Followers

Copyright

QRCode

Saturday, March 27, 2010

குண்டு வக்கிரவன எல்லாம் விட்டிடுங்க....



நம் நாட்டில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஒரு கனவு வாழ்கையில ஒருதடவையாது வெளிநாடு பயணம் போகணும் அப்படிங்கிறது... அதுவும் என்ன மாதிரி கிராமத்தில பிறந்து வளர்ந்த பசங்களுக்கு விமானத்த பாக்குறதே ஒரு கனவு மாதிரி பிரமிப்பா இருக்கும் ... வானத்துல சிறுசா ஒரு புள்ளியா சத்தம் கொடுத்துகிட்டே பறந்துகிட்டு இருக்குற ஒரு விமானத்த அது கண்ணுக்கு தெரியிற வர தரையில தொரத்திக்கிட்டே மூட்சிரைக்க எத்தன தடவ ஓடியிருப்போம்... நம்ம பாத்த அந்த விமானத்த பத்தி அத பாக்காம போன நண்பன்கிட்ட எப்படி எல்லாம் பிரமிப்பா அதோட பிரமாண்டமான சத்தத்தையும் வேகத்தையும் சொல்லிருப்போம்....


அந்த வயசுல எப்பாவாது மதுர பக்கம் பஸ்சுல போனா ஏர்போர்ட் தாண்டி போறப்ப அங்க நிக்கிற விமானத்த ரொம்ப நெருக்கமா பாத்துட்டா அன்னைக்கி இரவு முழுவதும் தூக்கமே வராது , அப்பாகிட்ட விமானத்த பத்தி நெறைய சந்தேகம் கேட்டுகிட்டே அவரோட தூக்கத்தையும் கெடுத்துகிட்டு இருந்திருப்போம்... எப்பப்பா என்ன விமானத்துல கூட்டி கிட்டு போவேன்னு ?கேட்டா , நீ பெரிய பையன் ஆகி நல்ல வேலைக்கி போய் நல்லா சம்பாதிச்சி என்னையும் அம்மாவையும் உன் தம்பியையும் கூட்டிடு போடான்னு அவர் சொல்லுறப்ப இதுக்காகவாது நல்லா படிச்சி நல்ல வேலைக்கி போகணும்னு மனசு ஆசைபடும் ....

இப்ப நல்லா (ஓரளவுக்காது ) படிச்சி ஒரு நல்ல வேலைக்கி வந்தாச்சி, நான் வேல பாக்குற இடத்துல ஒரு நாள் ஒரு சர்குலர் வந்தது , மே மாதம் ஒரு வாரம் சிங்கப்பூர் ட்ரிப் , விருபபட்டவங்க வரலாம் , எல்லா ஏற்பாடுகளும் நிர்வாகம் பாத்துக்கிடும் , பயண செலவு மட்டும் அவரவர் பார்த்து கொள்ள வேண்டும் என்று , நான் என் நீண்ட நாள் கனவு நிறைவேற போகும் சந்தோஷத்தில் உடனே வீட்டிற்கு போன் செய்து கேட்டேன் , என் அப்பாவும் அம்மாவும் அலுவலக பணிகள் இருக்கும் என்பதால் வர இயலாது நீயும் தம்பியும் போயிட்டு வாங்கடா என்று சொன்னார்கள் , என் தம்பியிடம் போன் செய்து கேட்டேன் அவன் மே மாதம் எனக்கு கம்பெனியில் ஒரு வாரம் விடுமுறை தருவார்கள் , நானும் வருகிறேன் என்று சொல்லி விட்டான் , நானும் இங்கு என் பெயரையும் என் தம்பி பெயரையும் கொடுத்து விட்டேன்.

பாஸ்போர்ட் இல்லாதவர்கள் மார்ச் மாத இறுதிக்குள் தந்து விட வேண்டும், விசா வாங்க எளிதாய் இருக்கும் என்று சொல்லி இருந்தார்கள் , என்னிடம் பாஸ்போர்ட் இல்லாத காரணத்தினால் ஜனவரி மாதம் எங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க சென்றேன் .

அங்கு நிறைய agentகள் என்னிடம் பேரம் பேசினார்கள் , ஒருவர் ரெண்டாயிரம் மட்டும் கொடுங்கள் பத்தே நாளில் தக்கல் இல்லாமல் சாதா விண்ணப்பத்தில் நான் பாஸ்போர்ட் எடுத்து தருகிறேன் என்று கூறினான், என்னுடன் என் நண்பன் ஒருவன் வந்து இருந்தான் அவனிடம் ஒரு முக்கியமான ஆவணம் இல்லை , எனவே அவன் அந்த ஏஜென்டிடம் விசாரித்தான் , கூட ஒரு ஆயிரம் செலவாகும் என்று பதில் வந்தது அவனும் சரி என்று கூறி விட்டான்...

இப்பொழுதெல்லாம் பாஸ்போர்ட் விண்ணபித்த நாற்பது நாட்களுக்குள் வந்து விடும் என்பதால் நான் நேரடியாக விண்ணபித்து கொள்ளலாம் என்று சொல்லி விட்டேன் , பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள ஒரு கடையில் ஆன்லைன் வசதி உள்ளது என்று அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் கூறினார் அந்த கடைக்கே சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொண்டு வந்து கொடுத்தேன் .

அந்த அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணபிக்க வரும் நபர்களின் விண்ணபத்தையும் அவர்கள் கொண்டு வந்திருக்கும் ஆவணங்களையும் சரி பார்க்க ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு இருந்தார் அவர் வேலையே தேவையான எல்லா ஆவணங்களும் உள்ளதா என்று சரி பார்ப்பது மட்டுமே... ஏதேனும் இல்லாமல் இருந்தால் அவரே சொல்லி விடுவார் நாம் அடுத்த நாள் வந்து நம் விண்ணபத்தை அந்த ஆவணத்துடன் கொடுத்து கொள்ளலாம்...

என்னுடைய விண்ணபதையும் சான்றிதல்களையும் சரிபார்த்த அலுவலர் அனைத்தும் சரியாக இருக்கிறது,, நாங்கள் இன்றே இந்த விண்ணப்பத்தை மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விடுகிறோம் இன்னும் முப்பது நாட்களில் உங்களுக்கு பாஸ்போர்ட் வந்து விடும் என்று கூறினார் ... நானும் மிகுந்த சந்தோசத்துடன் வந்து விட்டேன் ...

விண்ணபித்த பத்து நாளில் போலீஸ் நிலையத்தில் இருந்து போன் வந்தது for police verification, அவர்கள் விசாரித்து விட்டு வங்க வேண்டியதை வாங்கி விட்டு , நாளைக்கே verification முடித்து அனுப்பி விடுகிறோம் என்று சொல்லி விட்டார்கள் , அடுத்த இரண்டாம் நாள் எனக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து SMS வந்தது police verification completed, passport under progress என்று , சரி எல்லாம் முடிந்து விட்டது இன்னும் ஒரு வாரத்தில் பாஸ்போர்ட் வந்து விடும் என்று நினைத்திருந்தேன்..

ஆனால் ஒரு மாதம் ஓடி விட்டது எனக்கு பாஸ்போர்ட் வரவில்லை, அப்பொழுதுதான் என்னுடைய விண்ணப்பத்தின் online status பார்த்தேன் அதில் நான் வேலை பார்க்கும் இடத்தில இருந்து சான்றிதழ் வாங்கி தரவில்லை என்று இருந்தது , என்னடா இது வம்பா போச்சி என்று அடுத்த நாளே நான் வேலை பார்க்கும் இடத்தில இருந்து சான்றிதழ் வாங்கி கொண்டு மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் சென்றேன் .

அங்கெ வெளியே வெயிலில் இரண்டு மணி நேரம் கியூவில் நின்று விட்டு பிறகுதான் உள்ளே போக முடிந்தது , தினமும் நூற்றுகணக்கான பேர் வெயிலில் ரெண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் வரிசையில் நிற்கும் இடத்தில ஒரு கூரை கூட இல்லை , நான் உள்ளே சென்ற வுடன் என்னை inquiry கௌண்டரில் வெயிட் பண்ண சொன்னார்கள் , அந்த கௌண்டரில்ஒரு மணி நேரமாக எந்த அலுவலரும் வர வில்லை

பின்னர் ஒருவர் வந்தார் அவரிடம் நான் நடந்ததை கூறி நான் வாங்கி வந்த சான்றிதழையும் காண்பித்தேன் , ஆனால் அவர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து இது சம்பந்தமாக உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தோமே அதை எங்கே என்று கேட்டார், நான் எனக்கு எதுவும் கடிதம் வரவில்லையே என்று கூறினேன், உடனே அவர் என்னுடைய முகவரியை வாசித்து காட்டி சரி பார்த்து கொண்டார். பின் இந்த முகவரிக்கு மார்ச் நான்காம் தேதியே ஒரு கடிதம் அனுப்பி விட்டோம் அதை நீங்கள் கொண்டு வந்து காட்டினால்தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்லி விட்டார்(நான் சென்று இருந்தது மார்ச் 16 ஆம் தேதி), நான் கையோடு எடுத்து போய் இருந்த என்னுடைய விண்ணப்பத்தின் online satusஐ காட்டினேன் , அவர் இதெல்லாம் செல்லாது அந்த கடிதம்தான் வேண்டும் என்று சொல்லி விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார்...

அவர்கள் அந்த கடிதத்தை நான்காம் தேதியே அனுப்பி இருந்தால் எனக்கு கண்டிப்பாய் இரண்டு நாட்களுக்குள் கிடைத்திருக்கும் , ஒருவேளை அவர்கள் முகவரி தப்பாய் அனுப்பி இருந்தால் அவர்களுக்கு கடிதம் ஒரு வாரத்திற்குள் திரும்பி வந்திருக்கும் , இரண்டுமே நடக்க விலை , அவர்கள் கண்டிப்பாய் கடிதம் அனுப்பி இருக்க மாட்டார்கள்...

மீண்டும் அந்த கடிதம் எனக்கு அனுப்பப்படுமா என்று நான் கேட்டேன் , அவர் ஒரு request கடிதம் எழுதி கொடுங்கள் அடுத்த மாதம் முதல் வாரம் நாங்கள் உங்களுக்கு கடிதம் அனுப்பி வைப்போம் என்று கூறினார்... அதற்குள் எனக்கு பாஸ்போர்ட் சமர்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்து விடும் வேறு வழியே இல்லையா என்று அவரிடம் கேட்டேன் அவர் இதுதான் ஒரே வழி என்று கூறி விட்டு சென்று விட்டார்... ஒரு கடிதத்தினால் என்னுடைய சிங்கப்பூர் பயணம் ரத்தான வருத்தத்தில் அவர் கேட்ட request கடிதத்தை எழுதி கொடுத்து விட்டு வந்து விட்டேன் ... என்னுடன் விண்ணபித்த அந்த நண்பனுக்கு சொல்லியதை போலவே ஒரு ஆவணம் இல்லாமலே பத்தே நாளில் பாஸ்போர்ட் வந்து விட்டது..

எனக்கு என்ன சந்தேகம் என்றால் நான் முதல் முறை பாஸ்போர்ட் விண்ணபித்த அலுவலகத்தில் என்னுடைய ஆவணங்களைஎல்லாம் சரி பார்த்த அந்த அலுவலர் முதலிலேயே சொல்லி இருந்தால் அன்றே என்னுடைய வேலை பார்பதற்கான அந்த சான்றிதழை கொடுத்து இருப்பேன் , பிரச்சனை இல்லாமலே பாஸ்போர்ட் கிடைத்திருக்கும் , அவர் தேவை இல்லை என்று நினைத்த ஒரு ஆவணத்தை மேலே உள்ள அதிகாரிகள் தேவை என்று சொல்லுகிறார்கள் ஏன் இந்த குழப்பம்? இதனால் பாதிக்கபடுவது மக்கள்தானே? ...

பாஸ்போர்ட் அலுவலக இணைய முகவரியில் நம்முடைய விண்ணப்பத்தின் தற்போதைய நிலைமையை தெரிந்து கொள்ளுவதற்கான வசதியை வைத்து இருக்கின்றனர் , ஆனால் அதை மட்டும் வைத்து நாம் எதுவும் செய்ய முடியாது ... அவர்கள் கைப்பட நமக்கு அனுப்பிய கடிதத்தை கொண்டு மட்டுமே நாம் அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் , அப்படி என்றால் அந்த வசதி எதற்கு? சரி அவர்கள் கடிதமாவது உடனே அனுப்ப வேண்டாமா?

எத்தனையோ படிப்பறிவில்லா மக்கள் வெளிநாட்டில் கூலி வேலை பார்க்க பாஸ்போர்ட் எடுக்க விண்ணபித்து உள்ளனர், அவர்களுக்கு இந்த வசதி தெரிவதில்லை, அவர்களுக்கு கடிதம் அனுப்பினால் மட்டுமே நிலவரம் தெரிய வரும் , எத்தனையோ பேர் எவ்வளவு அவசரத்தில் இருப்பார்கள் இந்த பாஸ்போர்ட்க்காக? இப்படி மெத்தனமாக இருந்தால் அவர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்புகள் ஏற்படும்?

பாஸ்போர்ட் வழங்குவது என்பது பெரிய சிக்கலான காரியம் அதில் நாட்டின் பாதுகாப்பே அடங்கி உள்ளது என்று நீங்கள் கூறினால் உங்களுக்கு பதில் கூற எனக்கு ஒரு படத்தில் விவேக் பேசும் " இத மட்டும் கரக்டா சுடுங்கப்பா,, ஆனா வீரப்பன் வந்தால் மட்டும் விட்டிடுங்க"( அப்ப வீரப்பன் சாகவில்லை)" என்ற வசனம்தான் ஞாபகம் வருகிறது ,

"எங்களையெல்லாம் இப்படி அலைய விடுங்கப்பா , ஆனா குண்டு வைக்கிறவன மட்டும் கரக்டா விமானத்துல ஏத்திகோங்க"

(புடிச்சிருந்தா வோட்டு போடுங்க....பிடிச்சிருந்தாலும் பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க)

6 comments:

இந்திரத் தேவன் said...

சொந்த இரத்தத்தை உறிஞ்சுறதில நம்ம ஆளுங்களை மிஞ்ச உலகத்திலேயே யாரும் இல்லைங்க. மனிதாபிமானமே இல்லாத மண்ணுக்கு புண்ணிய பூமின்னு பேரு.

Prasanna said...

//"எங்களையெல்லாம் இப்படி அலைய விடுங்கப்பா , ஆனா குண்டு வைக்கிறவன மட்டும் கரக்டா விமானத்துல ஏத்திகோங்க"//

I too had the same thought when I was roaming for the passport :)

துபாய் ராஜா said...

என்ன செய்ய அரசாங்க இயந்திரங்கள் லஞ்சம்ங்கிற ஆயில் போட்டாத்தானே வேலை செய்யுது.

இருமேனிமுபாரக் said...

பாஸ்போர்ட் ஆபீஸ் வாசலில் சும்மா போய் ஒரு நாள் நின்றுபார்த்தால் அங்குள்ள வண்டவாளம் தெரியும். ஆனால் எந்த மந்திரியும் அதிகாரியும் போய் பார்க்க மாட்டார்கள்.
-எங்களையெல்லாம் இப்படி அலைய விடுங்கப்பா , ஆனா குண்டு வைக்கிறவன மட்டும் கரக்டா விமானத்துல ஏத்திகோங்க". இது சூப்பருங்கோ.

Yoganathan.N said...

என்ன ஒரு பரதாபமான நிலை??? :(
மொதல்ல, இந்த அரசாங்கத்த மாத்தனும்...

WoodenToys said...

So, you have plans to become a political hero?! This is the first time I am seeing a blog in Tamil. Great blog and great thoughts Raja. I dont know how to type in Tamil here.

LinkWithin

Related Posts with Thumbnails