Followers

Copyright

QRCode

Friday, September 23, 2011

எங்கேயும் எப்போதும் – போலி மனிதாபிமானம்








சரியாக 8 வருடங்கள் முன்பாக , நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன்,  திருமங்கலத்தில் ஒரு சர்சில் சுவிசேஷ வழிபாட்டு கூட்டம் ஒன்று நடந்தது. எங்கள் குடும்பம் மிக தீவிரமான கடவுள் கடவுள் பக்தி உடைய குடும்பம்... எனவே நாங்கள் எல்லாரும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்தோம், ஆனால் அது ஒரு வெள்ளிக்கிழமை என்பதால் என்னுடைய அப்பாவும் , அம்மாவும் விடுப்பு எடுத்து கலந்து கொள்வதில் சிக்கல் , எனவே என்னை மட்டும் அனுப்பிவைத்தார்கள்.. என்னுடன் என் பங்காளி முறை அண்ணன் தம்பி , தங்கைகள் சிலர் வந்திருந்தனர் , எங்களை வழிநடத்துவதற்க்கு எங்களுடன் சித்தி ஒருவரும் வந்திருந்தார்... திருமங்கலம் செல்லவேண்டும் என்றாள் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் சென்று அங்கிருந்து மதுரை வண்டி பிடித்து செல்ல வேண்டும்... நாங்கள் விருதுநகர் வண்டி பிடிக்க அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்திர்க்கு சென்றிருந்தோம்.. 


வரிசையாக இரண்டு தனியார் பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன, அதில் சந்திரா பேருந்தின் முன்பாக அந்த வண்டியின் டிரைவர் புகை பிடித்துக்கொண்டிருந்தார், அவரிடம் எந்த வண்டி முதலில் செல்லும் என்று கேட்டோம் , இந்த வண்டி கிளம்ப இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும்  அந்த ஜெயவிலாஸ் வண்டி இன்னும் ஐந்து நிமிடத்தில் சென்றுவிடும் என்று இன்னொரு வண்டியை காட்டினார் , அவர் காட்டிய  ஜெயவிலாஸ் வண்டியில் உக்கார இடம் இல்லை , எனவே ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் பாராவாயில்லை எண்டு சந்திரா வண்டியில் ஏறினோம். நானும் இன்னொரு அண்ணனும் டிரைவர் சீட்டின் பின் சீட்டில் அமர்ந்தோம் , எங்களுக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் எங்களுடன் வந்தவர்கள் அமர்ந்தனர்...  வண்டியில் ஓடிய டிவியில் எம்‌ஜி‌ஆர் ஏதோ ஒரு வடநாட்டு நடிகையின் ஜாக்கெட்டை பிடித்து கிழித்து கொண்டிருந்தார், நான் அதை ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்த பொது குடிக்க தண்ணி வேண்டும் என்று யாரோ கேட்க நான் இறங்கி தண்ணி வாங்க சென்றேன் , அப்பொழுது எதேச்சையாக ஜெயவிலாஸ் வண்டியை பார்க்க அங்கே வரிசையாக ஐந்து சீட்டுகள் காலியாக இருந்தன .  வண்டியில் ஏறியவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக இறங்கி விட்டிருந்தனர்.. நான் எங்கள் சித்தியிடம் அதை சொல்ல உடனே அனைவரும் இறங்கி ஜெயவிலாஸ் வண்டியில் காலியான இருக்கைகளில் அமர்ந்து விட்டோம்... அப்பொழுது எனக்கு தெரிந்த ஒரு நபர் சந்திரா வண்டியில் ஏறினார் , நான் அவரிடம் ஜெயவிலாஸ் வண்டிதான் முதலில் செல்லுமாம் , அங்கே உக்காரவும் இடம் இருக்கிறது என்று சொல்லி அதில் ஏற சொன்னேன் , ஆனால் அவரோ அந்த வண்டியில் டிவி இல்லை , நான் டிவி பார்த்துக்கொண்டே சந்திரா வண்டியில் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு சந்திரா வண்டியில் ஏறி கொண்டார்...



நாங்கள் சரியாக 1 மணி 15 நிமிடங்களில் திருமங்கலம் சென்று விட்டோம், அப்பொழுது மணி காலை 9:30 , சுமார் பதினொன்று மணி அளவில் அந்த சர்ச் வாசல் முன்பாக ஒரு கார் வந்து நின்றது , அதிலிருந்து என் அப்பாவும் அவர் நண்பரும் இறங்கினார்கள் , என் அப்பாவின் முகத்தில் ஏதோ ஒரு பதட்டம் , உள்ளே வந்ததும்  அவர் கண்கள் என்னை தேடி அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது ,  என்னை பார்த்த அந்த நொடியில் அவர் மயக்கம் அடைந்து விழுந்து விட்டார்... எனக்கு ஒன்றும் புரியவில்லை , பிறகு என் அப்பாவின் நண்பர் சொல்லிதான் எனக்கு தெரிந்தது  , காலையில் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் சென்ற சந்திரா வண்டியும் , செங்கோட்டையில் இருந்து அருப்புக்கொட்டை வந்துகொண்டிருந்த அரசு பேருந்தும் அருப்புக்கோட்டையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் நேருக்கு நேராக மோதி பெரிய விபத்து நடந்திருக்கிறது.. நாங்களும் அதே நேரத்தில்தான் விருதுநகருக்கு சென்றதால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பயம் , நானும் அந்த பேருந்தில் சென்றிருப்பனோ என்று.. அப்பொழுது செல்போன் வசதி எல்லாம் கிடையாது எனவே உடனே எங்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை, விபத்து நடந்த இடத்திர்க்கும் சென்று  பார்பதற்க்கு பயம், எனவே ஒரு வாடகை காரை எடுத்து கொண்டு என் அப்பா திருமங்கலத்திற்கே வந்துவிட்டார்.. 





என் அப்பா கண்விழித்தவுடன் ஒரு எஸ்‌டி‌டி பூத் சென்று எங்கள் வீட்டிற்கு  ஃபோன் போட்டு என் அம்மாவுடன் பேச சொன்னார் , நான் பேசிய ஹேலோ என்ற வார்த்தையை கேட்டவுடனே  என் அம்மா உடைந்து அழ ஆரம்பித்து விட்டார்கள்... அந்த அழுகையிலேயே தெரிந்தது கடந்த இரண்டு மணிநேரமாக அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று... விபத்து நடந்த வண்டி நாங்கள் ஏறி இறங்கிய அதே சந்திரா வண்டிதான், வண்டியின் டிரைவர் சீட்டிலிருந்து அடுத்த நாலு சீட்டு வரைக்கும் அமர்ந்திருந்த அத்தனை பேரும்  சம்பவ இடத்திலேயே உயிரழந்து விட்டனர்.. அந்த டிரைவரின் உடல் டி‌வி பெட்டிக்குள் சொருகி மிகவும் கொடூரமான முறையில் கிடந்திருக்கிறது... அன்று முழுவதும் எங்கள் ஊரே உறைந்து போயிருந்தது... அதுவரை செய்தியாக மட்டுமே பார்த்த விபத்து , முதல்முறையாக  என் வாழ்க்கையை லேசாக  உரசி சென்றது.. அன்றிலிருந்து எந்த விபத்து நடந்தாலும் என் அம்மாவின் அழுகையும் , என் அப்பாவின் மயக்கமும்தான் என் ஞாபகத்திற்கு வருகிறது... 

சரி விசயத்திற்கு வருகிறேன் , நேற்று எங்கேயும் எப்போதும் படம் பார்த்தேன். அதிலும் ஒரு விபத்தைதான் மாறி மாறி காட்டியிருந்தனர் , அதை பார்த்தபொழுது என் அம்மாவின் அழுகை ஞாபகம் வந்ததா என்றாள் இல்லை எனக்கு எரிச்சல்தான் வந்தது...   அதற்க்கு காரணம் காலம்காலமாய் ஊனமுற்றவர்களை காட்டி பார்க்கும் நம்மை பரிதாபபடவைத்து தங்கள் கல்லாவை நிரப்பி  கொள்ளும் போலி மனிதாபிமான படைப்புகளில் வரிசையில் வந்து சேந்திருக்கும் இன்னொரு படம்தான் இது .. ஒரே வித்தியாசம் ஊனத்திற்கு பதிலாக விபத்து ...  தில்லாலங்கடி என்று ஒரு படம் , அதில் மனநிலை பிழன்ற குழந்தைகளின் மருத்துவசெலவுக்கு பணம் சேர்க்க ஹீரோ கொள்ளையடிக்கிறான், அதை நியாபடுத்த பல மனநிழைபிழன்ற குழந்தைகளை திரையில் காட்டுவார்கள், அதை பார்த்தவுடன் நமக்கும் ஒரு பரிதாப உணர்ச்சி உருவாகும் , அந்த பரிதாபம் அவர்களுக்காக உழைக்கும் அந்த ஹீரோவின் மேல் ஒரு மரியாதையாக மாறும்  , அதுவே அந்த படம் நமக்கு பிடித்துபோக ஒரு காரணமாகும் , நாமும் வெளியே நான்கு பேரிடம் சொல்ல அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி படம் பெரிய ஹிட்டாகி தயாரிப்பாளரின் கல்லா நிரம்பும் , ஹீரோவின் அடுத்த படம் சம்பளம் இரட்டிப்பாகும் , ஆனால் இவர்கள் யாரை வைத்து சம்பாதித்தார்களோ அந்த குழந்தைகளின் நிலமை அப்படியேத்தான் இருக்கும்... ரோட்டில் தன் குழந்தையின் உடலை கீறி அந்த ரத்தத்தை காட்டி பிச்சை எடுக்கும் வித்தைக்காரர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை , சொல்லபோனால் வித்தைக்காரன் வரும் பணத்தில் அந்த குழந்தைக்கும் செலவழிப்பான் ஆனால் இவர்கள்?






இந்த படமும் இப்படிதான் , படம் முடிந்து வெளியேவரும் பொது நம் ஞாபகத்தில் இருப்பது அந்த விபத்துதான் , இதற்க்கு முன் நாம் பார்த்த படித்த அல்லது நமக்கு நேர்ந்த விபத்துகள் நம் மனதில் உருவாக்கியிருக்கும் தழும்புகளில் கத்தி விட்டு ஆட்டியிருக்கிறது இந்த படம் , அதனால்தான் படம் முடிந்து வெளியே வரும்போது நம் மனம் வலிக்கிறது... அது மட்டுமே இந்த படத்தின் வெற்றி...  விபத்தை திரையில் காட்ட உழைத்திருப்பது மட்டுமே அவர்கள் வேலை , மற்றபடி அந்த காட்சி நம் மனதில் உருவாக்கும் வலிகளுக்கு அவர்களின் கற்பனையோ , உழைப்போ காரணம் இல்லை , இதற்க்கு முன் நாம் பார்த்த விபத்துகளின் பாதிப்பே காரணம்...  நியாயமாக பார்த்தால் இந்த படத்தின் மூலம் வரும் வருவாயில் பாதி மட்டுமே இவர்களுக்கு சொந்தம் , மீதியை இதுவரை நடந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு சமர்பிக்க வேண்டும்... ஆனால் இந்த போலி மனிதாபிமானிகள் அதை மட்டும் செய்யவே மாட்டார்கள்... ஆனால் நான் விபத்து குறித்த விழிப்புணர்வுடன் ஒரு நல்ல படத்தை இந்த சமூகத்திர்க்கு தந்துவிட்டேன் என்ற பெருமையை  மட்டும் சாகும் வரைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்...... இவர்களைத்தான் “லேட்டஸ்ட் மனிதாபிமானிகள் என்று நம் சமூகமும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடபோகிறது..  

 அனன்யா வரும் காதல் காட்சிகளுக்காக வேண்டுமானால் படத்தை ஒருமுறை பார்க்கலாம்... 



Monday, September 12, 2011

மங்காத்தாவும் நானும் , குரு பூஜைகளும் சில அப்பாவிகளும்





இதற்க்கு முன்னர் நான் அதிக முறை திரையரங்கிற்க்கு சென்று பார்த்த படம் படையப்பாதான் ... அந்த படம் வெளி வந்த காலகட்டம்தான்  எனக்கு சின்னதாக  மீசை அரும்ப  தொடங்கிய காலம்  , அதற்க்கு முன்பு நான் தியேட்டரில் சென்று  படம் பார்க்க வேண்டும் என்றாள் என்னுடைய மாமாக்கள் யாராவது அழைத்து சென்றால்தான் உண்டு ... ஒரு மாமா தீவிர ரஜினி ரசிகர் அவர் ரஜினி படம் எது வந்தாலும் என்னை அழைத்து சென்று விடுவார் ... தளபதி முதல் முத்து வரை அவர் புண்ணியத்தில்தான் எனக்கு தியேட்டர் தரிசனம்... அப்பொழுதெல்லாம் படம் பார்க்க போகிறோம் என்பதை விட , இடைவேளையில் ஐஸ் கிரீம் சாப்பிடலாம் என்பதுதான் அதிக சந்தோஷத்தை கொடுக்கும், அந்த ஐஸ் கிரீம் சுவைக்காகவே ரஜினி படம் வந்தால் எங்கள் மாமாவை நச்சரிக்க ஆரம்பித்து விடுவேன் .. அவரும் போனால் போகிறது என்று என்னை ஒரு முறை படத்திர்க்கு அழைத்து செல்வார்... அதே போல இன்னொரு மாமா கமல் ரசிகர் .. அவர் கமல் படம் எது வந்தாலும் அழைத்து சென்று விடுவார்... அப்பொழுதெல்லாம் ரஜினி படங்கள் அளவுக்கு கமல் படங்கள் எனக்கு ஈர்ப்பை கொடுத்ததில்லை , படத்தில் ரஜினியை யாராவது அடித்து விட்டாள் ,  அவர் எப்படியாவது  படம் முடிவதற்க்குள் அவர்களை அடி வெளுத்து விடுவார் ... நான் ரஜினி அவனை எப்பொழுது  அடிப்பார் என்ற ஆவலிலேயே தூங்காமல் படம் பார்ப்பேன் .. ஆனால் கமல் படங்களில் அவர் கடைசி வரை அடி வாங்கி கொண்டேதான் இருப்பார் ... அதனால் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாமல் தூங்கிவிடுவேன் ,,, அப்படி  நான் தூங்கிய படங்களில் ஒன்று சதிலீலாவதி ... அதை என் மாமா பார்த்து விட , சதிலீலாவதியோடு கமல் படம் பார்க்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன் ...


இப்படி எத்தனை நாளைக்குத்தான் படம் பார்க்க எங்கள் மாமாவையே நம்பி இருப்பது , நாமாக தனியாக படம் பார்க்க சென்றாள் என்ன என்று எனக்கு தோன்றிய பொழுது நான் பத்தாம் வகுப்பு சென்றிருந்தேன்... என்னுடைய நெருங்கிய நண்பனும் நானும் சேர்ந்து அதற்கான திட்டம் தீட்டினோம் எங்கள் ஊரில் அப்பொழுது வாலி என்று ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது , எங்கள் வகுப்பை சேர்ந்த சுரேஷ் என்பவன் அதை பார்த்து விட்டு அதன் கதையை ஏற்கனவே எங்களுக்கு சொல்லி இருந்தான்...  எங்களுக்கு கதை மீதெல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை , எப்படியாவது தனியாக ஒரு படம் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் எங்களின் அப்போதைய இலக்கு , அவன் சொல்லிய இன்னொரு விஷயம்தான் இந்த படத்தை தனியாக பார்த்தே தீருவது என்று எங்களை முடிவே செய்ய வைத்தது , அது டேய் இந்த படத்துல ஹீரோ ஒரு பாட்டுல சிம்ரன் ஜாக்கெட்டுக்குள்ள கைய விடுராண்டா என்பதுதான் ...  விடுமுறை நாட்களில் வீட்டிற்க்கு தெரியாமல் செல்ல முடியாது என்பதால் , பள்ளிக்கூடத்தை கட் அடித்து விட்டு செல்வது என்று முடிவு செய்து அதன்படியே ஒரு சுபயோக சுப தினத்தில் பள்ளிக்கு மட்டம் போட்டு வெற்றிகரமாக படமும்   பார்த்தாகி விட்டது ... அன்றிலிருந்து மனதிர்க்குள் பெரிய மனுஷ தோரணை வந்து விட ,எல்லா படங்களையும் தனியாகவே சென்று பார்க்க தொடங்கினேன் .... அப்படி பார்த்ததுதான் படையப்பா .

 முதல் தடவை பார்த்ததுமே  ரஜினியின் ஸ்டைல்  இரவு முழுவதும்  என்னை தூங்க விடவே இல்லை , கண்ணை மூடினால் விசுக் விசுக் என்று ரஜினி கையை சுற்றுவதுதான் ஞாபகம் வந்தது , எப்படா விடியும் என்று காத்திருந்து , அப்பாவின் பையில் இருபது ரூபாய் "ஆட்டைய" போட்டு , மறுநாள் படத்திர்க்கு சென்ற பின்னர்தான்  மனம் நிம்மதி அடைந்தது  , இப்படியாக ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து பதிமூன்று நாள் அந்த படம் பார்த்தேன் ... இருந்தும் ரஜினியின் ஸ்டைல் எனக்கு அலுக்கவே இல்லை , கடைசியில் தினமும்  பையில் காசு குறைவதை பார்த்து உஷாரான என் அப்பா காத்திருந்து கையில் காசோடு என்னை பிடிக்க அன்றோடு முடிந்து போனது எனக்கும் படையப்பாவுக்கும் இருந்த உறவு , அதன் பின்னால் பல வருடங்களுக்கு பின் டிவியில் படம் போடும்பொழுதுதான் மீண்டும் எனக்கு படையப்பா தரிசனம் கிடைத்தது ....  




அந்த படத்திர்க்கு பின் நீண்ட வருடங்கள் கழித்து ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்  அலுக்காமல் அடுத்து எப்பொழுது பார்க்கலாம் என்று படம் முடியும் போது நினைக்க வைக்கிறது இந்த மங்காத்தா.... இதுவரை எத்தனை முறை பார்த்தேன் என்றே தெரியவில்லை .... டெய்லி தண்ணி அடிக்கிறதுதான் தப்பு , எப்பொழுதாவது இப்படி தினமும் படம் பார்ப்பது தப்பே இல்லை , நான் கடைசியாக பார்த்த படம் எத்தன்... அதன் பின்னர் planet of apes பார்த்தேன்... வேறு தமிழ் படங்கள் எதுவும் பார்க்க தோன்றவில்லை , அதர்க்கெல்லாம் சேர்த்துதான் இப்பொழுது மங்காத்தா பார்த்து கொண்டிருக்கிறேன்... அதே போல டான்ஸ் ஷோ , ஃபோன் போட்டு மொக்கை போடுறது என்று எங்கு திரும்பினாலும் மொக்கைகளாகவே தெரிந்ததால் , சில வருடங்களாக  டிவியே பார்க்க பிடிக்கவில்லை , ஆனால் சன் டிவியில் மங்காத்தா பற்றி எந்த நிகழ்ச்சி போட்டாலும் விளம்பர இடைவேளை முதற்கொண்டு பார்த்து விடுகிறேன்... என் மனைவியே அஜீத் மேல இவ்வளவு தீவிரமான ஈடுபாடு எப்படி உங்களுக்கு வந்தது என்று ஆச்சரியமாக கேட்கிறாள்... அந்த அளவுக்கு இப்பொழுது மங்காத்தா ஃபீவர் பிடித்து அலைகிறேன்...


நான் மட்டும் இல்லை , ஒவ்வொரு அஜீத் ரசிகனும் ஏன் அவர் மேல் இவ்வளவு வெறியோடு இருக்கிறான் என்பதற்க்கு ஒரு பதிவில் நண்பர் ஒருவர் அருமையாக விளக்கம் அளித்திருக்கிறார் .. அஜீத் பற்றி நான் படித்த பதிவுகளில் மிக சிறந்த பதிவு இதுதான்... நீங்களும் படித்து பாருங்களேன் ...



அஜித்தை நான் ஏன் நேசிக்க ஆரம்பித்தேன் , எனக்குள் அந்த நேசிப்பு எப்பொழுது அளவு கடந்த பாசமாக மாறியது , எதுவரை நான் அந்த மனிதனை நேசிப்பேன் எல்லா கேள்விகளுக்கும் அந்த பதிவே பதில் சொல்லிவிட்டது ... அதன் ஒவ்வொரு வரிகளும் என் மனதில் இருப்பதை அப்படியே சொல்லுகின்றன ...


குருபூஜையும் அப்பாவி இளைஞர்களும் ..


நேற்று எங்கள் ஊரில் பெரிய கலவரம் ... ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த தலைவரின் குரு பூஜைக்கு அந்த ஜாதி இளைஞர்கள்  வண்டியில் கும்பலாக சென்று கொண்டிருந்த பொழுது வழியில் அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் கைகலப்பு ஆகிவிட , லத்தி சார்ஜ் நடத்தி இருக்கிறார்கள்... அதனால் பெரிய கலவரம் உருவாகும் சூழல் உருவாகிவிட  ,நேற்று மதியம் முழுவதும் கடைகள் அனைத்தும் மூடபட்டுவிட்டன... எங்கு திரும்பினாலும் மக்கள் பீதியுடனே இருந்தார்கள்... பொதுவாக எந்த  தலைவர்களின் குருபூஜை நடந்தாலும் எங்கள் ஊர் சிக்கி சின்னாபின்னமாகி விடும் .. காரணம் பசும்பொன் , பரமக்குடி இந்த இரண்டில் எங்கு   செல்ல வேண்டும் என்றாலும் அருப்புக்கொட்டையை தாண்டிதான் செல்ல வேண்டும்... குரு பூஜை நடக்கும் அந்த இரண்டு நாட்களில் சாதாரண மக்கள் வண்டியில் வெளியே எங்கும் செல்லவே முடியாது .... வரிசையாக டாடா சுமோவிலும் , வேனிலும் கொடியை கட்டி கொண்டு செல்லுவார்கள் ... அதிலும் வாகனத்தில் உள்ளே உக்கார இடம் இருந்தாலும் , வெளியே தொங்கி கொண்டேதான் செல்லுவார்கள்... இவர்களின் இந்த ஊர்வலத்தில் அந்த தலைவர்களுக்கு மரியாதை செய்ய செல்வதற்கான எந்த அறிகுறியும் இருக்காது .. மாறாக பாருங்கடா எங்க ஜாதி பலத்தை என்று அடுத்தவர்களுக்கு அவர்கள் ஜாதியின் கெத்தை காட்டுவதற்காக மட்டுமே இந்த குருபூஜைகள் நடக்கின்றன.... 


ரோட்டில் ஏதாவது ஒரு பெண் வண்டியில் சென்றாள் அவ்வளவுதான் விசில் அடிப்பதும்  , கெட்ட  வார்த்தையில் திட்டுவதுமாக அந்த பெண்ணை நாணி கூச செய்து விடுவார்கள் ... எனக்கு தெரிந்து அந்த தலைவர்களின் மேல் உண்மையிலேயே மரியாதை இருப்பவர்கள்  இப்படி அடாவடிதனம்  எதுவும் செய்ய மாட்டார்கள்.... நேற்று இரண்டு வாலிபர்கள் டாடா சுமோவின் கூரையில் அமர்ந்து கொண்டு சரக்கு அடித்து கொண்டே போகிற வருகிறவர்களை பார்த்து கத்தி கொண்டே சென்று கொண்டிருந்தனர் ... இதில் கொடுமை என்னவென்றால் போலீஸ்காரர்கள் வரிசையாக நின்று அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுதான்...  தமிழ்நாட்டில் ஜாதி பெயரை சொல்லி எண்ணவேண்டும் என்றாலும் செய்யலாம் என்னும் சூழல் உருவாகி விட்டது ... ஓட்டு அரசியல் நடக்கும் நம் நாட்டில் யாரும் இதை தட்டி  கேட்க போவதும் இல்லை... மாறாக இவர் ஆட்சியில் அவரும் , அவர் ஆட்சியில் இவரும் கலவரத்தை தூண்டி விட்டு எரியும் நெருப்பில் எண்ணை வார்த்து கொண்டிருக்கிறார்கள்... இவர்களின் அரசியல் விளையாட்டில் சிக்கி உயிரையும் வாழ்க்கையும் இழப்பது இவர்களால் மறைமுகமாக மூளை சலவை செய்யபட்ட குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த இந்த வாலிபர்கள்தான்.. நேற்று தமிழகம் முழுவதும் நடந்த கலவரத்தில் 8 பேர் உயிரிழந்து இருக்கிறார்களாம்... அவர்கள் கண்டிப்பாக அந்த தலைவருக்காக வந்திருக்கமாட்டார்கள் , சரக்குக்காகவும் ஒருநாள் பொழுதுபோக்கிர்க்காகவும் வந்து உயிரை விட்டு இருக்கிறார்கள்... ஆளும் கட்சிக்கு இடைஞ்சல் குடுப்பதர்க்காக எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டு அரங்கேற்றபட்ட கலவரம் இது என்று ஒரு பேச்சு அடிபடுகிறது , அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பு அதிகம்... எது எப்படியோ ஜாதியை காட்டி ஏமாற்றுபவர்களின் வாய்ஜாலத்திர்க்கு ஏமாறாமல் இளைஞர்கள் என்று சொந்தமாக சிந்தித்து செயல்படுகிறார்களோ அன்றுதான் இதுக்கெல்லாம்  விடிவுகாலம் பிறக்கும் ...    




LinkWithin

Related Posts with Thumbnails