Followers

Copyright

QRCode

Friday, March 2, 2012

திராவிட குடி(தமிழ் )நாடும் , டோனி சேவாக் மங்காத்தாவும்



இனிமேல் குடித்து விட்டு   வண்டி ஓட்டினால் நான்கு வருடம் சிறைதண்டனையாம், மத்திய அரசு கொண்டு வரப்போகும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வரும்போது இந்த சட்டம் செயல்படுத்தபடுமாம். மேலும் குடித்து விட்டு வண்டி ஒட்டுபவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதமும் மூன்று மடங்கு அதிகமாகுமாம். இதன் மூலம் விபத்தில் உயிரழப்பவர்கள் மற்றும் படு காயமடைபவர்களுக்கு தரப்படும் இழப்பீடு அதிகரிக்கப்படுமாம்.  எல்லாம் சரிதான் , இதனால் குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் , அவர்களின் பிழையால் ரோட்டில் எதிரில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் கொடுமைகளும் குறையும். ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ,மத்திய அரசு கொண்டு வரப்போகும் இந்த திட்டம் "திராவிட" தமிழ்நாட்டில் அமலாக்கப்படுமா? அப்படி அமலாக்கபட்டால் குடிப்பதே தவறு என்றால் வீதிக்கு வீதி கடையை விரித்து வைத்து மக்களுக்கு சாராயம் சப்ளை  செய்யும் அரசாங்கத்துக்கு என்ன தண்டனை கொடுக்கபோகிறது ? தமிழ் நாட்டில் பொதுவாக ஒரு எழுதபடாத சட்டம் இருக்கிறது அது என்னவென்றால் குடிப்பது தவறு இல்லை. ஆனால் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது மாபெரும் தவறு ... குற்றம் செய்பவனை விட அதை செய்ய தூண்டுபவனுக்கே தண்டனை அதிகம் என்று சொல்லுகிறது நம் சட்டம் , அப்படி என்றால் குடிப்பவனை விட அவனுக்கு ஊத்தி கொடுக்கும்(நன்றி கேப்டன்)  நம் அரசாங்கத்துக்குதானே  அதிக தண்டனை கொடுக்க வேண்டும். அதற்க்கு மத்திய அரசு ஏதாவது சட்டம் கொண்டு வருமா? 

சரி குறைந்தபட்சம் டாஸ்மாக் கடைகளில் வண்டி நிறுத்த பார்க்கிங் வசதி இருக்ககூடாது , யாராவது வண்டியில் வந்து சரக்கு கேட்டால் தரக்கூடாது , மீறி அவனுக்கு சரக்கு கொடுத்தால் அந்த ஊழியருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று இப்படி ஏதாவது உருப்படியான சட்டமாவது கொண்டு வருமா? ஏனென்றால் குடுத்து விட்டு வண்டி ஓட்டுவது மாபெரும் தவறு என்று அறிவுறுத்தப்படும் நம் ஊரில்தான் எல்லா டாஸ்மாக் பார்களிலும் வண்டியை நிறுத்த விசாலமான பார்க்கிங் வசதியும் கூடவே  இருக்கும் .கேரளாவில் சில இடங்களில் நீங்கள் வண்டியில் வந்தால் பிரைவேட் பாரில் கூட உங்களுக்கு சரக்கு தரமாட்டார்கள். அதே போல இந்த சட்டங்கள் எல்லாம் கொண்டு வருவது மக்களை தண்டிக்கவா? இல்லை அவர்களிடம் இருந்து அபராதம் என்ற பெயரில் காசு புடுங்கவா? இல்லை அவர்களை திருத்தவா? கண்டிப்பாக திருத்த மட்டும் இல்லை என்பது நம்மூர்  குடிமக்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். நம்மூரில் ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வாரங்களிலும் எல்லா டாஸ்மாக் கடைகளின் அருகிலும் காக்கிசட்டைகாரர்களை மப்டியில் பார்க்கலாம். அவர்கள் வேலையே எவனாவது அந்த கடைக்குள் வண்டியோடு நுழைகிறானா என்று நோட்டம் விட்டு சரியாக அவன் கடையை விட்டு வெளியே வரும்போது போதையோடு அவனை அமுக்குவதுதான். அவர்களுக்கு தேவை அந்த மாத கணக்கிற்கு ஒரு கேஸ். இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே மக்களை திருத்துவதுதான் என்றால் நான் மேலே சொல்லியதை போல வண்டியில் வரும் யாருக்கும் சரக்கு தரக்கூடாது என்று திருத்தம் கொண்டுவரலாம் , இல்லை கடைக்கு பக்கத்தில் நிற்கும் காக்கிசட்டைகள் , யாராவது வண்டியோடு கடைக்குள் நுழைந்தால் அப்பொழுதே அவனை அமுக்கி திருப்பி அனுப்பிவைக்கலாம். அதைவிட்டு விட்டு அவன் நன்றாக குடித்து விட்டு வரும்பொழுது அவனை பிடித்து பைன் போடுவது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை. நீங்களே சரக்கும் விப்பீங்கலாம் , நீங்களே அங்க பைக் நிறுத்த இடமும் கொடுப்பீங்கலாம் , குடித்து விட்டு    பைக்குள வந்தா நீங்களே அபராதமும் போடுவீங்கலாம்.. என்ன கொடுமை போலீஸ்கார் இது? 


அதே போல இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் , டாஸ்மாக் கடைகள் இருக்கும் சாலைகளில் ஒளிந்து நிற்கும் காக்கிசட்டைகளை , தனியார் நடத்தும் உயர்ரக மதுக்கடைகள் இருக்கும் சாலைகளில் பார்க்கவே முடியாது. இன்னும் சில ஊர்களில் சில தனியார் கடைகளில் குடித்து விட்டு காக்கி சட்டையிடம் மாட்டினால் நீங்கள் அந்த கடைகளில் கட்டிய பில்லை காட்டினால் காக்கிசட்டை கேஸ் பதிவதில்லை , மாறாக அம்பதோ நூறோ வாங்கிவிட்டு உங்களை அனுப்பிவிடுவார்கள்.அவர்கள் கடையில் மட்டும் சாராயத்தில் ஆல்கஹாலுக்கு பதில் சந்தனம் கலந்திருக்கும் போல. அதே போல இந்த குடித்து விட்டு  வண்டி ஓட்டுவது என்பது நம்மை போன்ற பைக்கில் போகும் நடுத்தவர்க மக்களுக்கு மட்டுமே  குற்ற செயல் போல , எவனாவது குடித்து விட்டு காரை ஒட்டி சென்றால் அவனை நிறுத்தி பரிசோதிப்பது கூட கிடையாது.வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டன் என்பது போல கார் வச்சிருக்குறவன் குடிக்க மாட்டன் என்று நம்மூர் காக்கி சட்டை நம்பிவிடுகிறது போல.  எல்லாரும் சமம் என்பதுதான் திராவிட கோட்பாட்டின் அடிப்படையாம், ஆனால் அந்த திராவிட கட்சிகள் மாறி மாறி ஆண்ட தமிழ்நாட்டின் "குடிமக்களிடையே" இத்தனை ஏற்றதாழ்வுகள். வாழ்க திராவிடம்..... வளர்க திராவிட கட்சிகள்....

டோனி vs சேவாக் 


இந்திய அணி வீரர்கள் எதிரணியோடு மோதும்போது கூட நாம்தான் ஜெயித்தாக வேண்டும் என்ற வெறியோடு மோதுவார்களோ இல்லையோ , தங்களுக்குள் கோஸ்டி சண்டை போடும்போது மட்டும் தான் தான் பெரிய ஆள் என்று நிரூபித்தாக வேண்டும் என்ற வெறியோடு எப்போதும் இருப்பார்கள் , வாய்ப்பு கிடைக்கும்போது அந்த வெறியை தீர்த்து கொள்வார்கள். கவாஸ்கர் காலத்திலிருந்து கங்குலி வரைக்கும் இதுதான் நடந்து வந்திருக்கிறது. இப்பொழுது டோனி காலம். இம்முறை தோனியின் ஈகோவில் பலியாகியிருப்பது சேவாக் மட்டும் இல்லை இந்திய அணியின் எதிர்காலமும்தான். இந்திய அணியின் எதிர்காலம் கருதி அணிக்குள் சுழற்சி முறை கொண்டுவருகிறேன் என்று டோனி ஆரம்பித்து வைத்ததுதான் அணிக்குள் நடந்து வரும் மங்காத்தா ஆட்டத்தின் ஆரம்பம். மூத்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆட்டத்தில் ஓய்வு அளித்து அவர்களுக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தருகிறேன் என்று அதற்க்கு சப்பை கட்டு கட்டினார் தோனி. அதற்க்கு அவர் எடுத்து வைத்த காரணம் காமெடியின் உச்சம். மூத்த வீரர்கள் யாருக்கும் ஒழுங்காக பில்டிங் செய்ய தெரியவில்லை , அவர்களால் ஒவ்வொரு ஆட்டத்திலும் இருபது ஓட்டங்கள் அதிகம் சென்று விடுகிறது என்று. 

இப்படி சொன்னால் யாருக்குதான் கோபம் வராது , அதுவும் சாதனை வீரர்கள் சச்சினையும் சேவாக்கையும் அப்படி கூறினால் கிரிகெட் கிரௌண்டில்  திரியும் நாய்க்கு கூட கோபம் வரும். சேவாக் தன கோபத்தை  மறைமுகமாக வெளிபடுத்த , இன்று ஆசிய கோப்பைக்கான அணியில் இருந்து வெளியேற்றபட்டார். இது குறித்து ஒன்றும் சொல்லாத சச்சின் ஆசிய கோப்பைக்கான அணியில் இடம்பிடித்து விட்டார். சேவாக் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் அவர் போர்மில் இல்லை என்பதுதான் என்றால் சச்சின் , டோனி உட்பட ஒழுங்காக விளையாடாத அத்துணை வீரர்களும் நீக்கப்பட வேண்டுமே. பொதுவாக ஆசிய அணிகளுக்கு எதிராக   மிக சிறப்பாக ஆடக்கூடிய இந்திய வீரர் சேவாக் , தொனிக்கும் அவருக்கும் இடையே இருக்கும் பனிபோருக்காக மட்டும் அவரை  அணியில் இருந்து நீக்கினால்  அது அணிக்கும் தோனிக்குமே நஷ்டம் . டோனி உண்மையிலேயே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டால்  அவர் உடனே  செய்ய வேண்டிய    விஷயம் கேப்டன்   பதவியில்  இருந்து உடனே விலகுவதுதான். 


மற்ற வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும் பில்டிங் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் அவர் , முதலில் தான் இதில் ஏதாவது ஒன்றையாவது ஒழுங்காக செய்கிறோமா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டாமா ? களத்தில் அவர் கோட்டை விடும் ஸ்டெம்பிங்களை ஒப்பிட்டால் செவாக்காலும் சச்சினாலும் எதிரணிக்கு கிடைக்கும் இருபது ரன்கள் ஜுஜூபி. அவர் எந்த பந்தையும் விடாமல் ஒழுங்காக கீப்பிங் செய்தாலே போதும் பைஸ் மூலம் எதிரணிக்கு கிடைக்கும் உதிரி எண்ணிக்கை குறையும். எனவே இது இரண்டையும் மாற்றிக்கொள்ள முடியாத அவர் அணியின் எதிர்காலம் கருதி தன்னுடைய கீப்பிங் இடத்திற்கு அணியில் சுழற்சி முறை கொண்டுவருவாரா? அதே போல பேட்டிங் ஒழுங்காக செய்யாதவர்களை  எல்லாம்  அணியில் இருந்து நீக்க  வேண்டும் என்றால் முதலில் அவர்தான்  தூக்கி எறியப்பட வேண்டும் என்பதற்கு  ஆஸ்திரேலியா தொடரில் அவர் எடுத்த ஓட்டங்களே சாட்சி. 

அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச  வேண்டும் என்று நினைக்கும் டோனி முதலில் தனக்கும் வயதாகி விட்டது என்பதை உணர வேண்டும். இப்பொழுது இருக்கும் இந்திய அணிக்கு தோனியால் ஒரு பிரயோசனமும் இல்லை , மாறாக அவரது  ஈகோவால்  அணிக்கு பிரச்சனை  மேல்  பிரச்சனைதான்  வந்து கொண்டிருக்கிறது ... இதை டோனி உடனே உணர்ந்து தானாக விலாகாவிட்டால் மற்ற இந்திய கேப்டன்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான் அவருக்கும்... மற்றவர்களின் திறமையால் புகழின் உச்சியை தொட காரணமாக இருந்த அவரின் அதிர்ஷ்டம் இப்பொழுது மெல்ல மெல்ல அவருக்கு குறைந்து கொண்டே வருகிறது , அது முற்றிலும் அவரை விட்டு விலகி , அடி மேல் அடி வாங்கி அவமானப்பட்டு அணியை விட்டு வெளியேறுவதை விட அந்த புகழ் கொஞ்சமேனும் இருக்கும் இன்றைய காலகட்டத்திலேயே தானாக விலகுவதுதான் புத்திசாலித்தனம்.  

Wednesday, February 29, 2012

என்னை பாதித்த பிரபலங்கள் - கமல்

வணக்கம் நண்பர்களே ரொம்ப நாட்களாகவே இப்படி ஒரு தொடர் இந்த வலைப்பூவில் எழுத வேண்டும் என்று ஆசை , இன்று ஆரம்பித்து விட்டேன். இனி வாரவாரம் ஏதாவது ஒரு பிரபலம் பற்றி அவர்களை பற்றிய என்னுடைய பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். முதல் வாரம் எனக்கு பிடித்த ஒரு சினிமா பிரபலத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் , ஆனால் இந்த தொடரில் சினிமா பிரபலங்கள் மட்டும் இல்லாமல் எனக்கு தெரிந்த எல்லா துறைகளிலும் இருக்கும் பிரபலங்களை பற்றியும் எழுத முயற்சிக்கிறேன் 



உலகநாயகனை பற்றி எழுதி பல நாட்களாகிவிட்டது. இன்று காலையில் என் நண்பனுக்கும் எனக்கும் ஒரு சின்ன வாக்குவாதம் நடந்தது கமலை பற்றி , கமல் தன கலைபயணத்தில் நிறைய விசயங்களை தவறவிட்டிருக்கிறார் , அவர் கொஞ்சம் முயன்றிருந்தால் ரஜினியை விட பெரிய வசூல் சக்கரவர்த்தியாக ஜொலித்திருக்க முடியும் என்று கூறினான். அதை கேட்டபொழுது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது , ஆனால் யோசித்து பார்த்த பொழுது அது உண்மைதானோ என்று தோன்றுகிறது , கமல் ஆரம்பம் முதலே கொஞ்சம் வித்தியாசமான நடிகனாகவே இருந்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் ஒரு சாக்லெட் பாயாக தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருந்தார் , இந்தியாவிலேயே அப்பொழுது அவரை போன்ற இளமையான அழகான அதே சமயம் நடிக்க தெரிந்த நடிகர் யாரும் கிடையாது , அந்த காலகட்டத்தில் அவரை பிடிக்காத இளம் பெண்களே கிடையாது , ஆனால் அன்றைய கமலை  ரசித்த அதே பெண்கள் இன்றைய கமலை அந்நியமாகவே பார்கிறார்கள். காரணம் உச்சத்தில் இருக்கும் போதே என்னுடைய பாதை இதுவல்ல என்று அவர் வேறு பாதையில் பயணிக்க தொடங்கியதுதான். 


அதே போல 8௦ களின் இறுதியில்  கமல் ஆக்சன் ரூட்டிலும் அதிரடியாக வெற்றிகளை குவித்தார் , சத்யா , விக்ரம் , சகலகலா வல்லவன் , அபூர்வ சகோதரர்கள் என்று அவர் நடித்த ஆக்சன் படங்கள் அனைத்தும் இன்றும் மக்களால் விரும்பபடகூடியவையாகவே இருக்கின்றன. மற்ற நடிகர்கள் போல ஆக்சன் கைகொடுத்ததும் அதே பாணியில் படங்கள் செய்யாமல் , ஆக்சன் ஹீரோவாக , வசூல் சக்ரவர்த்தியாக தன்னை நிரூபித்த அதே காலகட்டத்தில் அவர் குணா , புன்னகை மன்னன் , உன்னால் முடியும் தம்பி என்று வேறு பரிமாணத்திலும் பயணித்தார். அவர் செய்த நல்ல விசயமும் அதுதான் , அவர் செய்த தப்பான விசயமும் அதுதான் . ஆக்சன் ரூட்டில் மட்டும் அவர் பயணித்திருந்தால் நமக்கு குணா , மகாநதி போன்ற படங்கள் எதுவும் கிடைத்திருக்காது , ஆனால் அவர் இன்றைய ரஜினியை போல  இந்திய அளவில் ஒரு அசைக்கமுடியாத வசூல் மன்னனாக வலம் வந்துகொண்டிருப்பார்.  

இந்த இடத்தில்  எனக்கு ஒரு கேள்வி  எழுகிறது   ஒரு நடிகனின் வெற்றி தோல்வியை அவனின் மார்கெட் வேல்யூ மட்டுமே தீர்மானிக்கிறதா? இல்லை வேறு காரணிகள்  ஏதாவது இருக்கிறதா?  இந்த கேள்விக்கு ஒரு தீர்க்கமான பதிலை யாராலும் சொல்ல முடியாது. அது சினிமாவை பற்றிய அவரவரின் பார்வையை பொறுத்தது. சினிமா என்பது வெறும் வியாபாரம் மட்டுமே என்று எடுத்துகொண்டால் கமல் ஒரு முட்டாள் என்றுதான் நினைக்க தோன்றும் , ஆனால் சினிமாவை தொழிலாக நினைக்காமல் அந்த கால இலக்கியங்கள் , நாட்டுபுற பாடல்களை  போல நம் சமகால கலாச்சாரத்தின் குறியீடாக நம் பிற்கால சந்ததிக்கு நாம் விட்டு செல்லும் கலையாக பார்த்தால் கமல் என்ற கலைஞனின் சாதனை புரியும். 

சினிமா என்றாலே வில்லனை புரட்டி     எடுத்து  அவன் அம்மாவிடம் குடித்த பாலை கக்க வைக்கும் ஹீரோயிசம் , பழிக்கு பழி வாங்குதல் , நாட்டை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் "ஒன் மேன் ஆர்மி ஹீரோ"   என்று  சினிமா என்றால் இதுதான் என்ற பிம்பம்   நம்மையும் மீறி வலுக்கட்டாயமாக நம் மூளையில் திணிக்கப்பட்ட பொழுது மகாநதி , குணா போன்ற படங்கள் மூலம் இதுவும் சினிமாதான் என்று புரிய வைத்து கொஞ்சமும் சளைக்காமல் மாற்று முயற்சிகளை தொடர்ந்து இன்று இதுதான் சினிமா என்று புரிந்து கொள்ளுமளவுக்கு  நம் ரசனையை மாற்றிய சில சினிமா கலைஞர்களில் கமலுக்குத்தான் முதலிடம். சிலர் சொல்லலாம் கமல் செய்த புதுமைகள் எல்லாம் ஏதோ ஒரு வெளிநாட்டு படங்களின் காப்பியே அவர்  ஒரு சிறந்த கோப்பி பேஸ்ட் கலைஞன் என்று , இருக்கட்டுமே அதனால் என்ன குறைந்து விட்டது? இன்று கோடம்பாக்கத்துக்குள் நுழைய ஆசை படும் இளைஞர்கள் எல்லோருமே ஹீரோயிச கதைகளை ஒதுக்கிவிட்டு புதுசாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையோடு வருகிறார்களே , அதை உருவாக்கியது  கமல் போன்ற சிலர் அன்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இங்கு விதைத்த விதைகள்தான். நீங்கள் சொல்லுவது போல அது திருட்டு  விதையாவே இருந்தாலும் அதனால் தமிழ் சினிமா அடைந்த பலன்களை யாராலும் மறுக்கமுடியாது. கமலும் மற்றவர்களை போல அந்தந்த காலகட்டங்களுக்கு  ஏற்ற டெம்ப்ளேட் கதைகளுக்குள் சிக்கியிருந்தால் நாம் இன்னமும் ஒரே பாட்டில் பணக்காரனாகும் ஹீரோக்களை விசிலடித்து ரசித்து கொண்டிருப்போம்.  


இன்றும் அவர் தான் சார்ந்த சினிமாவின் தொழில்நுட்பம்   சார்ந்த முன்னேற்றத்துக்காக முயன்றுகொண்டேதான் இருக்கிறார். இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் சினிமாவில் டிஜிட்டல் என்டர்டைன்மென்ட் தொழில்நுட்பத்தை இங்கு அறிமுகபடுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார். நம் முன்னோர்கள் கட்டிய வீட்டை நல்ல வாடகைக்கு விட்டு பிழைப்பது புத்திசாலித்தனம்தான் ஆனால் அதே வீடு பல காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அதை மெருகேற்றிக்கொண்டே இருக்க வேண்டும் , இல்லை என்றால் நாளடைவில் பாழடைந்து யாருக்கும் பயனற்றதாகி விடும் . இங்கே பலரும் சினிமாவை பயன்படுத்தி சம்பாதித்துகொண்டிருக்கும் போது அதை செப்பனிடும் வேலையை கமல் போன்ற ஒரு சிலர்தான் செய்கிறார்கள்.கமல் என்னும் கலைஞன் மூலம் நான் கற்று கொண்ட பாடம் இதுதான் 

நான் மேலே சொல்லிய விசயங்களை யார் வேண்டுமானாலும் மறுக்கலாம் , எதிர்வாதம் செய்யலாம் ஆனால் அவர்களுக்குள்ளும் சினிமா பற்றிய புரிதலில் ஒரு ரசனை மாற்றம் ஏற்பட்டதில் கமல் படங்களுக்கும் ஒரு பெரிய பங்கு இருந்திருக்கும் என்பதை அவர்களால் மறுக்கமுடியாது.


LinkWithin

Related Posts with Thumbnails