்த இடமும் கொடுப்பீங்கலாம் , குடித்து விட்டு    பைக்குள வந்தா நீங்களே அபராதமும் போடுவீங்கலாம்.. என்ன கொடுமை போலீஸ்கார் இது? 


அதே போல இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் , டாஸ்மாக் கடைகள் இருக்கும் சாலைகளில் ஒளிந்து நிற்கும் காக்கிசட்டைகளை , தனியார் நடத்தும் உயர்ரக மதுக்கடைகள் இருக்கும் சாலைகளில் பார்க்கவே முடியாது. இன்னும் சில ஊர்களில் சில தனியார் கடைகளில் குடித்து விட்டு காக்கி சட்டையிடம் மாட்டினால் நீங்கள் அந்த கடைகளில் கட்டிய பில்லை காட்டினால் காக்கிசட்டை கேஸ் பதிவதில்லை , மாறாக அம்பதோ நூறோ வாங்கிவிட்டு உங்களை அனுப்பிவிடுவார்கள்.அவர்கள் கடையில் மட்டும் சாராயத்தில் ஆல்கஹாலுக்கு பதில் சந்தனம் கலந்திருக்கும் போல. அதே போல இந்த குடித்து விட்டு  வண்டி ஓட்டுவது என்பது நம்மை போன்ற பைக்கில் போகும் நடுத்தவர்க மக்களுக்கு மட்டுமே  குற்ற செயல் போல , எவனாவது குடித்து விட்டு காரை ஒட்டி சென்றால் அவனை நிறுத்தி பரிசோதிப்பது கூட கிடையாது.வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டன் என்பது போல கார் வச்சிருக்குறவன் குடிக்க மாட்டன் என்று நம்மூர் காக்கி சட்டை நம்பிவிடுகிறது போல.  எல்லாரும் சமம் என்பதுதான் திராவிட கோட்பாட்டின் அடிப்படையாம், ஆனால் அந்த திராவிட கட்சிகள் மாறி மாறி ஆண்ட தமிழ்நாட்டின் "குடிமக்களிடையே" இத்தனை ஏற்றதாழ்வுகள். வாழ்க திராவிடம்..... வளர்க திராவிட கட்சிகள்....

டோனி vs சேவாக் 


இந்திய அணி வீரர்கள் எதிரணியோடு மோதும்போது கூட நாம்தான் ஜெயித்தாக வேண்டும் என்ற வெறியோடு மோதுவார்களோ இல்லையோ , தங்களுக்குள் கோஸ்டி சண்டை போடும்போது மட்டும் தான் தான் பெரிய ஆள் என்று நிரூபித்தாக வேண்டும் என்ற வெறியோடு எப்போதும் இருப்பார்கள் , வாய்ப்பு கிடைக்கும்போது அந்த வெறியை தீர்த்து கொள்வார்கள். கவாஸ்கர் காலத்திலிருந்து கங்குலி வரைக்கும் இதுதான் நடந்து வந்திருக்கிறது. இப்பொழுது டோனி காலம். இம்முறை தோனியின் ஈகோவில் பலியாகியிருப்பது சேவாக் மட்டும் இல்லை இந்திய அணியின் எதிர்காலமும்தான். இந்திய அணியின் எதிர்காலம் கருதி அணிக்குள் சுழற்சி முறை கொண்டுவருகிறேன் என்று டோனி ஆரம்பித்து வைத்ததுதான் அணிக்குள் நடந்து வரும் மங்காத்தா ஆட்டத்தின் ஆரம்பம். மூத்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆட்டத்தில் ஓய்வு அளித்து அவர்களுக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருகிறேன் என்று அதற்க்கு சப்பை கட்டு கட்டினார் தோனி. அதற்க்கு அவர் எடுத்து வைத்த காரணம் காமெடியின் உச்சம். மூத்த வீரர்கள் யாருக்கும் ஒழுங்காக பில்டிங் செய்ய தெரியவில்லை , அவர்களால் ஒவ்வொரு ஆட்டத்திலும் இருபது ஓட்டங்கள் அதிகம் சென்று விடுகிறது என்று. 

இப்படி சொன்னால் யாருக்குதான் கோபம் வராது , அதுவும் சாதனை வீரர்கள் சச்சினையும் சேவாக்கையும் அப்படி கூறினால் கிரிகெட் கிரௌண்டில்  திரியும் நாய்க்கு கூட கோபம் வரும். சேவாக் தன கோபத்தை  மறைமுகமாக வெளிபடுத்த , இன்று ஆசிய கோப்பைக்கான அணியில் இருந்து வெளியேற்றபட்டார். இது குறித்து ஒன்றும் சொல்லாத சச்சின் ஆசிய கோப்பைக்கான அணியில் இடம்பிடித்து விட்டார். சேவாக் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் அவர் போர்மில் இல்லை என்பதுதான் என்றால் சச்சின் , டோனி உட்பட ஒழுங்காக விளையாடாத அத்துணை வீரர்களும் நீக்கப்பட வேண்டுமே. பொதுவாக ஆசிய அணிகளுக்கு எதிராக   மிக சிறப்பாக ஆடக்கூடிய இந்திய வீரர் சேவாக் , தொனிக்கும் அவருக்கும் இடையே இருக்கும் பனிபோருக்காக மட்டும் அவரை  அணியில் இருந்து நீக்கினால்  அது அணிக்கும் தோனிக்குமே நஷ்டம் . டோனி உண்மையிலேயே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டால்  அவர் உடனே  செய்ய வேண்டிய    விஷயம் கேப்டன்   பதவியில்  இருந்து உடனே விலகுவதுதான். 


மற்ற வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் பில்டிங் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் அவர் , முதலில் தான் இதில் ஏதாவது ஒன்றையாவது ஒழுங்காக செய்கிறோமா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டாமா ? களத்தில் அவர் கோட்டை விடும் ஸ்டெம்பிங்களை ஒப்பிட்டால் செவாக்காலும் சச்சினாலும் எதிரணிக்கு கிடைக்கும் இருபது ரன்கள் ஜுஜூபி. அவர் எந்த பந்தையும் விடாமல் ஒழுங்காக கீப்பிங் செய்தாலே போதும் பைஸ் மூலம் எதிரணிக்கு கிடைக்கும் உதிரி எண்ணிக்கை குறையும். எனவே இது இரண்டையும் மாற்றிக்கொள்ள முடியாத அவர் அணியின் எதிர்காலம் கருதி தன்னுடைய கீப்பிங் இடத்திற்கு அணியில் சுழற்சி முறை கொண்டுவருவாரா? அதே போல பேட்டிங் ஒழுங்காக செய்யாதவர்களை  எல்லாம்  அணியில் இருந்து நீக்க  வேண்டும் என்றால் முதலில் அவர்தான்  தூக்கி எறியப்பட வேண்டும் என்பதற்கு  ஆஸ்திரேலியா தொடரில் அவர் எடுத்த ஓட்டங்களே சாட்சி. 

அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச  வேண்டும் என்று நினைக்கும் டோனி முதலில் தனக்கும் வயதாகி விட்டது என்பதை உணர வேண்டும். இப்பொழுது இருக்கும் இந்திய அணிக்கு தோனியால் ஒரு பிரயோசனமும் இல்லை , மாறாக அவரது  ஈகோவால்  அணிக்கு பிரச்சனை  மேல்  பிரச்சனைதான்  வந்து கொண்டிருக்கிறது ... இதை டோனி உடனே உணர்ந்து தானாக விலாகாவிட்டால் மற்ற இந்திய கேப்டன்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவருக்கும்... மற்றவர்களின் திறமையால் புகழின் உச்சியை தொட காரணமாக இருந்த அவரின் அதிர்ஷ்டம் இப்பொழுது மெல்ல மெல்ல அவருக்கு குறைந்து கொண்டே வருகிறது , அது முற்றிலும் அவரை விட்டு விலகி , அடி மேல் அடி வாங்கி அவமானப்பட்டு அணியை விட்டு வெளியேறுவதை விட அந்த புகழ் கொஞ்சமேனும் இருக்கும் இன்றைய காலகட்டத்திலேயே தானாக விலகுவதுதான் புத்திசாலித்தனம்.  

LinkWithin

Related Posts with Thumbnails