Followers

Copyright

QRCode

Tuesday, June 21, 2011

"யூத்"தா மாறு "என்ஜாய்" பண்ணு மாமே ....





குறிப்பு : இது கண்டிப்பாக வயதானவர்களுக்கு மட்டும் அல்ல ...




 நம்ம வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோசமான காலகட்டம் என்றால் அது இந்த யூத் பருவம்தான் ... ஓசி சாப்பாடு,நண்பர்கள் கூட்டம் ,24 மணி நேரமும் ஜாலி , மனதிற்கு தோன்றியதை செய்ய கூடிய தைரியம் என்று எப்பொழுதும்  சந்தோசமாக வாழலாம் ... படிக்கிற காலத்தில் கூட படிக்கிற சப்ப பிகரிடம் போய் தைரியமாக நீ ரொம்ப சப்ப பிகரா இருக்க என்று அசால்ட்டாக அந்த பெண்ணை டீஸ் செய்யலாம் ... மிஞ்சி மிஞ்சி போனால் அந்த பெண் ஆசிரியர்களிடம் போட்டு கொடுப்பாள் , அவர்களும் நம்மை விசாரித்து விட்டு இனிமேல் இப்படி செய்யாதே என்று எச்சரித்து அனுப்பி விடுவார்கள் .. நாமும் நம் நண்பர்களிடம் நான் enquiry attend பண்ணிட்டேன் , நானும் ரௌடிதான் என்று சட்டை காலரை தூக்கி விட்டு  கொள்ளலாம் ... ஏனென்றால் அந்த வயதில் நாம் இழப்பதற்கு மானம் , சுயமரியாதை என்று எதையும் நாம் சம்பாதித்து இருக்க மாட்டோம் ... நம்மை சுற்றி இருப்பவங்களும் அப்படியே இருப்பார்கள் .... நாம் என்ன தவறு செய்தாலும் சின்ன பையன் தெரியாம செஞ்சிட்டான் என்று சமூகம் நமக்கு வக்காலத்து வாங்கும் ... 


ஆனா ஒரு வேலைக்கு சேந்து ரெண்டு மூணு வருஷம் ஆன பின்னாடி நம்ம வாழ்க்கை அப்படியே தலைகீழா மாறி போய்டும் ... ஆபீஸ்ல மெமோ வாங்கிட்டோம்னா ரெண்டு மூணு நாளைக்கு தூக்கமே வராது .. அது நமக்கு "prestige problem" ஆகிரும்.. இப்பதான் நமக்கு அந்த யூத் பருவத்தோட அருமை தெரியும் ... சில பேரு ஏழு கழுத வயசு ஆனாலும் அந்த யூத் பருவத்த தாண்டி வர மாட்டான் ... தலையில லேசா சொட்ட , வயித்துல பெரிய தொந்தின்னு நம்ம உடம்பு நம்ம வயசுக்கு ஏத்த மாதிரி மாறினாலும் நம்ம மனசு இன்னும் நான் யூத்து என்று நம்பி கொண்டு இருக்கும் ... சில பேரு அந்த வயசுல படிப்பு படிப்புன்னு அம்மாஞ்சியா இருந்திட்டு , பார்டர் வயசுலதான் திடீர்னு ஞானோதயம் வந்து அப்ப விட்டத எல்லாம் மொத்தமா இப்ப அனுபவிச்சிடனும்னு அளப்பர பண்ணிக்கிட்டு அலைவாணுக(நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை ) ... இந்த உலகத்துக்கு நாம இன்னமும் யூத்துதான் என்று நம்ப வைப்பதே  அவர்களின் பெரிய சவாலாக இருக்கும் ... அந்த மாதிரியான யூத்துகளுக்கு சில ஐடியா தருவதற்கே இந்த பதிவு .. 


ஸ்டார்ட் ம்யூசிக் 

யூத்துகளுக்கான பெரிய அடையாளம் அவர்கள் வைத்திருக்கும் பைக்குதான்.. வண்டி பார்பதற்க்கே பிரமிப்பாய் பெரியதாய் இருக்க வேண்டும் .. வண்டியின் நிறம் கண்ணை பறிக்கும் வகையில் சிகப்பு , மஞ்சள் அல்லது ஆரஞ்சு என்று இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் ... மிக முக்கியமான விஷயம் வண்டியில் ஏறி விட்டால் எழுபது கிலோமீட்டர் வேகத்திற்கு குறைவாக செல்லவே கூடாது... ஹாரன் மற்றும் சைலேன்சரில் சத்தம் வித்தியாசமாய் இருப்பது கூடுதல் தகுதி ...



யூத் பருவத்தின் பெரிய சந்தோசமே காதலும் அதன் நீட்சியாய் நம் நண்பர்கள் நம்மையும் அவளையும் இணைத்து ஓட்டுவதுமே... இந்த வயதில் நமக்கு பிகர் மாட்டுவது கொஞ்சம் கஷ்டமே ... இருந்தாலும் மனம் தளர்ந்து விட கூடாது , நம் அலுவலகத்தில் நம்மை போலவே கொஞ்சம் வயசாகி போய் இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் ஒரு பிகரை தேர்வு செய்து கொள்ளுங்கள் ... பிகர் கொஞ்சம் சுமாராக இருந்தாலே போதும் ... உங்கள் நண்பர்களிடம் இவள்தான் என் காதல் தேவதை என்று சொல்லுங்கள் ... பின்னர் உங்கள் நண்பர்கள் கண்ணில் படும்படி அவளுடன் அடிக்கடி  பணி நிமித்தமாய் பேசி கொண்டு இருங்கள்....   உங்கள் நண்பர்கள் உங்களை பார்க்கும் போதெல்லாம் அவளையும் உங்களையும் வைத்து ஓட்டி கொண்டிருப்பார்கள் .... இது மனதிற்குள் ஒரு கிளுகிளுப்பை உருவாக்கும் .... உங்கள் அதிர்ஷ்டத்திற்கு அந்த பெண்ணும் மடிந்து விட்டால் நீங்கள் நிஜ யூத்தாகவே மாறி விடலாம் ...

நண்பர்களுடன் எங்கு வெளியில் சென்றாலும் ஜீன்ஸ் , டி ஷர்ட் போட்டுத்தான் செல்ல வேண்டும் .. அந்த டி ஷிர்ட்டில் " I HATE BEAUTIFUL GIRLS .. B'COZ THEY ALWAYZ TORTURE ME  "போன்ற வாசகங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் , தலையில் ஒரு கேப் , மற்றும் ஒரு கூலிங் கிளாஸ் எப்பொழுதும் இருப்பது அவசியம் ... இது உங்கள் வழுக்கையை மறைக்க உதவும் 


நிற்கிற பேருந்தில் கண்டிப்பாக ஏறவே  கூடாது ... அதே போல் பேருந்தினுள் எவ்வளவுதான் இடம் இருந்தாலும் புட்  போர்டில்தான் தொங்க வேண்டும் .

விடுமுறை நாள் என்றால் இரவு முழுவதும் ஊர் சுற்றி விட்டு இல்லை பிகருடன் போனில் கடலை போட்டு விட்டு பகல் முழுவதும் தூங்க வேண்டும்

சினிமாவிற்கு தனியாக செல்ல கூடாது ... பிகரை பிக் அப் பண்ணி கூட கூட்டி கொண்டு  போகலாம் ... அப்படி பிகருடன் போகும் பொழுது படம் முடியும் வரை அவள் தோள் மீது கை வைத்தே பார்க்க வேண்டும் , இல்லை என்றால் அவளை உங்கள் மார்போடு அணைத்து வைத்து  படம் பார்க்க வைக்கலாம் ... இது உங்களை சுற்றி தனியாக உர்க்காந்து படம் பார்பவர்களுக்கு புகைச்சலை உண்டு பண்ணும் ... பின்னர் பிகரே இல்லாத உங்கள் நண்பர்களிடம் அவளுடன் படம் பார்த்த அனுபவத்தை பற்றி கிளுகிளுப்பாய் சொல்லுங்கள் ... அவர்களும் மனதிற்குள் உங்களை புகைச்சலுடன் பார்ப்பார்கள் ...நாலு பேரு உங்களை பாத்து புகைந்தாலே நீங்கள் யூத்தா மாறிட்டீங்கன்னு அர்த்தம் பாஸ்....


நண்பர்களுடன் படம் பார்க்க போகும்போது அமைதியாக படம் பார்க்க கூடாது ... பிடித்த  சீன வரும் பொழுதெல்லாம் விசில் அடிக்க வேண்டும் , பிடிக்காத மொக்கை சீன வரும் போதெல்லாம் சத்தமாக எல்லாரும் சிரிக்கும்படி கமென்ட் அடிக்க வேண்டும் .... 

 உங்கள் அலுவலகத்தில் நடக்கும் எந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ,  வெகேசன் டூர் , இல்லை பார்ட்டி என்றாலும் நீங்கள்தான் முன்னால் நின்று ஆர்கனைஸ் பண்ண வேண்டும்... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பாடல் திறமையவோ இல்லை கவிதை திறமையவோ இல்லை மிமிக்கிரி திறமையவோ எடுத்து விட வேண்டும் ... இது உங்களுக்கு பெண் நண்பிகள் அதிகம் கிடைக்க உதவி செய்யும். உங்களுக்கு ஆண் நபர்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ அதே அளவுக்கு பெண் நண்பர்களும் இருக்க வேண்டும் ... உங்கள் மொபைல் , மற்றும் மெயிலுக்கு வரும் மேச்செஜ்சுகள் அதிகம் பெண்களிடம் இருந்து வந்தால் உங்களுக்கே உங்கள் மேல்  நாம் இன்னும் யூத்துதான்  என்று நம்பிக்கை வந்து விடும் ...
   

கடைசியா இது எல்லாம் பண்ணியும் யாரும் உங்களை யூத்ன்னு நம்ப மாட்டேங்கிரானுகளா.. பாஸ் லேட் பண்ணாதீங்க .. உங்களுக்கு கல்யாண வயசு வந்திடுச்சி சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ணிடுங்க ... முத்துன கத்திரிக்கா சந்தையில விலை  போகாது ... லேட் பண்ணுனா நீங்களும் இப்படிதான் கடைசி வரை தனி மரமா நிக்க வேண்டியதா போய்டும்   


Monday, June 20, 2011

மாரிசெல்வம் - சோதனைகளை சாதனையாக்கிய ஏழை மாணவன்

பதிவுலகமே அவன் இவனுக்காகவும் , ஆரண்யகாண்டதிர்க்காகவும் வெட்டியாய் அடித்து கொண்டிருக்கும்போது யாருமே கவனிக்க மறந்த ஒரு நல்ல விஷயத்தை இந்த பதிவில் குறிப்பிட போவதற்காய் பெருமைபடுகிறேன் ...


முதலில் ஒரு கேள்வி? நீங்கள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் போது உங்கள் குடும்ப சூழ்நிலை எப்படி இருந்தது? .... உங்கள் குடும்பம் உங்களுக்கு எந்த அளவுக்கு உறுதுணையாய் இருந்தது? .... நீங்கள் தேர்வு எழுதி எத்துணை மதிப்பெண் வாங்கினீர்கள்?... முதலில் இதையெல்லாம் பிளாஷ்பேக்காக மனதில் ஓட்டி கொள்ளுங்கள் ....   தேர்வு முடித்து வந்ததும் வயிறாரா சாப்பிட்டதும் , நாம் படித்து கொண்டு இருக்கையில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை டீயோ , பாலோ, பூஸ்ட் ,ஹார்லிக்ஸ் என்று ஏதோ ஒன்றோ கலக்கி கொடுத்த அம்மாவும் , ஒரு நாளைக்கு நான்கு முறையாவது எப்படிடா படிச்சிக்கிட்டு இருக்க என்று குலசம் விசாரிக்கும் நெருங்கிய சொந்தங்களும் , தேர்வு அன்னைக்கு  காலையில் எழுந்ததும் நமக்காக வீட்டிலேயே பூஜையோ , ஜெபமோ , தொழுகையோ செய்யும் அப்பாவும் கண்டிப்பாக ஞாபகம் வருவார்கள் ...


இந்த பதிவும் ஒரு SSLC மாணவனின் கதைதான் .. ஆனால் அவன் நம்மை போல்  ஒருவன் இல்லை .. கோடியில் ஒருவன்....  சூழ்நிலைகள் சோதித்தாலும் அசராது நின்று சாதித்த ஒருவனின் வலி மிகுந்த போராட்டம் ... இதை பற்றி மன்னார் வளைகுடா வாழ்க்கை ...என்ற இந்த வலையில் படித்த பொழுது இதை கண்டிப்பாய் எழுதியே ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் ... அதை அப்படியே உங்களுக்கு தருகிறேன் ...  சத்தமே இல்லாமல் சாதிக்கும் துடிப்பான இந்த தமிழனின் கதை பல பேரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில்தான் இதை பகிர்கிறேன் ... நீங்களும் இதை உங்கள் வலையில் ஏற்றினால் இன்னும் பலரை சென்றடையும் இவனின் வலிகளும் , சாதனைகளும் ....


இனி அந்த வலைபக்கத்தில் இருந்து ,


சில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி (அப்புசாமி சீதாப்பாட்டி புகழ் தியாகிகள் என்ற தலைப்பில் தேர்வு எழுதச் செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் படும் பாட்டை எழுதியிருந்தார். பெற்றோர்கள் என்னதான் பரீட்சை எழுதச் செல்லும் பிள்ளைகளுக்கு பார்த்துப் பார்த்துச் செய்தாலும் அந்தப் பிள்ளைகள் பெற்றோரைத் தலைகுனிய வைக்குமளவுதான் மதிப்பெண்கள் எடுக்கின்றார்கள். நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெற்றோரெல்லாம் இது மாதிரி நமக்கு ஒண்ணு பிறக்கலையே என்று ஏங்க ஆரம்பிக்கின்றார்கள். பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டாலும் பள்ளத்தில் விழுந்தே தீருவேன் என்று சபதமிட்டு பெற்றோரை பரிதவிக்கவிடும் பிள்ளைகளுக்கு மத்தியில் தாயைப் போன்று தன்னை வளர்த்த அக்காவின் பிணத்தருக்கே அழுகையோடு படித்து மதிப்பெண்களை அள்ளிஎடுத்து தன் அக்காவின் கனவை நனவாக்கிய ஒரு ஏழைச் சிறுவனின் சாதனைக் கதை. இது மாதிரி ஒரு பிள்ளையோ சகோதரனோ நமக்கு இருந்திருக்கக் கூடாதா என்று படிப்பவர்களை ஏங்கவைக்கும் ஒரு முன்னுதாரணம் .

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம்.தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி.அவனும் இந்த முறை தேர்வு எழுதியவன்தான் ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை

மாரி... யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியாசொல்ல அள்ளிக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.

மாரி என்கின்ற மாரிச்செல்வம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன்.அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக் கொண்டே அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனைஅடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன.ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.

நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்தபெற்றுவந்த மாரிச்செல்வம், +1 சேருவது தொடர்பாக நிறுவனத்திற்கு வந்தபோது மாரிச்செல்வத்தை சந்தித்து பேசியதிலிருந்து அவனது சாதனையின் பின்னிருந்த பல வேதனையான சம்பவங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர்.எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரிமேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால் அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய் அம்மா நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா என்று கூறினான்.அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி வேணாம் மாரி நீ போய்ப் படி.அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க... நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும்எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.

மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார்.அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன.தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.
ஐந்து பெண் குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது.கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும் ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும் இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும் சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும் மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். மாரி இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார்.முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா,அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள் ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார்.முருகேஸ்வரியின் கணவர் முனியாண்டி பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.
தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது கூலி வேலைக்குச் செல்வது கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார்.வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.

தேர்வு நாளும் வந்தது.முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம் பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரிஎன அக்கா கேட்டார். ஆமாக்கா. இன்னிக்கு பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும் என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. என்று அவன் பதற ஒண்ணுமில்ல மாரி நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும் என்றார். சரிக்கா நீ போய் தூங்குக்கா என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.

அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை நாளைக்குப் பரீட்சை எழுதணும்...நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா என்று அனைவரும் தேற்றினர். மாரிநீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம் என அவன் மாமா கூறவும் அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம் என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார் என்று மாரி உடைந்து அழும் போது நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.

அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும் அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி.பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.

இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன
அவனுடைய ஆசிரியர்கள் சக மாணவர்கள் அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா தமிழ்-95 ஆங்கிலம்-98 கணிதம்-100 அறிவியல்-99 சமூகஅறிவியல்- 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம்.அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள். 

மாரி...இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி.வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல் ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும் அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயது வரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான்.அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை.குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியாண்டி பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது

இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும் தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம் 







இந்த பதிவை படித்தவுடன் இந்த சிறுவனுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று மனம் துடிக்கிறது .... அவன் இருக்கும் கடலாடி ஒன்றியம் எங்கள் ஊருக்கு அருகில்தான் (தோராயமாக 90 கிலோமீட்டர்) என்பதால் கூடிய விரைவில் எப்படியாவது அவனை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன் ... அவனை சந்தித்து பேசிய பின் அவனின் இன்றைய உண்மையான நிலவரம் என்ன என்பதை இதே வலைபூவில் கண்டிப்பாய் பகிர்கிறேன் .... 


கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இவனின் சிறந்த எதிர்காலத்திர்க்காய் கடவுளிடம் வேண்டுங்கள் ... இல்லாதவர்கள் நீ நல்லா இருடா என்று மனதார அவனை வாழ்த்துங்கள் .... இந்த பையன் எப்படியாவது நல்ல நிலையை அடையவேண்டும் ....  

Saturday, June 18, 2011

தமிழ் சினிமாவின் சத்தியஜித்ரே - பாலா



பாலா என்ற படைப்பாளியின் படைப்பு திறமை நம் நாடே அறிந்தது ... இருட்டில் தத்தளித்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை , அடிதட்டு மக்களின் இருட்டு வாழ்க்கையை காட்டி வெளிச்சத்திர்க்கு கொண்டு வந்தவர் ... சத்தியஜித்ரேவுக்கு பின்னர் இந்திய சினிமாவில் ஒளி வீசும் ஒரு வைர கல் இந்த பாலா... இப்படியெல்லாம் அவருக்கு சொம்படித்து கொண்டு இருக்கும் என் கண்ணுக்கு கடவுள் தெரிகிறார் என்ற டைப்  அறிவுஜீவிகள் இதற்க்கு மேல் இந்த பதிவை படிக்க வேண்டாம் .. மீறி படித்து விட்டு ஒரு பதிவையே ஒழுங்கா எழுத தெரியாத நீயெல்லாம் பால்வீதி படம் எடுக்கும் (எத்தனை நாளைக்குத்தான் உலக படம்னு சொல்றது , நம்ம ஆளு அதையெல்லாம் தாண்டி பால்வீதிக்கே படம் எடுக்கிறவரு) பாலாவை குறை சொல்ல நீ யாரு என்று பின்னூட்டத்தில் வாந்தி எடுக்க வேண்டாம் ....

தமிழ் சினிமாவை பிடித்த மிக பெரிய சாபக்கேடு என்னவென்றால் , மிகைபடுத்தபட்ட உணர்வுகளை எதார்த்தங்கள் என்று ரசித்து , அதை படைத்தவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவதுதான் ... சேது என்று ஒரு படம் , படம் வந்த புதிதில் எல்லா பத்திரிக்கைகளும் அந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடின ... ஆனந்த விகடன் ஒரு படி மேலே போய் தமிழ் சினிமாவின் முதல் படம் என்றெல்லாம் படத்திர்க்கு ஜல்லி அடித்தது  ... அப்படி என்ன அந்த படத்தில் இருந்தது? ரௌடிதனம் செய்கிறான் ,காதலிக்கிறான் , பைத்தியமாகிறான் , குணமாகிறான் , காதலி சாகிறாள் , மீண்டும் பைத்தியமாகிறான்... இதில்  அப்படி என்ன தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் படைப்பு இருக்கிறது? 

முதல் பாதியில் வரும் காட்சி அமைப்புகள் அந்த கால கட்டத்தில் புதுமையான காட்சி அமைப்புகளாய் இருந்தது என்பதை தவிர அந்த படத்தில் வேறு எந்த விசேசமும் கிடையாது... மேலும் அந்த படத்தில் எந்த நிகழ்வுகளுமே இயல்பாய் கதைக்கு தேவையான நிகழ்வுகளாய் இருக்காது .. எல்லாமே வலிந்து திணிக்கபட்டதை போல , ஒரு சோகத்தை புகுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திர்க்காய் நடப்பதை போலதான் திரைக்கதை இருக்கும் ... இந்த படத்தை பார்த்து விட்டு எல்லாரும் பத்து நாளைக்கு சோறு இறங்கவில்லை , பத்து மாதம் பேதி போச்சு என்று அள்ளி விட்டு கொண்டு இருக்கிறார்கள் இன்று வரை .. எனக்கு தெரிந்து எந்த படமும் அந்த திரையரங்க வாசல் வரைக்கும்தான் , மிஞ்சி போனால் அவர்கள் வீட்டுக்கு போய் சாப்பிடும் வரைக்கும் இல்லை வேறு வேலை பார்க்கும் வரைக்கும்தான் மனதில் இருக்கும் , பத்து நாட்கள் எல்லாம் ஒரு படத்தின் பாதிப்பிலேயே இருந்தால் உங்களை கீழ்பாக்கத்திர்க்கு அனுப்பி விடுவார்கள் ... மனைவி பத்தினியாக இருந்தால் மட்டுமே கடவுள் கண்ணுக்கு தெரிவார் என்று சொன்னவுடன் எல்லாரும் என் கண்ணுக்கு கடவுள் தெரிகிறார் என்று சொல்லியதை போலத்தான் அறிவுஜீவிகளுக்கும் , சினிமா பற்றிய புரிதல் இருப்பவர்களுக்கு மட்டும்தான் பாலாவின் படம் புரியும் என்று விகடன் போன்ற அறிவுஜீவி பத்திரிக்கைகள் கிளப்பி விட இன்று வரை நானும் அறிவாளிதான் என்று நிரூபிக்க பாலாவின் படங்களை ஆகா ஓகோவெண்டு  கொண்டாடும் போலி அறிவுஜீவிகள்தான் இங்கு நிறையபேர் இருக்கிறார்கள் ...     

பாலாவின் படங்கள் நன்றாகவே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம் , பாலாவின் படங்கள் ரசிக்கும் படி இருக்கும் ஒத்துகொள்கிறேன் , ஆனால் ரசிக்கும்படியாக படம் எடுக்கும் எல்லாருமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடபடும் தகுதி உடையவர்கள் கிடையாதே ... ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விஷயங்களை யதார்த்தம் இல்லாமல் கொஞ்சம் மிகைபடுத்தபட்ட சினிமாதனங்களோடு விக்ரமன் தொடர்ந்து படைத்து வந்தால் அவரை டெம்ப்ளேட் இயக்குனர் என்று ஒதுக்கி வைக்கிறோம் .. ஆனால் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் நிஜ வாழ்க்கைக்கு கொஞ்சம் கூட ஒத்துவராத , யதார்த்ததுக்கு புறம்பான, மசாலா தூக்கலாக ,  சினிமாத்தனங்கள் நிறைந்த படங்களை தொடர்ந்து கொடுத்து வந்தால் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம் ...


பிதாமகனை எடுத்து கொள்ளுங்கள் .. எந்த ஊரில் வெட்டியான் இப்படி இருக்கிறான் ... எந்த ஊரில் அவனை அப்படி இருக்க விடுவார்கள் ... இதே கதையை அந்த வெட்டியான் கதாபாத்திரத்தை ஒரு இயல்பான மனிதனாக வைத்து எடுக்க முடியாதா? அப்படி ஒரு இயல்பான மனிதனாக காட்டி இவரின் திரைக்கதை யுக்தியினால் அந்த கதாபாத்திரத்தை பார்க்கும் ரசிகனின் மனதில் ஆழமாக பதியவைத்து , அந்த கதாபாத்திரத்துக்கு விருது வாங்கி கொடுத்திருந்தால் தமிழ் சினிமாவில் ஒளிரும் வைரமாய் அவரை ஏற்றுக்கொள்ளலாம் , ஆனால் அந்த கதாபாத்திரத்தை ஏதோ வேற்றுகிறக மனிதனை போல உருமாற்றி , கஷ்டபடுத்தி அதன் மூலம் அந்த கதாபாத்திரத்தை ரசிகனின் மனதிர்க்குல் நுழைத்ததால் எனக்கு அவர் பித்தளையாகத்தான் தெரிகிறார் ...

அந்த படத்தில் சூரியா செய்யும் சேட்டைகளை பார்க்கும் போதெல்லாம் எரிச்சல்தான் வந்தது , அதுவும் லைலா ரயில்வே ஸ்டேஷன் முன்னாள் புழுதியில் புரண்டு அழும் காட்சியில் அந்த எரிச்சல் உச்சத்திர்க்கு போனது .... ஆனால் இதையும் பார்த்துவிட்டு சே என்ன படம்யா... சினிமானா இதுதான்யா என்று பலர் பாராட்டிய போது எனக்கு பத்தினி கடவுள் கதை ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை .... அதுவும் சூரியா இறந்தவுடன் அஷ்டகோணலாக காட்டபடும் லைலாவின் முகத்தை பார்த்து , இதுதான் லைலாவுக்கு மைல்கள் படம் , கண்டிப்பா பாப்பாவுக்கு விருது இருக்கு என்று சொன்னவர்களை அம்மணமாக நடுரோட்டில் ஓட ஓட அடிக்க வேண்டும் என்ற வெறி படம் பார்த்து கொண்டிருந்த போது எனக்கு வந்தது ...

அந்த படத்தில் விக்ரமை ஏன் அப்படி காட்ட வேண்டும் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை ..ஒரு வேளை இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு அந்த அறிவுஜீவிகள் போல  எனக்கு அறிவு இல்லையோ என்னவோ? ஏதாவது உள் வெளி குறியீடுகள் இருந்தால் யாராவது சொல்லுங்களேன் .. நானும் அறிவாளி ஆகி கொள்கிறேன் ...


எல்லா படத்திலேயும் ஒரு வித்தியாசமான இயல்புடைய கதாபாத்திரம் , அதற்க்கு ஒரு அளவுகடந்த பாசம் , கடைசியில் அதீத வன்முறை என்று ஒரே டெம்ப்ளேட்டில் படம் எடுக்கும் இவரை ஏன் யாரும் டெம்ப்ளேட் இயக்குனர் என்று சொல்லுவதில்லை? இவர் ஏன் எப்பொழுது பார்த்தாலும் விளிம்பு நிலை மக்களை பற்றியே படம் எடுக்கிறார் ... அதில்தான் கிறுக்குதனமான காட்சிகளை வைத்தாலும் அவர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணமா? (பல் டாக்டர் மகள் கிறுக்கி , சில்லறை திருடனை கலெக்டர் பாராட்டுதல்  இவரின் படங்கள் அவர்களின்  உண்மையான வாழ்க்கை முறையை பிரதிபலிக்கின்றனவா? சத்தியமாக கிடையாது  .... இவரின் ஒரே ஒரு பலம் அந்த கதைக்களங்களை கொண்டு கண்கட்டி வித்தை காட்டி அதீத வன்முறையை பரப்பி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பதுதான்... காசுக்கு காசும் ஆச்சி , பேருக்கு பேரும்  ஆச்சி .... அந்த படங்கள் வசூலிக்கும் காசிற்க்கு அவை தகுதியானவைதான் ... ஆனால் படம்னா இதுதான்யா படம் என்று ஜல்லி அடிக்கும் அளவுக்கு இவரின் படங்கள் கண்டிப்பாக இருந்ததில்லை ....  


இப்பொழுது அவன் இவன் வந்திருக்கிறதாம்.. பாருங்கள் மற்ற படங்களை கிழித்து தொங்க போடும்  திரை விமர்சகர்கள் கூட , விஷால் நடிப்பு சூப்பர் , அந்த கதாபாத்திரம் பட்டைய கிளப்புது , கிளைமாக்ஸ் நெஞ்சு அதிருது என்று ஜல்லி அடிப்பார்களே தவிர யாருமே முகத்தில் அறைந்தாற்போல் உங்களுக்கு  வேறு மாதிரி படமே எடுக்க தெரியாத பாலா என்று கேள்வி கேட்கமாட்டார்கள் ... அப்பறம் அவர்கள் பெயருக்கு முன்னாள் இருக்கும் அறிவுஜீவி பட்டம்  போய் விடுமே... அதானால் அவன் இவன் பார்க்காமலேயே நானும் சொல்லிக்கொள்கிறேன் தமிழ்சினிமாவின் "சத்தியஜித்ரே" பாலா  



Friday, June 3, 2011

அரசியல் அணிலும் , சமச்சீர் கல்வியும்




ஒரு காமெடி கும்பல் ஜெயலலிதாவின் வெற்றிக்கு நாங்கள் அணிலாக இருந்து உதவி இருக்கிறோம் என்று வெக்கம் இல்லாமல் பேட்டி கொடுத்திருக்கிறது ... எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு,  நீங்க எப்ப தைரியமா அம்மாவுக்கு ஆதரவு கொடுத்தீங்க பையன் ஸார்  , இதே தேர்தல் முடிவு மாறி வந்திருந்தா என்ன சொல்லி இருப்பீங்க , எங்க அப்பா என்கிட்ட அம்மாவுக்கு ஆதரவு தர சொல்லி எவ்வளவோ கெஞ்சினாறு  ஆனால் கலைஞரின் பொற்கால ஆட்சியை எதிர்த்து என்னால் பிராசாரம் செய்ய முடியாது என்று சொன்னேன் , நான் என்றுமே கலைஞர் மற்றும் அவர் குடும்பத்தினரின் நண்பன்தான் என்று சூடு சொரணையே இல்லாமல் பேட்டி கொடுத்திருப்பீங்க ... உண்மையில் நீங்கள் அணில் இல்லை , பச்சோந்தி .... 

இவ்வளவு காலமும் ஆட்சியில் இருப்பவர்களின் அடிவருடிகளாய் இருந்து கொண்டு நினைத்ததை சாதித்து கொண்டு , தேர்தல் சமயத்தில் பல்டி அடித்து இப்பொழுது அம்மாவுக்கு அடிவருட தயாராகி விட்டார்கள் இந்த வெட்கம் கெட்ட அப்பாவும் புள்ளையும் ... ஆனால் இவர்கள் நினைப்பது என்றும் நடக்காது , மக்களும் இவர்களை மதிக்கவில்லை , இவர்கள் அடிவருடிவிட ஆவலாய் இருக்கும் அம்மாவும் இவர்களை மதிக்கவில்லை ... சூப்பர் ஸ்டாரையே கண்டுகொள்ளாத அம்மா இந்த பிஸ்கோத்துகளையா கண்டுகொள்ள போகிறார் ...


இந்த பேட்டியில் பையன் நான் அரசியலுக்கு வந்து கண்டிப்பாக  என் ரசிகர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பேன் என்று உளறி தள்ளி இருக்கிறார் ..மூலையில சும்மா இருக்கிற ஆப்புல தானா ஏறி உக்காருறது இதுதான் ... மக்களே அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கத்தான் அவர் அரசியலுக்கு வர போறாராம் அத அவரே ஒத்துகிட்டாறு...  இந்த தேர்தலில் ஒரு அப்பா பையனுக்கு மாம்பழத்தில் நல்லா குத்தி சிறப்பான எதிர்காலத்தை  பரிசளித்ததை போல இவர்களும்  அரசியலுக்கு வந்தவுடனே இவர்களுக்கும் நல்லா குத்து குத்துன்னு குத்தி நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு அமைத்து கொடுங்கள் ...

இந்த காமெடி பீஸுகளுக்கு அம்மா சீக்கிரம் குச்சி மிட்டாயை வாயில் சொருகி வீட்டுக்கு அனுப்பி வைத்தால் நல்லா இருக்கும்..

-------------------------------------------------------------------------

இன்றைய அரசியலின் ஹாட் டாபிக் சமச்சீர் கல்வி திட்டம்தான்... உண்மையில் சமசீர் கல்வி என்பது எங்களை போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்... பாடங்களில் இரண்டு வகை உண்டு .. ஒன்று நம் சொந்த புத்தியினால் மட்டுமே படிக்க முடிந்த,  புரிந்து கொள்ள முடிந்த பாடங்கள் ... கணிதம் இதற்க்கு நல்ல உதாரணம்... எவ்வளவுதான் காசு செலவு பண்ணி படித்தாலும் மண்டையில் மசாலா இல்லை என்றாள் இத்தகைய பாடங்களில் தேறுவது கடினம்தான்... கார்பரேசனில் படித்தாலும் சரி மெட்ரிகுலேசனில் படித்தாலும் சரி மூளை இல்லை என்றாள் ஒன்றும் சாதிக்க முடியாது ... வருடா வருடம் கணிதத்தில் மட்டும் அதிகம் பேர் செண்டம் அடிக்க காரணம் இது கடவுளாலேயே படைக்கபட்ட சமச்சீர் பாடம் ...


இரண்டாவது வகை தொடர்ச்சியான பிராக்டீஸ் மூலம் மட்டுமே கற்று கொள்ள முடிந்த பாடங்கள்... ஆங்கிலம் போன்ற வேற்று மொழி பாடங்கள் இதற்க்கு நல்ல உதாரணம் ... இந்த பாடங்களில் மட்டும்தான் எங்களை போன்ற கிராமப்புற மாணவர்கள் மிகவும் பின்தங்கி போவார்கள் .. நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட மற்ற பாடங்களில் எல்லாம் 90 சதவீதத்திர்க்கும் மேல் எடுத்து விட்டு ஆங்கில பாடத்தில் வெறும் 60 , 70 என்று எடுத்திருப்பார்கள் ... காரணம் அந்த பாடத்தில் அவர்களுக்கு கொடுக்கபடும் குறைவான பயிற்ச்சி ... ஆனால் மெட்ரிக்குலேசன் முறையில் அவர்களின் பாடதிட்டமே ஆங்கிலத்தில் அதிக பயிற்சி அளிக்கும்படியாகத்தான் அமைக்கப்பட்டு இருக்கும் ... 

என்னுடன் கல்லூரியில் படித்த மெட்ரிக்குலேசன் மாணவர்கள் பெரும்பாலானோர் சராசரிக்கும் குறைவான புத்தி கூர்மை உடையவர்களாகவே இருப்பார்கள் , ஆனால் அவர்களின் ஆங்கில புலமை நன்றாக இருக்கும் ... அதைவைத்து அவர்கள் எளிதாக நல்ல வேலைக்கு சென்று விடுவார்கள் .,, ஆனால் எங்களை போன்ற ஸ்டேட் போர்டு  மாணவர்கள் நல்ல திறமை இருந்தும் ஆங்கிலத்தில் திண்டாடி நல்ல வாய்ப்பை எல்லாம் கோட்டை விடுவோம் ... இதற்க்கு என்னுடய நண்பர்கள் வட்டதிலேயே எவ்வளவோ உதாரணங்களை சொல்ல முடியும்... இப்படி பாடதிட்டங்களிலும் , பயிற்சி முறைகளிலும் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் கடைசியில் எங்கள் வாழ்க்கையவே மாற்றி விட்டன ... அதனால்தான் சொல்கிறேன் சமசீர் கல்வி முறை எங்களை போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ...


ஆனால் இந்த அருமையான திட்டத்திலும் அரசியல் கலந்து விட்டதுதான் தமிழ்நாட்டை பிடித்த சாபம் ... திரை கூத்தாடிகளின் ஜால்ராவை கேட்டு கேட்டு புளித்து போன முன்னாள் முதல்வர் , , எப்படி இன்று இந்தியாவே காந்திக்கு , பகத் சிங்கிற்க்கு மரியாதை கொடுத்து கொண்டிருக்கிறதோ அது போல வரும்கால தமிழகம் முழுவதும் தனக்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என்று நினைத்து இந்த அருமையான திட்டத்தையே  கெடுத்து விட்டார் ... காமராஜர் கக்கன் போன்ற "கறைபடிந்த" ஊழல்வாதிகளின் பிடியில் இருந்து இந்த தமிழ்நாட்டையே  கருணாநிதி என்னும் "உத்தமபுத்திரந்தான்" காப்பாற்றினார் என்று வரலாற்றை திரித்து மாணவர்களுக்கு அறிவு அமுதோடு கொஞ்சம் நஞ்சையும் சேர்த்து ஊட்டும் வகையில் தன் அடிவருடிகளை வைத்து பாடங்களை அமைத்து இருக்கிறார் ... இலவச திட்டங்கள் மூலம் நான்தான் இனி தமிழக நிரந்தர முதலவர் என்று எண்ணி இந்த காரியத்தை துணிந்து செய்து விட்டார் .. ஆனால் அவர் ஒன்று நினைக்க மக்கள் ஒன்று செய்து விட்டார்கள் ...


அம்மா வந்தவுடன் இந்த காரணத்தை காட்டி , சமசீர் கல்வி முறையை தள்ளி வைத்து விட்டார் என்று கலைஞர் அறிக்கை விடுகிறார் ... இதனால் 200 கோடி செலவு செய்து அச்சடித்த புஸ்தகங்கள் வீணாகி விட்டன என்று எல்லாரும் புலம்பி கொண்டு இருக்கிறாராகள் .. காசு வீணாகிறது என்றுதான் புலம்புகிறார்களே தவிர யாருமே மானவர்களின் நலன் மேல் அக்கறை உள்ளதை போல பேசவில்லை .... கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக அம்மா இதை தள்ளி வைத்தால் அது மிக பெரிய அயோக்கியதனம்ஆனால் ஆளும் கட்சியோ இதை ஒத்துக்கொள்ளாமல் , சமசீர் கல்வி என்று சொல்லிக்கொண்டு இவர்கள் அமைத்து இருக்கும் பாடதிட்டங்கள் எல்லாமும் மிகவும் கீழ்மட்டமாகவே உள்ளன ... பள்ளத்தில் இருப்பவர்களையே மேலே கொண்டு வருவதற்க்கு பதில் , இவர்கள் மேலே இருப்பவர்களையே பள்ளத்தில் தள்ளும் செயலை செய்து இருக்கிறார்கள் .... நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒரு முறை இந்த பாடத்திட்டங்களை  ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம் , அதனால்தான் இப்போதைக்கு இதை தள்ளி வைக்கிறோம் என்று காரணம் சொல்லுகிறார்கள் ....

எது எப்படியோ மாணவர்கள் மேல் உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறை இருந்தால் இவர்கள் சில காரியங்களை செய்ய வேண்டும்

  1. இந்த பாடத்திட்டம் உண்மையிலேயே மோசமாக வடிவமைக்க பட்டு  இருந்தால் , அதற்கான காரணங்களை ஒரு விரிவான அறிக்கையாக தயாரித்து மக்களுக்கு வெளிபடுத்தி, நீதிமன்றத்தின் மூலம் சம்பந்தபட்டவர்களுக்கு (அதாவது அதை வடிவமைத்தவர்கள் , அதற்க்கு துணையாக இருந்தவர்கள்) தண்டனை வாங்கி தரவேண்டும் ... இதை வெறும் 200 கோடியாக பார்க்காமல் அதனால் விளையபோகும் பின்விழைவுகளை கருத்தில் கொண்டு அந்த தண்டனை அமையவேண்டும்

  1. எந்த கட்சி சார்பும் இல்லாத பேராசிரியர்களை கொண்டு உலக தரத்தில் புதியதாக பாடதிட்டம் வடிவமைக்க வேண்டும் .... அதை எவ்வித பாகுபாடும் இல்லாமல் தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் ...
  2. ஒருவேளை இந்த பாடதிட்டதில் கலைஞர் ஜால்ட்ராவை தவிர மற்ற அனைத்தும் உண்மையிலேயே நல்ல முறையில் வடிவமைக்கபட்டிருந்தால் இந்த அரசு அந்த ஜால்ட்ரா பக்கங்களை மட்டும் பாடதிட்டதில் இருந்து நீக்கி விட்டு இந்த கல்வி முறையை உடனே கொண்டு வரவேண்டும் சாப்பாட்டில் இருக்கும் கல்லை எடுத்து ஓரமாக ஒதுக்குவதை போல ... பரீட்சைக்கு இதில் இருந்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்று சொல்லிவிட்டால் ஒருவனும் அதை சீண்ட மாட்டான் ...

அரசியல்வாதிகளே இன்றைய மாணவர்கள்தான் எதிர்கால இந்தியா ... இது அவர்களின் பிரட்சனை... எந்த  விதமான அரசியல் காழ்புணர்ச்சியோ , பழிவாங்கும் எண்ணமோ இல்லாமல் அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் ... உங்கள் காழ்புணர்ச்சியை காட்ட வேறு எத்தனையோ களங்கள் உள்ளன .. அங்கு உங்கள் சண்டையை வைத்து கொள்ளுங்கள்,, இவர்களை விட்டு விடுங்கள் ...  


சமசீர் கல்வி திட்டம் போல் அடுத்து சமசீர் மதுபான திட்டம் வருமா?

LinkWithin

Related Posts with Thumbnails