இப்படி ஒரு படம் எடுக்கும் தைரியம் பாலாவுக்கு மட்டுமே வரும் , அதற்காக மட்டுமே அவரை பரதேசிக்காக பாராட்டலாம் , ஆனால் கையில் எடுத்த காரியம் வீரியமாக இருந்தாலும் அதை படைத்த விதத்தில் கொஞ்சம் என்ன அதிகமாகவே சறுக்கி விட்டார் பாலா ... எனக்கு பாலாவின் படங்கள் இதுவரை பிடித்ததே இல்லை , விளிம்பு நிலை மனிதர்களை பற்றி படம் எடுத்தாலும் அவர்களை தன மன அரிப்புக்கு ஊருகாயாகவே பயன்படுத்தி வந்திருக்காரே அன்றி இதுவரை அவர்களின் கஷ்டங்களை நேர்மையாக சொல்லியதே இல்லை , நான் கடவுளில் கூட தன கதாநாயகனின் வீரத்தை காட்டவே பிச்சைகாரர்கள் பயன்படுத்தபட்டார்கள்... சற்குணம் இயக்கிய வாகை சூட வா படத்தில் இருந்த நேர்மை கூட பாலாவின் எந்த படங்களிலும் இல்லை... பரதேசியும் அந்த வரிசையில் இணைந்து விட்டான்
இந்த படத்தில் பாலா ஒரு ஊரை காட்டுகிறார் , அந்த ஊர் மக்கள் சந்தோசமாக ஆடி பாடி திரிகிறார்கள் , ஹீரோவும் அவர்களோடு மாமன் மச்சானாக பழகி திரிகிறான் , ஆனால் திடீரென்று ஒரு காட்சியில் பந்தியில் அவனுக்கு சோறு வைக்காமல் அவமானபடுத்தி விரட்டி விடுகிறார்கள் , ஏன் என்ன காரணம் என்பதை நாமாகத்தான் புரிந்து கொள்ளவேண்டும் , அதை வெளிப்படையாக சொல்லும் தைரியம் அல்லது நேர்மை இயக்குனரிடம் இல்லை...
கண்காணி என்று ஒருவன் வருகிறான் , அவனுடைய வேலை தேயிலை தோட்டத்துக்கு அடிமைகளை பிடித்து கொடுப்பது , அவன் வந்து இனிக்க இனிக்க பேசியவுடன் ஒரு கிராமமே பஞ்சம் பிழைக்க அவனுடன் தூர தேசம் செல்ல முடிவெடுக்கிறது , அதற்க்கு அவசியம் என்னவென்பது சத்தியமாக எனக்கு புரியவில்லை , அங்கெ யாரும் அடிமை ஜீவனம் நடத்தவில்லை , கிராமத்தில் கிணறுகளில் , கண்மாயில் தண்ணீர் நிறைந்து இருக்கிறது , பஞ்சத்துக்கான அறிகுறியே அந்த கிராமத்தில் இல்லை , மாறாக ஒரு திருமண விழாவை வெகு விமர்சியைகாக கிராமமே கொண்டாடுகிறது , ஊருக்கே சோறு படைக்கிறார்கள் , குடித்து கும்மாளமிடுகிறார்கள் , இவர்கள் பஞ்சம் பிழைக்க தூர தேசம் போகவேண்டிய அவசியம் என்ன? அப்படியே பணம் சம்பாதிக்க என்று எடுத்து கொண்டாலும் குழந்தை குட்டிகளுடன் ஏன் போக வேண்டும் ? இந்த ஒரு கேள்வியிலேயே ஒட்டு மொத்த படமும் படுத்து விடுகிறது ... அந்த கிராமத்து மனிதர்களின் எள்ளல் நக்கல் கொண்டாட்டங்களின் பின்னால் இருக்கும் வறுமையை பார்க்கும் நமக்கு கடத்தும் விதமான வீரியமான காட்சி ஒன்று கூட படத்தில் இல்லை ..
அந்த பயணத்தின் பொது ஒருவன் நடக்க முடியாமல் சக்தியிழந்து கீழே விழுந்து உதவி கேட்டு அழுகிறான் , ஆனால் கண்காணி சொல்லிவிட்டான் என்ற ஒரே காரணத்துக்காக அவனை அப்படியே விட்டு விட்டு சென்று விடுகிறார்கள் , மற்றவர்களை விடுங்கள் அவனுடைய மனைவியே அவனை கை கழுவி விடுகிறாள் .. ஒருவர் கூட கண்காணியை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை ... அந்த காட்சியில் கண்காணியை சிலர் எதிர்த்து பேச , அப்பொழுதே கண்காணி தன்னுடைய கோர முகத்தை அவர்களிடம் காட்டுவதை போல இருந்தால் அந்த காட்சியின் வீரியம் இன்னும் கூடிஇருந்திருக்குமே ...பார்வையாளனுக்கு அவர்கள் மேல் ஒரு பரிதாபம் வர வேண்டும் என்பதற்காக இந்த காட்சியை இடைவேளை காட்சியாக வைத்திருக்கிறார் போல , ஆனால் பார்க்கும் நமக்குதான் ஒரு எழவும் வந்து தொலைய மாட்டேங்கிது ...
இடைவேளைக்கு பிறகு படம் அதிகபட்ச சோகத்துடன் நகருகிறது , ஆங்கிலேயர்கள் இந்தியர்களை எப்படி மாட்டை விட கேவலாமாக நடத்தினார்கள் , அதற்க்கு பணத்துக்கு ஆசைப்பட்ட சில இந்தியர்கள் எப்படி அவர்களுக்கு உதவினார்கள் என்பதை தனக்கே உரிய கொடூரமான காட்சியமைப்புகளின் மூலம் காட்டியிருக்கிறார் .... ஆனால் இதிலும் காமெடி என்றச் பெயரில் தன் சொந்த மன வக்கிரத்தை வெளிபடுத்தியிருக்கிறார் ... அந்த தேயிலை தோட்டத்தில் ஏதோ ஒரு விஷ காய்ச்சல் பரவ அங்கு ஒரு கிருஸ்துவ மிஷினரி டாக்டர் வருகிறார் , நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பதை விட்டு விட்டு அவர்களை மதம் மாற்றும் வேளையில் இறங்குகிறார் , மதம் மாறாதவர்களுக்கு சிகிச்சை கொடுக்க மறுக்கிறார் , கடைசியில் ஒரு குத்து பாட்டுக்கு நடனம் ஆடுகிறார் , அவரை பார்த்து ஒரு வெள்ளைக்காரன் நம்முடைய கன்கானியை விட மோசமானவன் இந்த ஆன்மீக கண்காணி என்று சொல்லுகிறான் , என்னதான் சுவை கம்மியாக இருந்தாலும் வாழை இழையில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது யாராவது ஒரு ஸ்பூன் மலத்தை உங்கள் இழையில் வைத்தால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது அந்த காட்சி ... அப்படி ஒரு காட்சி அமைப்பதற்கு தேவையோ , கட்டாயமோ படத்தில் இல்லை , இருந்தும் வலிந்து திணித்திருக்கிறார்.
கிளைமாக்ஸ் மட்டுமே படத்தில் அதகளம் , அதர்வா தன்னுடைய குடும்பத்தை கட்டி பிடித்து அழும் போது அங்கெ ஒவ்வொரு பார்வையாளனையும் தன குடும்பத்தை நினைத்து பார்க்க வைத்து நம் நெஞ்சு குழியை அடைக்க வைத்து விட்டார்... ஆனால் அதர்வா ஏன் அவ்வளவு சத்தமாக அழுகிறார் என்றுதான் தெரியவில்லை , சேதுவில் கடைசியில் விக்ரம் ஒரு பார்வை பார்ப்பாரே ஆயிரம் அழுகை சொல்லாத சோகத்தை அந்த பார்வை சொல்லிவிடும் , அப்படியான ஒரு வாய்ப்பை பாலா இந்த கிளைமேக்ஸ் காட்சியில் வீணடித்திருக்கிறார் ... அந்த காட்சியில் பின்னணி என்ற பெயரில் வாசித்திருக்கிறார் பாருங்கள் ஒரு வாசிப்பு , யோவ் G.V.பிரகாஷ் நீயெல்லாம் நல்லா வருவ ... பல காட்சிகளில் இவரின் இசை கடுப்பை கிளப்புகிறது , இரண்டாம் பாதியில் கொஞ்சம் முழித்து கொண்ட கதாசிரியரை திரும்பவும் குழிக்குள் தள்ளும் வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார் G.V.பிரகாஷ் ...
மொத்தத்தில் இந்த பரதேசி அரைகுறையாக அதீத உணர்சிகளோடு ஏழை/ ஒடுக்கப்பட்ட /தாழ்த்தப்பட்ட /சமூகத்தால் புறக்கணிக்க பட்ட மக்களை பற்றி பாலாவால் எடுக்கப்பட்ட , நிஜ வாழ்க்கையில் அப்படிப்பட்ட மனிதர்களை சந்தித்தே இராத அவர்களின் கஷ்டங்களை காது கொடுத்து கேட்க கூட நேரமில்லாத அறிவு ஜீவி அப்பாடக்கர்களால் பாராட்டப்படும் இன்னுமொரு படம் அவ்வளவே
5 comments:
இந்த கதையைத்தான் ஏற்கனவே அங்காடித்தெருவில் பார்த்தோமே! அதிலாவது பாசிடிவ் அப்ரோச் இருக்கும். இதில் அதுவும் இல்லை. ஒரு 4 பேர் சேர்ந்து கொண்டு 400 கொத்தடிமைகளை வேலி இல்லாமல் மேய்ப்பது இயலுமா! எனக்கு படம் பிடிக்கவில்லை.
அப்பாடக்கருன்னா என்ன அர்த்தம்?
@karthikeyan
இந்த பாயிண்ட் எனக்கு தொணவில்லையே ... நீங்கள் சொல்வதை போல படத்தில் ஏகபட்ட ஓட்டைகள் ... படம் சாதாரணமான படம் , பார்க்கலாம் என்று சொன்னால் கூட ஏற்று கொள்ளலாம் , ஆனால் இங்கே பலரும் இதை 100 வருட தமிழ் சினிமாவிலேயே வந்த மிக சிறந்த படம் என்று சொல்லும்போதுதான் கடுப்படிக்கிறது ...
அப்பறம் ஸார் ரொம்ப நாள் ஆகிவிட்டது , நல்லா இருக்கீங்களா?
@ sornamithiran
ஹி ஹி .. ஒரு ஸ்வீட் ஸ்டாலே ஸ்வீட் சாப்பிடுகிறதே ஆச்சரியக்குறி!!!
நல்லா இருக்கேன் தல.. ஆணிதான் ஜாஸ்தி ஆயிடுச்சி. இனிமேல் அடிக்கடி வரேன். நீங்களும் பாப்பா வந்ததும் இங்கிட்டு லீவ் விட்டுடீங்க போல.. எல்லோரும் நலம்தானே!
Post a Comment