கடற்கரை பட்டினங்கள் என்றாலே நமக்கெல்லாம் சென்னை , நாகபட்டினம் , வேளாங்கண்ணி , கன்னியாகுமாரி , தூத்துக்குடி , திருசெந்தூர் , ராமேஸ்வரம் இப்படி பார்த்து பார்த்து சலித்து போன இடங்கள்தான் நினைவுக்கு வரும் ... இந்த இடங்களில் இருக்கும் கடற்கரைக்கு ஒருமுறை சென்றால் போதும் அடுத்து கடலில் குளிக்கும் ஆசையே காணாமல் போய் விடும் ... புண்ணியஸ்தலங்கள் அல்லது பொழுதுப்போக்கு இடங்கள் என்று கட்டம் கட்டபட்ட இந்த கடற்கரைகளில் எல்லாம் எப்பொழுதும் ஜனநெருக்கடி இருந்து கொண்டே இருக்கும் ... எல்லாம் செய்த பாவத்தை தொலைக்க , அல்லது செய்ய போகும் பாவத்திர்க்கு முன் ஜாமீன் கேட்டு வரும் கூட்டம் ... மக்கள் அதிகம் பேர் வந்து செல்வதானாலேயே அங்கு தண்ணீரும் மிக அசுத்தமான நிலையிலேயே இருக்கும் ... சென்னை மெரினா கடற்கரை இதற்க்கு நல்ல உதாரணம் ... ராமேஸ்வரம் , திருசெந்தூர் கடற்கரையும் மெரீனாவுக்கு சற்றும் சளைத்ததில்லை...
இரண்டு வாரங்களுக்கு முன்னாள் ராமேஸ்வரம் கடலுக்கு நானும் என் நண்பனும் சென்று வந்தோம் ...விருதுநகர் மாவட்ட மக்களுக்கு எளிதில் கண்ணில் தட்டுபடாத விஷயம் தண்ணீர்தான் ... நாங்கள் கம்மாயில் தண்ணீர் நிரம்பி பார்த்தே பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது .. அவ்வளவு பெரிய கடலை பார்த்தால் , அதில் அப்படியே மூழ்கி கரைந்து விடும் அளவுக்கு குளிக்கும் ஆசை பிறந்து விடும் .. ஆனால் அந்த கடலுக்கு அருகில் சென்றாலே ஏதோ ஒரு துர்நாற்றம் , மூக்கை பொத்தி கொண்டுதான் கடற்கரையிலேயே நடக்க முடிந்தது ... அங்கு இருக்கும் கூட்டத்தில் நடப்பது ஏதோ சென்னை அண்ணா சாலையில் டிராபிக்கில் நடப்பதை போல எரிச்சலாக இருந்தது ... கடைசியில் எங்களால் கடலில் குளிக்கவும் முடியவில்லை , கடற்கரை காற்றை அனுபவிக்கவும் முடியவில்லை...
ஆனால் அருப்புக்கோட்டைக்கு அருகிலேயே சுத்தமான , அதிகம் கூட்டம் இல்லாத , ஓரளவுக்கு பாதுகாப்பான கடற்கரைகள் அதிகம் வெளிச்சத்திர்க்கு வராமலேயே நிறைய இருக்கின்றன... அருப்புக்கோட்டையில் இருந்து சரியாக 82 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வாலிநோக்கம் மற்றும் மாரியூர் கடற்கரைகள்தான் அவை...
தென்கிழக்கு தமிழகம் என்றாலே நம்மூர் அரசியல்வாதிகளுக்கு எப்பொழுதும் அலர்ஜிதான் ... எம்ஜிஆர் காலத்தில் எப்படி இருந்ததோ இன்னமும் கொஞ்சம்கூட மாறாமல் அப்படியேதான் இருக்கிறது... அருப்புக்கோட்டையை தாண்டினால் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை ... சாலைகள் ஒழுங்காக இருக்காது , பேருந்து வசதிகளும் கிடையாது (மதுரையில் இருந்தும் அருப்புக்கோட்டையில் இருந்தும் எப்பொழுதாவதுதான் பேருந்துகள் அந்த ஊர்களுக்கு இயங்கும்) ,எனவே அந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றாள் கார் அல்லது டூ வீலர் தான் செல்ல முடியும் .... நடுவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாள் கூட பத்து கிலோமீட்டருக்கு ஒருதடவைதான் ஏதாவது கடைகள் தென்படும் , பெட்ரோல் பங்க் என்று எதுவும் கிடையாது சாயல்குடி வரைக்கும் .... அந்த ஏரியாவில் நீங்கள் செல்லும் வண்டி எங்கையாவது மக்கர் செய்தால் அவ்வளவுதான் அதை சரி செய்ய அருப்புக்கோட்டையில் இருந்துதான் ஆட்கள் வரவேண்டும் ... அதிகபட்சம் பஞ்சர் பார்க்கும் வசதி மட்டுமே இருக்கிறது அந்த ஊர்களில் ...
அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கும் எல்லா ஊர்களுக்கும் (கல்லூரணி , சாயல்குடி , பரளச்சி , பெருநாழி , வெம்பார் , கடலாடி, மாரியூர் , வாலிநோக்கம் ) சேர்த்து ஒரே ஒரு ஏடிஎம் மட்டுமே சாயல்குடியில் இருக்கிறது ... ஆனால் அதுவும் எப்பொழுதுமே மூடியேதான் இருக்கும் .. நாங்கள் அருப்புக்கோட்டையில் பணம் எடுக்காமல் அந்த ஏடிஎம்ஐ நம்பி வந்து விட்டோம் , கடைசியில் அது மூடி கிடக்க , ஏடிஎம்க்காக வீணாக அம்பது கிலோமீட்டர் சுற்றி முதுகுளத்தூர் செல்ல வேண்டி வந்தது ... இந்த அளவுக்குதான் அங்கு அடிப்படை வசதிகள் செய்யபட்டு இருக்கிறது ... ஆனால் நடுவில் தென்படும் சின்ன சின்ன ஊர்களில் கூட கண்டிப்பாக இருக்கும் ஒரு விஷயம் டாஸ்மாக் அதுவும் பார் வசதியுடன்... நம் அரசாங்கத்தை நினைத்தால் எனக்கு புல்லரிக்கிறது ....
சாயல்குடியை தாண்டி விட்டாலே மணல் பரப்பு ஆரம்பித்து விடும் ... சயல்குடியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் சரியாக இரண்டு கிலோமீட்டரில் ஒருபாதை பிரியும் வாலிநோக்கம் செல்ல ... அந்த சாலையில் இறங்கியதும் இரு பக்கமும் மணல் திட்டுகள் ஆரம்பித்து விடும் .. முழுக்க முழுக்க மணல் என்பதால் அங்கு வேறு எந்த மரமும் இருக்காது , எங்கு திரும்பினாலும் பனைமரங்கள்தான் ...
அந்த பாதையில் முதலில் வரும் சிறுகிராமம்தான் மாரியூர் ... அந்த கிராமத்தை பார்த்தால் படகுகள் , வலைகள் , மீன் சந்தை என்று கடற்கரை கிராமத்திற்குரிய எந்த ஒரு அடையாளமும் கிடையாது ... நம் ஊரை போலவே ரொம்ப இயல்பான மக்களே இருக்கிறார்கள் ... கடல் சத்தம் இல்லாமல் அமைதியாகவே இருக்கிறது அந்த கிராமம் ... அந்த ஊரை தாண்டியதும் ஒரு சிவன் கோவில் ஒன்று வருகிறது , அதுதான் கோவில் மாரியூராம் , அங்குதான் கடற்கரை இருக்கிறது .... அந்த சிவன்கோவிளை ஒட்டி ஒரு பாதை பிரிகிறது கடற்கரைக்கு செல்ல ... அந்த பாதையில் ஒரு அறைகிலோமீட்டர் சென்றதும் கடலின் ஆராவாரம் கேட்க ஆரம்பிக்கும் ... மிக மிக சுத்தமான , ஆள் நடமாட்டம் குறைந்த ஆனால் அழகான கடற்கரை அது ...
கடற்கரை மணலில் முழுவதும் சவுக்கு மரங்களும் , தென்னந்தோப்புகளும்தான் ... கடலில் சிறிது நேரம் கால் நனைத்து விட்டு , அந்த சவுக்கு தோப்புக்குள் கடந்து சென்றாள் , அதன் பிறகு ஒரு அடர்ந்த காட்டை போல எங்கும் பனைமரங்கள் தான் ... அந்த காட்டுக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படும் ஆட்கள் , பேண்ட் ஷர்ட் போட்டு இருக்கும் நம்மை பார்த்தால் மிரள்கிறார்கள் .. ஒருவர் எங்களை பார்த்ததும் திடு திடுவென ஒரு பனைமர தோப்புக்குள் ஓடினார் ... எங்களுக்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும் அவர் பின்னாடியே சென்று பார்த்தோம் , அங்கு ஒரு குடிசை முழுக்க முழுக்க பனை ஒழைகளை கொண்டே செய்து இருந்தார்கள் , அதன் அருகே சென்றவுடன் ஒரு வாட்டசாட்டமான ஆள் வந்து நீங்க யாரு தம்பி என்று விறைப்பாக இருப்பதை போல உடலை வைத்து கொண்டு கேட்டார் ...
அந்த குடிசையை சுற்றும் முற்றும் பார்த்தபின்னர்தான் எங்களுக்கு புரிந்தது அது கள் விர்க்கும் இடம் என்று .. அவர்கள் எங்களை ஏதோ மப்டியில் ரெய்டுக்கு வந்த போலீஸ் என்று நினைத்து பயந்து விட்டார்கள் ... பிறகு அவரிடம் நாங்கள் எங்களை அறிமுகம் செய்து விட்டு , கள் இருக்கா என்று விசாரித்தோம்.. அவர் முன்ன மாதிரி இப்ப இல்ல தம்பி.. அரசாங்கம் ஊருக்கு ஊர் பிராந்தி விக்கிது , நாங்க அதவிட கொரஞ்ச காசுக்கு கள்ளு கொடுத்தா அவங்க வியாபாரம் பாதிக்கபடுதுன்னு எங்களை பிடிச்சி ஜெயிலுல போட்டுராங்க.... பயந்து பயந்துதான் தொழில் பண்ண முடியிது , இப்ப போயிட்டு மதியம் ரெண்டு மணிக்கு மேல வாங்க இந்த ஏரியாவுல எங்கையாவது கள்ளு கிடைக்கும் என்று சொல்லி விட்டு உள்ளே போய்விட்டார்...
அப்பொழுது மணி பண்ணிரெண்டுதான் என்பதால் மீண்டும் ரெண்டு மணிக்கு மேல் இங்கு வரலாம் என்று வாலிநோக்கம் செல்ல முடிவு செய்தோம் ... வலிநோக்கம் மாரியூரில் இருந்து சரியாக பத்து மைல் தொலைவுதான் ... தமிழத்தின் பெரிய கப்பல் உடைக்கும் துறைமுகம் இங்குதான் இருக்கிறது ... அங்கு ஒரு பெரிய கப்பலை பாதி உடைத்து வைத்திருந்தார்கள் .. எந்த விட கெடுபிடியும் இல்லாமல் நம்மை சுற்றி பார்க்க அனுமதிக்கிறார்கள் ... பாதி உடைந்த கப்பலில் சுற்றி பார்க்கவே திகிலாக இருந்தது ... ஆனால் அந்த கப்பலின் ஒரு மூலையில் நான்கு பேர் அமர்ந்து சரக்கடித்து கொண்டு இருந்தார்கள் ... அந்த கப்பல் உடைக்கும் தளத்திர்க்கு மிக அருகிலேயே உப்பளம் இருக்கிறது ... தூத்துக்குடிக்கு அடுத்து உப்பு அதிகம் கிடைக்கும் இடம் வாலிநோக்கம்தான் என்று அந்த ஊர்காரர்கள் சொல்கிறார்கள் ...
அடுத்து வாலிநோக்கம் கடற்கரை ... பாம்பாய் படத்தில் உயிரெ பாட்டில் வரும் கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும் ... வேகமாக வரும் அலை பாறையில் மோதி மேலெலும்பி தெறித்து துளி துளியாக விழும் அழகை நான் இதுவரைக்கும் டீவியில் மட்டுமே பார்த்திருக்கிறேன் ... அந்த பாடல் எங்கு படமாக்கபட்டது என்று தெரியாது , ஆனால் அதே போன்று இங்கும் அலைகள் பத்து அடி உயரத்திர்க்கு மேல் எழுந்து வருகிறது... கடலை ஒட்டி முழுவதும் பாறைகள்தான் என்பதால் அலைகள் அதில் மோதி அவ்வளவு உயரத்திர்க்கு எழுகிறது . பாறை மேல் நின்று அந்த அலையில் குளிப்பதே தனி சுகம் ஆனால் அதில் ஆபத்து அதிகம், பாறையில் வழுக்கி கடலில் விழுந்தால் திரும்பி எழுந்திரிக்கவே முடியாது பின்லேடன் போல மீனுக்கு இரையாகிவிட வேண்டியதுதான் ...
வாலிநோக்கத்தில் இருக்கும் இன்னொரு அதிசயம் கடற்கரையில் கிடைக்கும் சுவையான நிலத்தடி நீர் ... நம்ம ஊரில் எல்லாம் 100 அடி 200 அடி தோண்டினாலும் ஒரு சொட்டு தண்ணீர் சுரக்காது , ஆனால் அந்த கடற்கரையில் வெறும் பத்து அடி தோண்டினாலே நீர் சுரந்து கொண்டு வருகிறது , கடற்கரையில் நீர் சுரப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம் , நீர் கிடைப்பதில் ஆச்சரியம் இல்லை , அது தேன் போல தித்திப்பதில்தான் ஆச்சரியமே... அதற்க்கு காரணம் இது நல்ல தண்ணீர் தீவுக்கு மிக அருகில் இருப்பதால் கூட இருக்கலாம் .. ஆமாம் நல்ல தண்ணீர் தீவுக்கு வாலிநோக்கத்தில் இருந்து பத்து நிமிட பயணத்தில் சென்று விடலாம் ... அது என்ன நல்ல தண்ணீர் தீவு என்று கேட்பவர்களுக்கு அந்த தீவில் எங்கு தோண்டினாலும் நல்ல தண்ணீர்தான் கிடைக்கும் அதான் அந்த பெயர் ...
இங்கிருந்து அங்கு செல்லவேண்டுமானால் போட்டில்தான் செல்ல வேண்டும் ... அதற்க்கு வாடகை 1200 ரூபாய் கேட்பார்களாம்... மேலும் அங்கு செல்ல அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் மற்றும் பஞ்சாயத்து தலைவரின் அனுமதியும் வாங்கி இருக்க வேண்டுமாம்... காரணம் அந்த தீவில் நடக்கும் போதை மருந்து கடத்தல் தொழில் .. அதனால் இவ்வளவு கெடுபிடிகளாம்... சமீபத்தில் கூட , அங்கு சுற்றுலா சென்ற நான்கு பேர் மீது போலீஸ் என்று நினைத்து ஒரு கள்ள கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் ... அதை கேட்ட பிறகு, அங்கு போக வேண்டும் என்ற ஆசை சுத்தமாக போயி விட்டது...
சரியாக இரண்டு மணிக்கு மீண்டும் மாரியூர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தோம் ... அந்த கடற்கரையை சுற்றிலும் பனைமரங்கள்தான் .. அந்த ஊர் மக்களின் முக்கியமான தொழில் பனை ஏறுவதுதான்... ஒவ்வொரு பத்து பனைமரங்களுக்கு ஒரு குடும்பம் வீதம் கீழே குடிசை போட்டு வாழ்ந்து வருகிறார்கள் ... அந்த குடும்பத்தலைவன் மாலையில் பனைமரங்களில் ஏறி ஒரு மண் குவளையை அந்த பனைமரத்தின் குருத்துகளில் கட்டி விட்டு வருவார் .. அந்த குருத்துகளில் இருந்துதான் பனை நீர் சுரந்து சொட்டு சொட்டாக அந்த பானையில் விழும் ... ஒவ்வொரு மரத்தில் இருந்தும் அதிகபட்சம் ஒரு நாளைக்கு நூறு மில்லி பனை நீர் கிடைப்பதே கஷ்டம் .. அந்த பனைநீரைத்தான் கள்ளு என்று சொல்லுவார்கள் ... ஆனால் அந்த கள்ளை அப்படியே விற்க்க முடியாது காரணம் அது அரசாங்கத்தால் தடை செய்ய பட்டது ...
இவர்கள் அந்த கள்ளோடு கொஞ்சம் நீரையும் சுண்ணாம்பையும் கலந்து பதணி தயாரித்து விர்ப்பார்கள் ... ஒரு நாளைக்கு நான்கு குடம் பதநீர் தயாரித்து விர்பார்க்கலாம் .. அது நம்மூர் பதணி போலவெல்லாம் இருக்காது .. சுத்தமான பதநீர் ... உங்களால் இரண்டு கப்புக்கு மேல் குடிக்க முடியாது .... சுண்ணாம்பு கலந்து இருந்தாலும் அது சுவையில் சுத்தமாக தெரியாது .. ஒரு கப் ஐந்து ரூபாய் ... மொத்தம் ஒரு பானையில் ஐம்பது கப் இருக்குமாம் .... ஆனால் பதநி விற்பனை அவ்வளவு சூடாக நடக்காதாம் ... ஒரு நாளைக்கு இருபது கப் விற்பதே பெரிய விஷயம் ... மக்கள் பதனியை விட கள்ளைதான் அதிகம் விரும்பி குடிப்பார்களாம் ... அதனால்தான் எவ்வளவு போலீஸ் கெடுபிடி இருந்தாலும் தினமும் எங்கையாவது மறைமுகமாக கள் விற்பனை ஜோராக நடக்கும் ... ஒரு கடையில் மட்டும் ஒவ்வொரு நாளும் நூறு கப்புகளுக்கு மேல் கள் விற்பனை நடக்குமாம் ...
காரணம் கள் ஒரு கப் பத்து ரூபாய்தான் ... இரண்டு “கப்” கள் குடித்தாலே ஒரு குவாட்டர் அடித்த போதை கிடைக்கும் ... பிராந்தி விஸ்கியை போல அதிகம் நாற்றமும் அடிக்காது ...மேலும் உடம்பிர்க்கு கெடுதியும் இல்லை ... இதானலயே மக்கள் கள்ளைதான் அதிகம் விரும்புகிறார்கள் ... டாஸ்மாக்களில் வியாபாரம் குறைந்து விடுகிறது ... கள் இறக்க அரசாங்கம் தடை செய்ய மிக முக்கிய காரணமே இதுதான்...
கள் விற்பனை செய்ய தைரியம் இல்லாதவர்கள் விற்றது போக மீதி இருக்கும் பதநீரில் இருந்து கருப்பட்டி காய்ச்சுகிறார்கள்... ஒரு பானை பதநீரில் இரண்டு கிலோ கருப்பட்டிதான் கிடைக்குமாம் ... அங்கு ஒரு கிலோ கருப்பட்டியின் விலை 60 இல் இருந்து 70 வரைக்கும்தான் ... அதே கருப்பட்டி நம்மூருக்கு வரும் போது கிலோ 120 ஆகிறது (வெல்லம் எடுக்கிறது ஒருத்தன் விரல் சூப்புறது வேறொருத்தன் )... இதே பதநீரை இன்னும் அதிகமாக சுண்ட காய்ச்சினால் பனங்கல்கண்டு கிடைக்கும் ... இதற்க்கு மருத்துவ குணங்கள் அதிகம் .. உங்களுக்கு சளியோ , இருமலோ , ஜலதோசமோ இருந்தால் இந்த சுத்தமான ஒரிஜினல் பனங்கல்கண்டு சாப்பிட்டால் இருமல் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விடும் ... ஆனால் ஒரு குடம் பதநீரில் அரை கிலோ கல்கண்டுதான் கிடைக்கும் ...
பதநி இறக்குபவர்களுக்கு எப்படி பார்த்தாலும் கள்ளில்தான் வருமானம் அதிகம் ... ஊர் ஊருக்கு டாஸ்மாக் திறந்து மக்களுக்கு ஊற்றி கொடுக்கும் அரசாங்கம் இவர்கள் வயிற்றில் மட்டும் அடிப்பது ஏனோ?
நாங்கள் ஒரு வழியாக அழைந்து திரிந்து கள் விற்க்கும் இடத்தை கண்டு பிடித்து ஆளுக்கு இரண்டு கப் அடித்து விட்டு வந்தோம் ... சும்மா சொல்லக்கூடாது அவ்வளவு சுவையாக இருந்தது அந்த கள் ... அப்பொழுதுதான் பனை மரத்தில் இருந்து இறக்கினார்களாம் .... இருபது ரூபாயில் சொர்க்கத்தை பார்த்து விட்டு மீண்டும் கடற்கரைக்கு சென்றோம் .. அங்கு எங்களை தவிர யாருமே இல்லை ... ஆள் இல்லாத அந்த தனிமையும் , ஓ வென்று கூச்சல் இட்டுக்கொண்டு எங்கள் காலை தொடும் அலையும் , சுழன்று சுழன்று அடித்த உப்பு காற்றும் , எங்கள் உள்ளே இறங்கிய கள்ளும் சேர்ந்து எங்களை சிறு குழந்தைகளாகவே மாற்றி விட , யாரும் இல்லா அந்த கடற்கரையில் குழந்தைகளாகவே மாறி விட்டோம் (ஹி ஹி ,, shame shame bubby shame.) .. எவ்வளவு நேரம் கடலில் விளையாடி கொண்டு இருந்தோம் என்று தெரியவில்லை , இருட்டிய பின்னர்தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம் ...
அரசாங்கம் கொஞ்சம் சிரத்தை எடுத்து பேருந்து வசதி , ஹோட்டல் வசதி , கொஞ்சம் பாதுகாப்பு என்று சில வசதிகளை செய்து கொடுத்தால் இந்த இடங்கள் எல்லாம் மிக சிறந்த சுற்றுலா தலங்களாக மாறும் வாய்ப்பு அதிகம் உண்டு ... இல்லை என்றாள் இந்த ஊர் மக்களாவது ஏதாவது கோவிலை கட்டி , அந்த சாமியும் சக்தி வாய்ந்த சாமியாக அமைந்து , இது புண்ணியஸ்தலமாக ஏற்று கொள்ளபட்டால் விரைவில் பிரபலமாகி விடும் .... மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்வார்கள் , அவர்கள் அழுக்கை இந்த கடலில் ஏற்ற...