Followers

Copyright

QRCode

Thursday, January 6, 2011

என் அன்பு தோழியே ...( நினைவு நாடாக்கள் -- பாகம் 1 )


எனக்கு கல்யாணமாம் ... இதை என் அப்பா என்னிடம் சொன்னதும் எனக்கு முதலில் ஞாபகம் வந்தது அவள்தான் ... அவளுக்கு என்று ஒரு பெயர் உண்டு ... ஆனால் அது இங்கே வேண்டாம் ... அவளை அவள் என்றே கூப்பிடுவோம் ... அவள் அப்படி ஒன்றும் பெரிய அழகி இல்லை , ஆனால் என்னை எப்பொழுதும் அவளை சுற்றியே நினைக்க  வைத்துக்கொண்டே இருக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு அவள் முகத்திலோ, இல்லை அவள் சிரிப்பிலோ , அவள் குரலிலோ,  ஏதோ ஒன்றில் இருந்தது ... எந்த பெண்ணிடமும் இல்லாத அது எது என்று கண்டுபிடிப்பதில் வைரமுத்து போல கடைசி வரை முயன்றும் தோற்று  விட்டேன் .. இது எல்லாம் சேர்ந்ததுதான் அவள் ...

அவள் சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னால்தான் என் வாழ்வில் நுழைந்தால், ஆனால் நானே அப்பொழுது நினைத்து பார்க்கவில்லை என் வாழ்வில் மிக பெரிய தாக்கத்தை உண்டு பண்ண போகிற பெண் இவள் என்று... முதல் ஆறு மாதம் அவள் நட்பு மழை சாரளாய்  கூட என்னுள் அடிக்கவில்லை ... சத்தியமாய் அப்பொழுது நினைத்துக்கூட பார்க்கவில்லை அது பின்னாளில் அடைமழையாய் என் வாழ்வில் அடித்து கொண்டே இருக்க போகிறது என்பதை... எங்களுக்குள் முதல் அறிமுகம் எப்பொழுது தெரியாது .. ஆனால் நினைவில் இருக்கும் முதல் அறிமுகம் உங்களோட ஃபோன் நம்பர் கொடுங்க என்று அவள் கேட்ட அந்த நொடியும் , அன்று மாலையே என் தொலைபேசியில் ஒலித்த அவள் குரலும்தான் ...

நீண்ட வருடங்களுக்கு பின்னர் ஒரு பெண் குரல் என் தொலைபேசியில் நல்லா இருக்கீங்களா? என்று கேட்கிறது ... அதுதான் அவள் என்னுடன் பேசிய முதல் தொலைபேசி உரையாடல் .... அரைமணி நேரம் பேசினால் அவளை பற்றி,,, வள்ளுவர் சொல்லியதை போல அன்று என் செவிக்கு நல்ல உணவு ...

அப்பொழுது அவள் கணிப்பொறியியல் இறுதிவருடம் படித்து கொண்டு இருந்தாள்  ... அதனால் அவளுக்கு என்று தனியாக தொலைபேசி இருக்கவில்லை ... அவள் குடும்பம் கீழ்தட்டு நடுத்தர வர்க்கம் ... எனவே அவள் அப்பாவின் தொலைபேசியில் அவர் இல்லாத போது மட்டுமே என்னுடன் பேசுவாள் ... இதில் மிகவும் கஷ்டபட்டு போவது நானே ... காரணம் நான் நினைத்த மாத்திரத்தில் அவளுடன் பேச இயலாது , ஒவ்வொரு நாளும் அவள் எப்பொழுது பேசுவாள் என்று காத்திருக்க ஆரம்பித்தேன் ...


அவள் பேச்சில் எப்பொழுதும் குறும்பு அதிகம் இருக்கும் ... அதை விட நட்பு இன்னும் அதிகம் இருக்கும் ... அவள் ஏன் என்னுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறாள் என்று எனக்கு புரியவில்லை , அவளிடம் இதை கேட்கவும் மனதில்லை , ஆனால் அவளிடம் பேசிய கொஞ்ச நாட்களிலேயே அவளை பற்றி முழுவதும் புரிந்தது ... அந்த மனம் உண்மையான தன்னை காயபடுத்தாத நட்பை விரும்புகிறது என்பது ... காரணம் அவள் வளர்ந்த சூழல் அப்படி ...ரொம்பவும் கண்டிப்புடன் வளர்க்க பட்ட பெண் அவள் ... எத்தனை கண்டித்தாலும் வாலிபம் நம் மனதில் ஆசைகளை தூவி செல்ல மறப்பதில்லையே ... அதிலும் எதிர்பால் இனத்தின் மேல் ஒரு இனம் புரியா ஈர்ப்பு அந்த வயதில் எல்லாருக்கும் வந்து விடுமே ... அப்படிதான் அவளுக்கும் , ஆனால் அவளுக்கு ஆண்களின் நட்பின் மேல் நம்பிக்கை இல்லை, பெரும்பாலும் ஆண்கள் நட்பை காதலில் முடிக்கவே ஆசைபடுகின்றனர் என்பது அவள் எண்ணம் ... அவளுக்கு காதலில் நம்பிக்கை இருந்தாலும் தன் குடும்பத்தின் மேல் பாசம் அதை விட அதிகம் ஆனால் நான் ஏதோ ஒருவகையில் அவளிடம் நம்பிக்கையை உண்டு பண்ணி இருக்கிறேன் இவன் எப்பொழுதுமே நான் உன்னை காதலிக்கிறேன் என்று மனதில் ஆசையோடு வந்து தன்னை காயபடுத்த மாட்டான் என்று ....அவளுக்குள் அந்த நம்பிக்கை எப்படி வந்தது என்று நான் கடைசி வரை கேட்கவும் இல்லை ...

தினமும் தொலைபேசியிலும் எப்பொழுதாவது நேரிலும் என்னுள் நட்பு மழை பொழிந்து கொண்டு இருந்தாள் அவள் ... திடீரென்று ஒரு வாரமாய் அவளிடம் இருந்து அழைப்பே இல்லை, முதலில் எனக்கு ஒன்றும் பெரியதாய் தோன்றவில்லை என்றாலும்  ஒரு வாரத்தில் என் மனம் அவளுடன் பேச ஏக்கம் கொண்டு அழைந்தது .. துணிந்து அவள் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தேன் .. எதிர் முனையில் அவள் அப்பா ... எனக்கு போனை துண்டிக்க மனம் இல்லை , அவள் பெயரை சொல்லி இருக்கிறாளா என்று கேட்டேன் ... ஒரே வார்த்தையில் அந்த முனையில் இருந்து பதில் அப்படி யாரும் இங்கே இல்லை என்று  வந்தது , உடனே அழைப்பும் துண்டிக்கபட்டது ... அந்த அழைப்போடு சேர்ந்து எங்கள் நட்பும் துண்டிக்கபட்டதாகவே அப்பொழுது நான் உணர்ந்தேன்.... ஆனால் 


(தொடரும்)


 (இந்த தொடர் என் மனதில் நீண்ட நாட்களாய் இருந்த ஒரு குழப்பத்தை  எழுத்தின் மூலம் என் மனதில் இருந்து இறக்கி வைப்பதற்காக நான் எடுக்கும் ஒரு சின்ன முயற்சி.. நல்ல எழுத்தை உங்களுக்கு தர கண்டிப்பாய் முயற்சிக்கிறேன் இந்த தொடரில் ... நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில்

     

4 comments:

Anonymous said...

அட..முதல் வடை

Anonymous said...

அனுபவங்கள் ஸ்வாரஸ்யமாக இருந்தன

கலையன்பன் said...

ஆக, ஒரு காதல் (சோகக்) கதை என்று
நினைக்கிறேன். தொடருங்கள்...
நட்பு, காதல் முறிந்ததா, தொடர்ந்ததா?
அழைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆனால்... என்று தொடரும்
போட்டுவிட்டீர்களே...
அடுத்(த)து என்ன?

"ராஜா" said...

நன்றி சதீஷ் அண்ணே மற்றும் கலையன்பன் ...

LinkWithin

Related Posts with Thumbnails