Followers

Copyright

QRCode

Monday, June 20, 2011

மாரிசெல்வம் - சோதனைகளை சாதனையாக்கிய ஏழை மாணவன்

பதிவுலகமே அவன் இவனுக்காகவும் , ஆரண்யகாண்டதிர்க்காகவும் வெட்டியாய் அடித்து கொண்டிருக்கும்போது யாருமே கவனிக்க மறந்த ஒரு நல்ல விஷயத்தை இந்த பதிவில் குறிப்பிட போவதற்காய் பெருமைபடுகிறேன் ...


முதலில் ஒரு கேள்வி? நீங்கள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் போது உங்கள் குடும்ப சூழ்நிலை எப்படி இருந்தது? .... உங்கள் குடும்பம் உங்களுக்கு எந்த அளவுக்கு உறுதுணையாய் இருந்தது? .... நீங்கள் தேர்வு எழுதி எத்துணை மதிப்பெண் வாங்கினீர்கள்?... முதலில் இதையெல்லாம் பிளாஷ்பேக்காக மனதில் ஓட்டி கொள்ளுங்கள் ....   தேர்வு முடித்து வந்ததும் வயிறாரா சாப்பிட்டதும் , நாம் படித்து கொண்டு இருக்கையில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை டீயோ , பாலோ, பூஸ்ட் ,ஹார்லிக்ஸ் என்று ஏதோ ஒன்றோ கலக்கி கொடுத்த அம்மாவும் , ஒரு நாளைக்கு நான்கு முறையாவது எப்படிடா படிச்சிக்கிட்டு இருக்க என்று குலசம் விசாரிக்கும் நெருங்கிய சொந்தங்களும் , தேர்வு அன்னைக்கு  காலையில் எழுந்ததும் நமக்காக வீட்டிலேயே பூஜையோ , ஜெபமோ , தொழுகையோ செய்யும் அப்பாவும் கண்டிப்பாக ஞாபகம் வருவார்கள் ...


இந்த பதிவும் ஒரு SSLC மாணவனின் கதைதான் .. ஆனால் அவன் நம்மை போல்  ஒருவன் இல்லை .. கோடியில் ஒருவன்....  சூழ்நிலைகள் சோதித்தாலும் அசராது நின்று சாதித்த ஒருவனின் வலி மிகுந்த போராட்டம் ... இதை பற்றி மன்னார் வளைகுடா வாழ்க்கை ...என்ற இந்த வலையில் படித்த பொழுது இதை கண்டிப்பாய் எழுதியே ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் ... அதை அப்படியே உங்களுக்கு தருகிறேன் ...  சத்தமே இல்லாமல் சாதிக்கும் துடிப்பான இந்த தமிழனின் கதை பல பேரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில்தான் இதை பகிர்கிறேன் ... நீங்களும் இதை உங்கள் வலையில் ஏற்றினால் இன்னும் பலரை சென்றடையும் இவனின் வலிகளும் , சாதனைகளும் ....


இனி அந்த வலைபக்கத்தில் இருந்து ,


சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி (அப்புசாமி சீதாப்பாட்டி புகழ் தியாகிகள் என்ற தலைப்பில் தேர்வு எழுதச் செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் படும் பாட்டை எழுதியிருந்தார். பெற்றோர்கள் என்னதான் பரீட்சை எழுதச் செல்லும் பிள்ளைகளுக்கு பார்த்துப் பார்த்துச் செய்தாலும் அந்தப் பிள்ளைகள் பெற்றோரைத் தலைகுனிய வைக்குமளவுதான் மதிப்பெண்கள் எடுக்கின்றார்கள். நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெற்றோரெல்லாம் இது மாதிரி நமக்கு ஒண்ணு பிறக்கலையே என்று ஏங்க ஆரம்பிக்கின்றார்கள். பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டாலும் பள்ளத்தில் விழுந்தே தீருவேன் என்று சபதமிட்டு பெற்றோரை பரிதவிக்கவிடும் பிள்ளைகளுக்கு மத்தியில் தாயைப் போன்று தன்னை வளர்த்த அக்காவின் பிணத்தருக்கே அழுகையோடு படித்து மதிப்பெண்களை அள்ளிஎடுத்து தன் அக்காவின் கனவை நனவாக்கிய ஒரு ஏழைச் சிறுவனின் சாதனைக் கதை. இது மாதிரி ஒரு பிள்ளையோ சகோதரனோ நமக்கு இருந்திருக்கக் கூடாதா என்று படிப்பவர்களை ஏங்கவைக்கும் ஒரு முன்னுதாரணம் .

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம்.தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி.அவனும் இந்த முறை தேர்வு எழுதியவன்தான் ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை

மாரி... யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியாசொல்ல அள்ளிக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.

மாரி என்கின்ற மாரிச்செல்வம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன்.அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக் கொண்டே அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனைஅடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன.ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.

நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்தபெற்றுவந்த மாரிச்செல்வம், +1 சேருவது தொடர்பாக நிறுவனத்திற்கு வந்தபோது மாரிச்செல்வத்தை சந்தித்து பேசியதிலிருந்து அவனது சாதனையின் பின்னிருந்த பல வேதனையான சம்பவங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர்.எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரிமேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால் அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய் அம்மா நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா என்று கூறினான்.அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி வேணாம் மாரி நீ போய்ப் படி.அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க... நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும்எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.

மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார்.அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன.தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.
ஐந்து பெண் குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது.கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும் ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும் இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும் சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும் மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். மாரி இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார்.முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா,அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள் ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார்.முருகேஸ்வரியின் கணவர் முனியாண்டி பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.
தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது கூலி வேலைக்குச் செல்வது கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார்.வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.

தேர்வு நாளும் வந்தது.முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம் பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரிஎன அக்கா கேட்டார். ஆமாக்கா. இன்னிக்கு பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும் என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. என்று அவன் பதற ஒண்ணுமில்ல மாரி நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும் என்றார். சரிக்கா நீ போய் தூங்குக்கா என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.

அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை நாளைக்குப் பரீட்சை எழுதணும்...நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா என்று அனைவரும் தேற்றினர். மாரிநீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம் என அவன் மாமா கூறவும் அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம் என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார் என்று மாரி உடைந்து அழும் போது நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.

அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும் அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி.பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.

இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன
அவனுடைய ஆசிரியர்கள் சக மாணவர்கள் அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா தமிழ்-95 ஆங்கிலம்-98 கணிதம்-100 அறிவியல்-99 சமூகஅறிவியல்- 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம்.அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள். 

மாரி...இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி.வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல் ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும் அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயது வரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான்.அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை.குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியாண்டி பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது

இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும் தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம் இந்த பதிவை படித்தவுடன் இந்த சிறுவனுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று மனம் துடிக்கிறது .... அவன் இருக்கும் கடலாடி ஒன்றியம் எங்கள் ஊருக்கு அருகில்தான் (தோராயமாக 90 கிலோமீட்டர்) என்பதால் கூடிய விரைவில் எப்படியாவது அவனை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன் ... அவனை சந்தித்து பேசிய பின் அவனின் இன்றைய உண்மையான நிலவரம் என்ன என்பதை இதே வலைபூவில் கண்டிப்பாய் பகிர்கிறேன் .... 


கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இவனின் சிறந்த எதிர்காலத்திர்க்காய் கடவுளிடம் வேண்டுங்கள் ... இல்லாதவர்கள் நீ நல்லா இருடா என்று மனதார அவனை வாழ்த்துங்கள் .... இந்த பையன் எப்படியாவது நல்ல நிலையை அடையவேண்டும் ....  

13 comments:

Karthikeyan said...

என் வேண்டுதல்கள் கண்டிப்பாக இவனுக்கு உண்டு.. ராஜா.

Dhanagopal said...

God may bless him lifelong.

கிருஷ்ணா said...

சாதனை...! இந்த வார்த்தைக்கு முழு அர்த்தத்தை கற்றுக் கொடுக்கிறது மாரியின் வாழ்க்கை.. கண்கள் குளமாக பின்னூட்டு இடுகிறேன்.. இவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறேன்.. தயவு செய்து அவனை கண்ட பின்பு என்னையும் தொடர்பு கொள்ளுங்கள்..

Melvin said...

அன்புள்ள ராஜா,

நான் தம்பி மாரிக்கு உதவி செய்ய விரும்புகிறேன். சீக்கிரம் தகவல் தருமாறு கேட்டுகொள்கிறேன்.

நன்றி, டே. மெல்வின் சார்லஸ் ராஜா

Melvin said...

என்னை தொடர்புகொள்ள: 9840302016

"ராஜா" said...

Anpin krishna and melvin. Kandippaka antha paiyanai nan santhippen. Ippozhuthu konjam velai palu iruppathal aduththa vaara iruthiyil avanai santhikkalam endru ninaiththullen. Atharkku munnare vaippu kidaiththal santhikka avalai ullen avanai santhiththu pesi vittu ungalai thodarpu kolkiren.

அசோக் குமார் said...

படித்தவுடன் மனதை பிசைகிறது. இப்படியும் ஒரு மாணவனா ?? அவன் நல்ல நிலைக்கு வர கடவுளை வேண்டுகிறேன்.

காமராஜ் said...

இதையெல்லாம் எந்த ஊடகமும் எழுதாது.எந்த அரசியல் கட்சியும் திரும்பிப்பார்க்காது.இதிலே ப்ளாக்கர்கள் என்ன விதிவிலக்கா ?.

Mani - மணிமொழியன் said...
This comment has been removed by a blog administrator.
"ராஜா" said...

நன்றி அசோக் குமார் ,

காமராஜ் ஸார் வருகைக்கு மிக்க நன்றி , பிளாக்கர்கள் மேல் எனக்கு இன்னமும் கொஞ்சம் நம்பிக்கை உண்டு , பார்க்கலாம் ...

நன்றி மணிமொழியன் ....

பாவா ஷரீப் said...

enna solvathu??
kanneer mattume pathilaaga

திலிப் நாராயணன் said...

1980 ஆம் ஆண்டு உயிரியல் பாடத்தின் செய்முறைத்தேர்வு மட்டுமே பாக்கி. முந்தைய நாளில் ஊருக்கு வெளியே சிவனூரணி அருகே கிணற்றில் தாயும் மகனுமாக ஒரு ஜோடி உப்பிய நிலையில் இரண்டு பிணங்கள்.வேகாத வெயிலில் விறகு எடுத்து நிரந்தரமற்ற அந்த இடமே சுடுகாடு என்றான நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி விறகை அடுக்கி பொசுக்கி விட்டு வீட்டுக்குப்போகையில் மாலை மணி 7.கனத்த மழை அன்று. ஒழுகும் வீடு. ஆங்காங்கே ஈயத்தட்டில் மழையின் தாளம்.இரவெல்லாம் என் நினைவில் அந்தத்தாயும் குழந்தையும் அல்லாடினார்கள். சரியாகத்தூங்கமுடியவில்லை. மறு நாள் தேரவு உட்பட ரிசல்ட் முதலாம் வகுப்பு.

Karthikeyan said...

This news published in today's (25/06) dinamalar website.

LinkWithin

Related Posts with Thumbnails