Followers

Copyright

QRCode

Thursday, February 25, 2010

சச்சினின் சாதனையும் என் நிம்மதியான உறக்கமும்

எது தேச பற்று?




தேச பற்று என்பது என்ன என்பதில் எனக்கு எப்பொழுதும் ஒரு சரியான புரிதல் இல்லை.நாம் நம் தேசத்தின் மீது வைத்துள்ள ஒரு அன்பு பாசம் வெறி இதெல்லாம்தானே தேச பற்று... சரி அதை எப்படி வெளிக்காட்டுவது.

நாம் உருவாகபடுத்துவது போல் நம் பாரதம் ஒரு உயிருள்ள பெண்ணாக இருந்தால் , அவளுக்கு சேலையோ சுடிதாரோ வாங்கி கொடுத்து நம் அன்பை காட்டி விடலாம். ஆனால் அப்படி இல்லையே!! o.k எது நம் பாரதம்?

பல விதமான மக்களையும் , கலாசாரங்களையும், பண்பாடுகளையும் இணைத்து விஸ்தாரமாக எழும்பி நிற்கும் நம் பாரதத்தின்பால் நான் கொண்டுள்ள அன்பை நான் எப்படி வெளிகாட்டுவது . வெளியில் இருந்து ஒரு அச்சுறுத்தல் வரும் வேளையில் நம் நாட்டை காக்க தோள் கொடுக்க சீறி பாய்ந்து செல்ல வேண்டுமா நான் ராணுவ உடையில்?

இல்லை ஏழை பங்காளர்கள் என்று கூறி கொள்ளும் அரசியல் வியாதிகள் ஏழைகளின் கண்ணீர் துடைக்க அன்றாடம் நடத்தும் அரசியல் போராட்டங்களில் பிரியாணியோ, பிராந்தியோ வாங்கி கொள்ளாமல் தினமும் கலந்து கொள்ள வேண்டுமா ?

லஞ்சமே கொடுக்க மாட்டேன் என்று வைராக்கியமாய் வாழ்ந்து என் பிறப்பு சான்றிதழ்கூட இன்னும் கைக்கு வராமல் இறைப்பை தேடி இந்தியனாய் வாழ வேண்டுமா?

கல்வியை விலை கொடுத்து வாங்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு வேலை வாய்ப்பே வாங்கி தராத அரசு கல்லூரியில் படித்து விட்டு இன்னமும் வேலைக்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தை எதிர்நோக்கி ஏமாந்து கொண்டு இருக்க வேண்டுமா?

இந்தியாதான் எனக்கு இருக்க இடம் உண்ண உணவு படிப்பு எல்லாம் கொடுத்தது இந்தியாவில் படித்த படிப்பை நான் இந்தியாவில்தான் பயன்படுத்துவேன் என்று எனக்கு வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பை உதறி தள்ளி விட்டு இப்பொழுது நான் போகும் காரின் சக்கரத்தை கூட வாங்க முடியாத சம்பளத்தில் இந்தியாவில் வேலை பார்த்து கொண்டு இருக்க வேண்டுமா?

நான் கட்டும் வருமான வரி நம் ஏழைகளின் துரயத்தை துடைக்கத்தான் பயன்பட போகின்றது என்று அப்பாவியாய் நம்பி என் வருமானத்திற்கு ஏற்ற சரியான வரியை கட்ட வேண்டுமா?

இல்லையேல் நம் நாட்டுக்குள்ளாகவே நடமாடும் ஊழல் பெருச்சாளிகளின் தோளை உறிக்க,நம் நாடு இப்படி அகண்ட பாதாளத்தில் விழுந்து கொண்டு இருப்பதற்கு பண வெறி பிடித்த இந்த அரசியல் வியாதிகள்தான் காரணம் என்ற உண்மையை மறந்து விடாமல் , தேர்தல் நடக்கும் போதெல்லாம் என் வோட்டு என்னும் சமூக ஆயுதத்தை அவர்கள் தரும் காசுக்கு விற்று விடாமல் அவர்களுக்கு எதிராய் பயன்படுத்தி இருக்க வேண்டுமா? இன்னும் எத்தனையோ வேண்டும்மாக்கள்!!!

ஐயையோ இதில் ஒன்றை கூட என் வாழ்கையில் நான் செய்யவில்லையே,, அப்ப நான் இந்தியன் இல்லையா? எனக்கு தேச பற்றே கிடையாதா?

ஒவ்வறு வருடமும் சுதந்திர தின விழாவை,, அன்று வெளியான புது படம் பார்த்து கொண்டாடுகிறேன், அது போதாதா நான் இந்தியன் என்று கூறி கொள்ள?

அட குடியரசு நாட்களில் எல்லாம் நெஞ்சில் தேசிய கொடியை குத்தி கொள்கிறேன் அதுவும் போதாத நான் தேச பற்று மிக்கவன் என்று கூற... காந்தி ஜெயந்தி அன்று தண்ணி அடிக்க மாட்டேன், அப்ப நான் தேசத்தின் மேல் மரியாதை கொண்டவன்தான?

இப்படி எப்படி எப்படியோ யோசித்து பார்த்தும் என் மனம் ஒத்துகொள்ள வில்லை எனக்கு தேச பற்று உண்டு என்று... அட என்னடா இது இன்னைக்கு நமக்கு தூக்கம் வராது போல இருக்கு என்று நான் கவலை பட்டு கொண்டு இருந்தேன்...

சரி தூக்கம்தான் வரவில்லை கொஞ்ச நேரம் டிவி பாப்போம் என்று தொலைகாட்சியை நோக்கினேன்... அதில் தேசிய கொடியை யாரோ வேகமாக ஆட்டி கொண்டு இருந்தார்கள்... என்ன வென்று பார்த்தால் சச்சின் நேற்று நடந்த ஆட்டத்தில் நூற்று ஐம்பது ஓட்டங்களை கடந்து இருந்தார்...


உடனே எனக்கு நெஞ்சில் ஒரு பெருமிதம் , ஆட்டத்தை தொடர்து பார்த்து கொண்டு இருந்தேன் , அவரின் ஒவ்வொரு அடியும் என்னை சந்தோஷத்தில் ஆழ்த்தி கொண்டு இருந்தது... அவர் நூற்று தொண்ணூற்று ஒன்பது ஓட்டங்களில் இருக்கும் பொழுது ஒரு படபடப்பு, உலகத்தில் எந்த நாட்டுகாரனும் செய்யாத ஒரு சாதனையை ஒரு இந்தியன் படைக்க போகின்றான். ஆண்டவா!! அவருக்கு துணையாய் இரு என்று மனம் அன்னிட்சையாய் கடவுளை வேண்டி கொண்டது...

அவர் இரு நூறு ஓட்டங்களை எட்டிய அந்த கணம் என் மனம் பெருமிதத்தில் பறந்து கொண்டு இருந்தது.... இந்த செய்தியை என் நண்பர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி கொண்டு இருந்தென். .. பின் இந்திய வெற்றி பெற்று சச்சின் ஆட்ட நாயகன் விருது வாங்கும் வரை ஒரு பரவச மன நிலையோடு பார்த்து கொண்டு இருந்தேன்...

ஆட்டம் முடிந்ததும் தலைப்பு செய்திகளில் நம் இந்திய முதல் குடிமகன்  சச்சினின் இந்த ஆட்டம் தேச பற்று உள்ள ஒவ்வொரு இந்தியனையும் பெருமிதத்தில் ஆழ்த்தி இருக்கும் என்று கூறி கொண்டு இருந்தார்.

அதை கேட்டவுடன் எனக்கு அன்று முழுவதும் என் மனதை குழப்பத்தில் சுற்ற வைத்து கொண்டு இருந்த நான் தேச பற்று உள்ள ஒரு இந்தியனா? என்ற கேள்வியின் விடை கிடைத்து விட்டது... சச்சினின் இந்த ஆட்டம் என்னையும் பெருமிதபடுத்தியது, எனவே குடியரசு தலைவர் கூறியது போல் நான் தேச பற்று மிக்க ஒரு இந்தியன்தான்....

எனக்கும் தேச பக்தி இருக்கு என்று அறிந்து கொண்ட சந்தோஷத்தில் என் குழப்பத்திற்கு விடை தேடி கொடுத்த சச்சினுக்கும் குடியரசு தலைவருக்கும் நன்றி சொல்லாமலே நிம்மதியாய் தூங்கி விட்டேன்...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails