வணக்கம் நண்பர்களே ரொம்ப நாட்களாகவே இப்படி ஒரு தொடர் இந்த வலைப்பூவில் எழுத வேண்டும் என்று ஆசை , இன்று ஆரம்பித்து விட்டேன். இனி வாரவாரம் ஏதாவது ஒரு பிரபலம் பற்றி அவர்களை பற்றிய என்னுடைய பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். முதல் வாரம் எனக்கு பிடித்த ஒரு சினிமா பிரபலத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் , ஆனால் இந்த தொடரில் சினிமா பிரபலங்கள் மட்டும் இல்லாமல் எனக்கு தெரிந்த எல்லா துறைகளிலும் இருக்கும் பிரபலங்களை பற்றியும் எழுத முயற்சிக்கிறேன்
உலகநாயகனை பற்றி எழுதி பல நாட்களாகிவிட்டது. இன்று காலையில் என் நண்பனுக்கும் எனக்கும் ஒரு சின்ன வாக்குவாதம் நடந்தது கமலை பற்றி , கமல் தன கலைபயணத்தில் நிறைய விசயங்களை தவறவிட்டிருக்கிறார் , அவர் கொஞ்சம் முயன்றிருந்தால் ரஜினியை விட பெரிய வசூல் சக்கரவர்த்தியாக ஜொலித்திருக்க முடியும் என்று கூறினான். அதை கேட்டபொழுது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது , ஆனால் யோசித்து பார்த்த பொழுது அது உண்மைதானோ என்று தோன்றுகிறது , கமல் ஆரம்பம் முதலே கொஞ்சம் வித்தியாசமான நடிகனாகவே இருந்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் ஒரு சாக்லெட் பாயாக தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருந்தார் , இந்தியாவிலேயே அப்பொழுது அவரை போன்ற இளமையான அழகான அதே சமயம் நடிக்க தெரிந்த நடிகர் யாரும் கிடையாது , அந்த காலகட்டத்தில் அவரை பிடிக்காத இளம் பெண்களே கிடையாது , ஆனால் அன்றைய கமலை ரசித்த அதே பெண்கள் இன்றைய கமலை அந்நியமாகவே பார்கிறார்கள். காரணம் உச்சத்தில் இருக்கும் போதே என்னுடைய பாதை இதுவல்ல என்று அவர் வேறு பாதையில் பயணிக்க தொடங்கியதுதான்.
அதே போல 8௦ களின் இறுதியில் கமல் ஆக்சன் ரூட்டிலும் அதிரடியாக வெற்றிகளை குவித்தார் , சத்யா , விக்ரம் , சகலகலா வல்லவன் , அபூர்வ சகோதரர்கள் என்று அவர் நடித்த ஆக்சன் படங்கள் அனைத்தும் இன்றும் மக்களால் விரும்பபடகூடியவையாகவே இருக்கின்றன. மற்ற நடிகர்கள் போல ஆக்சன் கைகொடுத்ததும் அதே பாணியில் படங்கள் செய்யாமல் , ஆக்சன் ஹீரோவாக , வசூல் சக்ரவர்த்தியாக தன்னை நிரூபித்த அதே காலகட்டத்தில் அவர் குணா , புன்னகை மன்னன் , உன்னால் முடியும் தம்பி என்று வேறு பரிமாணத்திலும் பயணித்தார். அவர் செய்த நல்ல விசயமும் அதுதான் , அவர் செய்த தப்பான விசயமும் அதுதான் . ஆக்சன் ரூட்டில் மட்டும் அவர் பயணித்திருந்தால் நமக்கு குணா , மகாநதி போன்ற படங்கள் எதுவும் கிடைத்திருக்காது , ஆனால் அவர் இன்றைய ரஜினியை போல இந்திய அளவில் ஒரு அசைக்கமுடியாத வசூல் மன்னனாக வலம் வந்துகொண்டிருப்பார்.
இந்த இடத்தில் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது ஒரு நடிகனின் வெற்றி தோல்வியை அவனின் மார்கெட் வேல்யூ மட்டுமே தீர்மானிக்கிறதா? இல்லை வேறு காரணிகள் ஏதாவது இருக்கிறதா? இந்த கேள்விக்கு ஒரு தீர்க்கமான பதிலை யாராலும் சொல்ல முடியாது. அது சினிமாவை பற்றிய அவரவரின் பார்வையை பொறுத்தது. சினிமா என்பது வெறும் வியாபாரம் மட்டுமே என்று எடுத்துகொண்டால் கமல் ஒரு முட்டாள் என்றுதான் நினைக்க தோன்றும் , ஆனால் சினிமாவை தொழிலாக நினைக்காமல் அந்த கால இலக்கியங்கள் , நாட்டுபுற பாடல்களை போல நம் சமகால கலாச்சாரத்தின் குறியீடாக நம் பிற்கால சந்ததிக்கு நாம் விட்டு செல்லும் கலையாக பார்த்தால் கமல் என்ற கலைஞனின் சாதனை புரியும்.
சினிமா என்றாலே வில்லனை புரட்டி எடுத்து அவன் அம்மாவிடம் குடித்த பாலை கக்க வைக்கும் ஹீரோயிசம் , பழிக்கு பழி வாங்குதல் , நாட்டை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் "ஒன் மேன் ஆர்மி ஹீரோ" என்று சினிமா என்றால் இதுதான் என்ற பிம்பம் நம்மையும் மீறி வலுக்கட்டாயமாக நம் மூளையில் திணிக்கப்பட்ட பொழுது மகாநதி , குணா போன்ற படங்கள் மூலம் இதுவும் சினிமாதான் என்று புரிய வைத்து கொஞ்சமும் சளைக்காமல் மாற்று முயற்சிகளை தொடர்ந்து இன்று இதுதான் சினிமா என்று புரிந்து கொள்ளுமளவுக்கு நம் ரசனையை மாற்றிய சில சினிமா கலைஞர்களில் கமலுக்குத்தான் முதலிடம். சிலர் சொல்லலாம் கமல் செய்த புதுமைகள் எல்லாம் ஏதோ ஒரு வெளிநாட்டு படங்களின் காப்பியே அவர் ஒரு சிறந்த கோப்பி பேஸ்ட் கலைஞன் என்று , இருக்கட்டுமே அதனால் என்ன குறைந்து விட்டது? இன்று கோடம்பாக்கத்துக்குள் நுழைய ஆசை படும் இளைஞர்கள் எல்லோருமே ஹீரோயிச கதைகளை ஒதுக்கிவிட்டு புதுசாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையோடு வருகிறார்களே , அதை உருவாக்கியது கமல் போன்ற சிலர் அன்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இங்கு விதைத்த விதைகள்தான். நீங்கள் சொல்லுவது போல அது திருட்டு விதையாவே இருந்தாலும் அதனால் தமிழ் சினிமா அடைந்த பலன்களை யாராலும் மறுக்கமுடியாது. கமலும் மற்றவர்களை போல அந்தந்த காலகட்டங்களுக்கு ஏற்ற டெம்ப்ளேட் கதைகளுக்குள் சிக்கியிருந்தால் நாம் இன்னமும் ஒரே பாட்டில் பணக்காரனாகும் ஹீரோக்களை விசிலடித்து ரசித்து கொண்டிருப்போம்.
இன்றும் அவர் தான் சார்ந்த சினிமாவின் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றத்துக்காக முயன்றுகொண்டேதான் இருக்கிறார். இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் சினிமாவில் டிஜிட்டல் என்டர்டைன்மென்ட் தொழில்நுட்பத்தை இங்கு அறிமுகபடுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார். நம் முன்னோர்கள் கட்டிய வீட்டை நல்ல வாடகைக்கு விட்டு பிழைப்பது புத்திசாலித்தனம்தான் ஆனால் அதே வீடு பல காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அதை மெருகேற்றிக்கொண்டே இருக்க வேண்டும் , இல்லை என்றால் நாளடைவில் பாழடைந்து யாருக்கும் பயனற்றதாகி விடும் . இங்கே பலரும் சினிமாவை பயன்படுத்தி சம்பாதித்துகொண்டிருக்கும் போது அதை செப்பனிடும் வேலையை கமல் போன்ற ஒரு சிலர்தான் செய்கிறார்கள்.கமல் என்னும் கலைஞன் மூலம் நான் கற்று கொண்ட பாடம் இதுதான்
இன்றும் அவர் தான் சார்ந்த சினிமாவின் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றத்துக்காக முயன்றுகொண்டேதான் இருக்கிறார். இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் சினிமாவில் டிஜிட்டல் என்டர்டைன்மென்ட் தொழில்நுட்பத்தை இங்கு அறிமுகபடுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார். நம் முன்னோர்கள் கட்டிய வீட்டை நல்ல வாடகைக்கு விட்டு பிழைப்பது புத்திசாலித்தனம்தான் ஆனால் அதே வீடு பல காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அதை மெருகேற்றிக்கொண்டே இருக்க வேண்டும் , இல்லை என்றால் நாளடைவில் பாழடைந்து யாருக்கும் பயனற்றதாகி விடும் . இங்கே பலரும் சினிமாவை பயன்படுத்தி சம்பாதித்துகொண்டிருக்கும் போது அதை செப்பனிடும் வேலையை கமல் போன்ற ஒரு சிலர்தான் செய்கிறார்கள்.கமல் என்னும் கலைஞன் மூலம் நான் கற்று கொண்ட பாடம் இதுதான்
நான் மேலே சொல்லிய விசயங்களை யார் வேண்டுமானாலும் மறுக்கலாம் , எதிர்வாதம் செய்யலாம் ஆனால் அவர்களுக்குள்ளும் சினிமா பற்றிய புரிதலில் ஒரு ரசனை மாற்றம் ஏற்பட்டதில் கமல் படங்களுக்கும் ஒரு பெரிய பங்கு இருந்திருக்கும் என்பதை அவர்களால் மறுக்கமுடியாது.