Followers

Copyright

QRCode

Thursday, July 8, 2010

உலக படம் - My Little Bride




பதிவுலகம் வந்து நான் கற்று கொண்ட நல்ல விசயங்களில் ஒன்று உலக படங்கள் பார்க்க கற்று கொண்டது .... முதலில் இங்கு எல்லாரும் உலக படங்களை சிறந்த படங்கள் என்றும் நம் ஊர் படங்களை இன்னும் வளர வேண்டும் என்றும் எழுதியதை பார்க்கும் பொழுது அக்கரை பச்சை என்ற மன நிலையில் எழுதுகிறார்கள் என்று நினைத்திருந்தேன் ... பின்னர் என் நண்பர் ஒருவரின் மூலம் சில உலக படங்கள் எனக்கு அறிமுகம் ஆனது .. அவர் ஒரு ஹோரர் பட ரசிகர் , அவர் கொடுத்த படங்கள் அனைத்தும் அந்த வகையை சேர்ந்த படங்களே... ஆனா நான் ரொம்ப இளகிய மனசுக்காரன் .. ஒற்றன் அப்படின்னு ஒரு அர்ஜுன் படம் வந்தது ஞாபகம் இருக்கா? அந்த படத்துல வில்லன் ஒருத்தனோட கை விரல மடக்கி ஒடுச்சிடுவான் , அந்த காட்சிய பாத்துட்டே நாலு நாலு சோறு தண்ணி உள்ள எறங்காம ஜன்னி வந்து படுத்திருந்தேன் .. அப்படி பட்ட என்ன saw , hostel , wrong turn ன்னு தன் கால தானே அறுக்குறது, கண்ண நோண்டி சாவிய எடுக்கிறதுன்னு கொடூரமான காட்சிகளா பாக்க வச்சி கிட்டத்தட்ட என்னையும் ஒரு சைக்கோ மன நிலைக்கு கொண்டு வந்துட்டாரு அந்த நண்பர் ... ஒரே ரத்தமா பாத்து பாத்து எனக்கே வெறுப்பா இருந்த நேரத்துல , ஏதாவது ஒரு ரொமாண்டிக் காதல் கதையுடன் கூடிய ஜாலியான படம் கெடைக்காதான்னு மனசு ஏங்கிகிட்டு இருந்த நேரத்துல, ஒரு தோழியின் மூலமாக இந்த படம் எனக்கு கிடைத்தது..

இந்த படத்தை பார்த்த பின்னர்தான் உண்மையிலேயே நம் ஊர்காரர்கள் இன்னும் சினிமாவில் எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை நன்கு உணர முடிந்தது. கதை நம் ஊர் படங்களில் பார்த்து பார்த்து அலுத்து போன  ஒரு களம்தான்.. பிடிக்காத இருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்ள வேண்டி வருகிறது , அதன் பின்னர் அவர்கள் வாழ்கையில் நடக்கும் விசயங்களை,, எப்படி அவர்களுக்குள் காதல் பிறக்கிறது என்பதையும் சிரிக்க சிரிக்க சொல்லி இருப்பார்கள் ... கதை ரொம்ப பழசான கதைதான் ..அதை எடுத்த விதத்தில்தான்  நம் இயக்குனர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருப்பார் இந்த படத்தின் இயக்குனர் Ho-joon Kim .



படத்தின் நாயகின் பெயர் beuon ... பதினைந்தே வயது ஆகும் அவள் ஒரு பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவி .. படத்தின் நாயகன் பெயர் sangmin ... ஓவிய கல்லூரியில் பட்டம் பெற்ற இளைஞன் ... beuon படிப்பில் மிகவும் ஈடுபாடு உடையவள் .. sangmin நேர் எதிர் , பெண்களின் மேல் ஈடுபாடு உடையவன் ... இவனை beuounக்கு சுத்தமாக பிடிக்காது .இருவருமே தங்கள் தாத்தாவின் மேல் மிகுந்த பாசம் உடையவர்கள் .. அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டி விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள் ... திருமணத்திற்கு பின்னர் beuon தன் பள்ளியில் யாரிடம்மும்  தான் திருமணம் ஆனவள் என்பதை சொல்ல பயப்படுகிறாள் ... எல்லோரும் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று . அவளுக்கு பள்ளியில் jungwoo என்ற பையனுடன் பழக்கம் ஏற்படுகிறது , இவன்தான் தன் காதலன் என்று நம்புகிறாள் ...இந்த விஷயம் சங்க்மின்க்கும் தெரிய வருகிறது  . இந்நிலையில் sangmin அதே பள்ளியில் ஆசிரியராக பணி புரிய வருகிறான் ... அதன் பின்னர் நடக்கும் கலாட்டாக்களை சுவாரசியமாகவும் இறுதியில் மனதை தொடும் முடிவோடும் இயக்கி இருப்பார் இயக்குனர் ...

இந்த கதையை படித்தவுடன் எங்கயோ கேள்விபட்டது போல்  இருக்கா? அப்படினா நீங்க ஸ்ரீகாந்த் , மீரா ஜாஸ்மின் நடிச்ச மெர்குரி பூக்கள் படம் பாத்திருப்பீங்க.. நம்ம ஆளுக சாதாரணமான ஆளுக கிடையாது .. உலகத்துல எந்த மூலையில நல்ல படம் வந்தாலும் தேடி பிடிச்சி காப்பி அடிச்சிடுவாணுக ... ஆனா மெர்குரி பூக்கள் படத்த Ho-joon Kim பாத்தாருனா அந்த இயக்குணர நாலு வார்த்த கேவலமா கெட்ட  வார்த்தையில திட்டிட்டு தூக்கு மாட்டி தற்கொலை பண்ணிகிவாறு ... தன்னோட கதையை இப்படி நாரடிச்சிட்டானுகளேன்கிற துக்கத்துல...

படத்தோட மிக பெரிய பலமே beoun கதாபாத்திரத்துல நடிச்சிருக்கிற Moon Geun Youngதான்.. ஒன்னும் தெரியாத அப்பாவி பொண்ணோட முகத்த அப்படியே வெளிபடுத்தி இருக்கும் பொண்ணு  ... திருமணம் நடக்கும் நாள் அன்று தன் அம்மாவிடம் அழும் காட்சி , தேனிலவுக்கு தன் கணவனை மட்டும் தனியாக அனுப்பி விட்டு தன் பாய் பிரண்டுடன் மழையில் சுற்றும் காட்சி , இரவில் தன் அருகில் படுக்க வரும் தன் கணவனை பென்சில் கொண்டு தாக்கும் காட்சி , மறு நாள் காலையில் அவனின் ஜட்டியை கழட்டி விட்டு நிர்வாணமாக இருக்கும் அவனை பார்த்து குழைந்தையை போல சிரிக்கும் காட்சி , கடைசியில் தன் கணவன் மேல் இருக்கும் உண்மையான காதலை புரிந்து கொண்டு அவனிடம் அழுது கொண்டே தன் காதலை வெளி படுத்தும் காட்சி என்று
படம் முழுக்க பட்டைய கிளப்பி   எல்லாரையும் ஈசியா பின்னுக்கி தள்ளி நம்ம மனச முழுசா அள்ளிடும்   இந்த குட்டி பொண்ணு...

படத்தின் நாயகன் Kim Rae Won ... தன மனைவிக்காக பள்ளி ஆண்டு விழா மேடையில் ஓவியம் வரையும் பொழுது தன்னையும் அறியாமல் சிறு வயதில் அவளுடன் ஊஞ்சல் ஆடும் படத்தை வரைந்து விட்டு அதை பார்த்து கண்ணீர் விடும் பொழுது நம் மனதை அள்ளுகிறார்... தன் மனைவி வேறு ஒருவனுடன் ஊர் சுற்றுகிறாள் என்பதை அறிந்திருந்தும் இரவு லேட்டாக வீட்டுக்கு வரும் அவளை கோபபடாமல் அன்பாக அறிவுரை சொல்லும் ஒற்றை காட்சியிலேயே  அவர் காதலை நமக்கு புரிய வைத்து இருப்பார் இயக்குனர்  ., படத்தில் இந்த மாதிரியான கதையோடு ஒட்டி வரக்கூடிய காட்சிகள் அதிகம்...

பின்னணி இசை நம் ரகுமானை நினைவு படுத்துகிறது ... இதில் மட்டும் நம் இளையராஜாவை அடித்து கொள்ள யாரும் கிடையாதோ? இல்லை எனக்கு அப்படி தோன்றுகிறதோ?

படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே படத்தோடு ஒன்ற ஆரம்பித்து விடுவீர்கள் , படம் முடியும் பொழுது மீண்டும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று உங்களுக்கு கட்டாயம் தோன்றும் ... அதுதான் அந்த இயக்குனரின் வெற்றி .. இதை போல பீல் குட் படங்கள் நம் ஊரிலும் எடுக்க ட்ரை பண்ணுகிறார்கள் , ஆனால் ஒரே மாதிரியான டெம்ப்ளேட் காட்சி அமைப்பில் சொதப்பி விடுகிறார்கள்  ... இப்பொழுது இருக்கும் இயக்குனர்களில் இந்த படத்த தமிழில் ரீமேக் செய்ய தகுதி யுடைய இயக்குனர் செல்வராகவன் மட்டுமே ... நாயனாக தனுசும் , நாயகியாக ஷாலினியின் தங்கை ஷாம்ளியும் நடிக்கலாம் ...

இப்படி ஒரு படம் நம் ஊரில் வராதா  என்று என்னை ஏங்க  வைத்து விட்டது இந்த "My Little Bride"

இந்த வரிசையில் அடுத்த உலக சினிமா "My sindrella story"... விரைவில் அந்த படத்தின் விமர்சனத்தோடு சந்திக்கிறேன் ...



7 comments:

ஆர்வா said...

படம் பார்க்காத என் போன்ற ஆட்களுக்காக இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கலாம். அழகான விமர்சனம். ஷாம்லின்னு நீங்க சொன்னது ஓகே.. நல்ல சாய்ஸ்.. ஆனா தனுஷ்??????

Yoganathan.N said...

நம்ம நண்பர் உல்க சினிமா பார்க்க ஆர்ம்பிச்சாசு. ஹோரர் படம் பார்ப்பீங்களா? குட்.

இந்த படம் Chinese-A இல்லை Korean-A? விமர்சனம் அருமை, படம் பார்க்க என்னைத் தூண்டுகிறது.

//பின்னணி இசை நம் ரகுமானை நினைவு படுத்துகிறது ... இதில் மட்டும் நம் இளையராஜாவை அடித்து கொள்ள யாரும் கிடையாதோ? இல்லை எனக்கு அப்படி தோன்றுகிறதோ?//

இல்லை, கண்டிப்பாக உங்களுக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறது. :P

எனனைக் கேட்டால், செல்வாவை விட ஜெயம் ராஜா இன்னும் நல்ல தேர்வு என்பேன். அவர் தான் ரீமெக் specialists. ஹஹ

தொடருங்கள் உங்கள் உலக சினிமாவை. :)

Btw, forum-இல் நிறைய சகாக்கள் welcome சொல்ல்யிருக்கிறார்கள். அவர்களை கவனிக்கவும். :)

Yoganathan.N said...

Btw, heroine chO chweeet yA... எனக்கு இந்த மாதிரி ஒரு galfren அமைந்தால் நல்லா இருக்கும். ஹிஹி

"ராஜா" said...

நன்றி கவிதை காதலன் .. படம் பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும் ...தனுஷ் ... நம்ம ஊருல அவர தவிர வேறு யாரு இருக்கா இந்த கதாபத்திரத்தில் பொருந்தி போக ... படம் பார்த்த பின்னர் எனக்கு தோன்றிய எண்ணம் இது ...

நன்றி யோகநாதன் .. ஹோரர் படம் பாத்தேன் ... இனிமேல் பாக்க மாட்டேன் ... முடியலடா சாமீ ... நைட் தூக்கத்துல கூட கொலபண்ற மாதிரிதான் கனவு வருது ... நமக்கு கனவுல டூயேட் பாடத்தான் பிடிக்கும் தல ... இனிமேல் நான் பார்த்த பார்க்க போகிற வேற்று மொழி காதல் படங்களை விமர்ச்சனம் செய்யலாம் என்று இருக்கிறேன் ... உங்கள் ஆதரவு கட்டாயம் தேவை ...

போட்டோ பாத்ததுக்கே இப்படியா? படம் பாத்தீங்க அந்த பொண்ண தேடி கொரியாவுக்கே போய்டுவீங்க(இது ஒரு கொரியன் படம் தல) .. அவ்ளோ கியூட் அந்த பொண்ணு ..

வந்துறேன் நம்ம போரமுக்கு ...

ILLUMINATI said...

நண்பா,மிக அருமையான கொரியன் படங்களில் இதுவும் ஒன்று.நானும் ஒரு காலத்தில் இதற்கு விமர்சனம் எல்லாம் எழுதினேன். :)
My sassy girl,a moment to remember,classic எல்லாம் பாருங்க.

"ராஜா" said...

@ILLUMINATI

நண்பா தங்களின் விமர்சன பதிவின் லிங்க் அனுப்ப இயலுமா? படிக்க ஆவலுடன் உள்ளேன்

ILLUMINATI said...

http://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.html

இதோ.ஆரம்பத்துலையே சொல்லிடறேன்.நானு எழுதுனது எல்லாமே மொக்க தான்.அதுலயும் இது சூர மொக்கை.பார்த்து ஓய்.. :)

LinkWithin

Related Posts with Thumbnails